Wednesday 28 November 2012

ஆறாம் திணை - 14

ந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும்  அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!
''மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க. அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய். இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.
தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள். 'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத்துவம். அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல நண்பரே... மருந்து!
நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.
அதேபோல, 'அதிகக் கொழுப்பு அமிலம் உள்ளதப்பா’ என அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட அமிழ்தம் - தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மைகொண்ட லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் உள்ளது. அதன் அற்புதங்களை உணர்ந்த 'வணிக விஞ்ஞானிகள்’ தேங்காய் எண்ணெயில் இருந்து 'மோனோலாரின்’ எனும் பொருளைப் பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிமை பெற்று, மாரடைப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு மருந்தாக விற்கின்றனர். ஆனால், நம் உள்ளூர் மருத்துவர்களோ, 'தேங்காயா... ம்ம்ஹூம்... ஆகவே ஆகாது’ என்று சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
நெல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து பெறப்படும் தவிட்டு எண்ணெய் நல்ல விஷயங்கள் பலகொண்டது. ஜப்பானியரில் பெரும்பான்மையர் இன்றும் உபயோகிப்பது தவிட்டு எண்ணெய்தான். தேவையான அளவுக்கு அத்தனை நல்ல கொழுப்பு அமில வகையறாக்களுடன் இதயத்துக்கு நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள்கொண்ட இந்த எண்ணெய் உள்ளூர் சரக்கு. ஆனாலும், பெரும் உயரத்துக்கு இன்னும் வரவில்லை.
ஆனால், கசக்கிப் பிழியாமல், 'ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து புண்ணாகி வரும் 'மங்குனி எண்ணெய் வகையறாக்கள்’ ஆன ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள் விற்பனையில் பின்னி எடுக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன?
பசுமைப் போராளி வந்தனா சிவா சொல்லும் உறையவைக்கும் உண்மை என்ன தெரியுமா?
'சூரியகாந்தி, சோயா எண்ணெய் வகைகளைக் களம் இறக்கும் வணிகப் போட்டியில் அமெரிக்காவால் திட்டமிட்டுக் கழுத்தறுக்கப்பட்டதுதான் நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகளின் சந்தை!'
எண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள். பல நூறு ஆண்டுகளைக் கடந்த நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகள் இன்றைக்கு நொண்டி அடிக்கக் காரணம், எண்ணெ யைச் சுற்றி இருக்கும் சந்தை அரசியல் தான். 'ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது’ என்று கூவுகிறார்களே, ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானதுதான். ஆனால், அதன் விலை என்ன; நம் ஊர் நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெயின் விலை என்ன? நம் ஊர் செக்கில் ஆட்டிய எண்ணெயே ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் ஏன் வெளிநாட்டு ஆலிவ் ஆயிலை இறக்குமதி செய்து 10 மடங்கு விலை கொடுத்துச் சாப்பிட வேண்டும்? இது தான் கேள்வி. சரி, இந்த நிலை அப்படியே தொடர்ந்தால் என்ன ஆகும்? உள்ளூர் சோடா போய்... கோக், பெப்ஸி வந்த கதைதான் உருவாகும்.
லுவான இதயத்துக்குக் கொஞ்சம் தவிட்டு எண்ணெய், கொஞ்சம் நல்லெண்ணெய், கொஞ்சம் தேங்காய்எண்ணெய் கலந்து அளவுடன் கொஞ்சமாகப் பயன்படுத்துங்கள் என்கிறார்கள் இதய நோய் வல்லுநர்கள். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், ஒமேகா-3, ஒமேகா-6 எல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளே உங்களுக்குத் தரும். அதே சமயம், சில குறிப்புகளை மட்டும் மனதில்வையுங்கள்.
அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட எண்ணெயை நீண்ட நேரம் வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள். தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் இந்தப் பிரிவு.
குறைந்த புகை எண் கொண்ட எண்ணெயை (றீஷீஷ் sனீஷீளீமீ ஜீஷீவீஸீt) மிளகாய்ப் பொடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடுங்கள். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் இந்தப் பிரிவு.
 எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்துங்கள். அதேபோல், வறுக்கும்போது, எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ... அந்த அளவுக்குக் கொழுப்பு அமிலம் அதிகம் உருவாகி உங்கள் ரத்தம் இதயம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
- பரிமாறுவேன்...

Wednesday 21 November 2012

ஆறாம் திணை - 13

மிழ்ப் பாரம்பரிய சமையல் கலையை ஒரு தவம்போல் நேசித்த செஃப் ஜேக்கப் கடந்த வாரம் இறந்தது பலரையும் உலுக்கி இருக்கலாம். அதில், எல்லோரையும் அதிர்ச்சி அடையவைத்தது அவருடைய வயது... 38. தன் உடலைக் கச்சிதமாகக் கவனித்துக்கொண்டவர்தான் ஜேக்கப். ஆனாலும், எப்படி மாரடைப்பு? வேலையை அளவுக்கு அதிகமாக அவர் நேசித்ததே அவருக்கு எமன் ஆயிற்று என்கிறார்கள் அவருடைய நெருக்கமான நண்பர்கள்.
 உலகெங்கும் இப்போது 30-40 வயதில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது சகஜமாகிவிட்டது.  அலங்காரப் பதவிகளாலும், சம்பள உயர்வுகளாலும் எல்லோரையும் போட்டியாளர்களாக்கி ஓடவைக்கிறது முதலாளித்துவம். வேலை... வேலை என்று ஓடுகிறோம் மூச்சுத் திணற. ஒரு கட்டத்தில் குடும்பத்தையே கவனிக்க முடியாத சூழலை வேலை ஏற்படுத்தும்போது, மன அழுத்தமும் நெருக்கடிகளும் சூழ்கின்றன. மூச்சுத் திணறலோடு மூச்சடைப்பும் சேரும்போது கதை முடிந்துவிடுகிறது. ஒரே ஓர் உண்மையை மனதில் வையுங்கள் தோழர்களே... வாழ்வதற்காகத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கை இல்லை!
தேன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்பு. வெள்ளைச் சீனியைத் தொலைக்க விரும்புவோரின் முதல் தேர்வு. தேனும் இனிப்புதானே என்போருக்கு ஒரு செய்தி. இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக் கூறுகள்கொண்ட அமிழ்தம் அது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரணமாக வெள்ளைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல தேன் முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று நோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
ஒவ்வொரு சீஸனில் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் சமயம், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம் என்கிறது சித்த மருத்துவ மலை வாகட நூல்கள். நியூஸிலாந்தில் உள்ள மனுக்கா தேன், உலகப் பிரசித்தியான தேன். 100 கிராம் 3,000 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படும் இந்தத் தேன் எங்கள் நாட்டின் அமிழ்தம் என்கிறது அந்த அரசு.
எல்லாம் சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?
ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி அதாவது 10 கிராம் தேன் எடுத்துக்கொள்ளலாம். தனியாகவும் சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லியோடோ, இஞ்சியோடோ இணைத்தும் சாப்பிடலாம்.  ஆனால், தண்ணீரில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல்பூர்வமானவை அல்ல. ஒரு விஷயம் முக்கியம். அதிக வெப்ப நிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைக்கும். மற்றபடி, தேன் அற்புதம்!    
'சரி, எனக்கு சர்க்கரை வியாதி... நான் தேன் சாப்பிடலாமா?’  என்று கேட்பீர்கள் என்றால், வேண்டாம். கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பினும், அதன் இனிப்பு அளவான கிளைசமிக் லோட் சில வகை தேனில் அதிகம் என்பதால், தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே, சர்க்கரை நோய்க்காரர்களுக்கு ஒரு செய்தி. தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ... எதுவாக இருந்தாலும் சரி... சர்க்கரை வியாதி வந்தால், கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இனிப்பு என்றாலே, தேனும் பனை வெல்லமும்தான் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சின்ன வயதில் இருந்தே சொல்லி வளருங் கள்!
 - பரிமாறுவேன்...

Wednesday 14 November 2012

ஆறாம் திணை - 12

றுத்த முந்திரி, ஏலக்காய் டீ அல்லது டிகாஷன் காபி போன்ற எதுவுமே இல்லாமல், அரசின் உயர்நிலைக் கூட்டம் ஒன்று ஒரு நாள் முழுவதும் நடக்கும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள் அல்லவா? தமிழக அரசின் திட்டக் குழு கடந்த வாரம் நடத்திய கூட்டம் எனக்கும் அப்படித்தான் ஆச்சர்யத்தைத் தந்தது. முழுக்க சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவு களும் சுக்கு காபியும் பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்... சிறுதானியங்களின் மீட்சி, தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி - பயன்பாட்டை ஊக்குவிப்பது. திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தாஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இதில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார். கூட்டத்துக்கு என்னையும் கூப்பிட்டு இருந்தார் கள். உபயம்: 'ஆறாம் திணை’. பேச்சோடு நிற்காமல், சிறுதானிய விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுப்பது முதல் ரேஷன் கடைகளில் அனைத்து வகை சிறுதானியங்களும்  கிடைப்பது வரையிலான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால், இந்தக் கூட்டம் ஒரு மறு மலர்ச்சிக்கு வித்திடும். 'ஆறாம் திணை’க்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும்!
 பால் பொருட்கள் மேல் இந்தியர்களுக்கு இருக்கும் காதல் மேல் மரண அடியாக விழுந்து இருக்கிறது இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொல்லி இருக்கும் செய்தி. இந்தியாவில் விற்கும் பாலில் 70 சதவிகிதம் கலப்படம் என்கிறது அந்தச் செய்தி. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், பாலில் குழாய்த் தண்ணீரில் தொடங்கி சோப்புத் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச், ஹீபார்மலின் என என்னஎன்னவோ கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'பால் சாப்பிட்டால் டாக்டர் செலவு குறையும்’ என்ற பிரசாரமே 'அக்‌ஷய திருதியைக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும்’ என்று தங்கம் விற்பவர்கள் செய்யும் உட்டாலக்கடி போலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள். தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் தேவை இல்லை என்கின்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள். 'அடடா! அப்படிப் பால் சாப்பிடலைன்னா, கால்சியத்துக்கு எங்கே போவது... புரதம் எப்படிக் கிடைக்கும்?’ என உரத்துக் கேட்கும் மரக்கறி விரும்பிகளுக்கு ஒரு செய்தி... ஒருவேளை உங்களுக்கு நல்ல பால் கிடைத்தால், சித்த வைத்தியம் சொல்வதுபோல, பால் பொருட்களை இப்படிச் சாப்பிடுங்கள்.
நீர் கருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பார் தம் பேருரைக்கின் போமே பிணி. அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை அதிக நீர் சேர்த்துப் பெருக்கியும் நெய்யை நன்கு உருக்கியும் உணவில் சேர்ப்பவன் பெயரைச் சொன்னாலே, நோய் தூரப் போகும்.
உண்மையில், பாலைக் காட்டிலும் பல வகைகளில் உசத்தியானது மோர். மோர் ஒரு 'புரோபயோடிக்’ (Probiotic) பானம். நல்லது செய்யும் பல நுண்ணுயிர்களை மோர் உடலுக்குத் தரும். பால் பிடிக்காதவருக்கும் மோர் பிடிக்கும். புரதம், கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, பி12 எல்லாம் தந்து வயிற்றுப் புண்ணை வராது தடுக்கும்; அடிக்கடி வந்து தொல்லை தரும் வாய்ப்புண்ணுக்கும் முற்றுப்புள்ளிவைக்கும். வயிற்றுப்போக்கு நோய்க்கான சிகிச்சையில் மோர் ஒரு மருந்தும்கூட!
செல்போன் பயன்பாடு தொடர்பாக முக்கியமான ஓர் எச்சரிக்கை வந்து இருக்கிறது. அனுப்புநர்: அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம்.
'செல்போன் கதிர்வீச்சு ஒன்றும் செய்யாது. எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் மாதிரி இது டி.என்.ஏ-வை எல்லாம் சிதைக்கக் கூடியது கிடையாது. போதாக்குறைக்கு, செல்போன் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஆணையம் (International Commission on Non-Ionizing Radiation Protection) பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்பக் குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்பட வேண்டாம்' என்கிற செல்போன் நிறுவனங்களின் பிரசாரத்துக்கு இந்தச் செய்தி உதை கொடுத்து இருக்கிறது.
''செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏ-வை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், செல் திசுக்களை அது சூடாக்கக் கூடும். ஒருவேளை, மூளையில் கட்டி இருந்தால் அதைப் பெரிதாக்கக் கூடும்'' என்கிறது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை. மேலும், ''செல்போனின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றன. அது நோயாகுமா என இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால், மூளைப் புற்றுக்கட்டி வரக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்கிறது.
கூடியவரை பேச்சைக் குறையுங்கள். அவசரத் தொடர்புகளுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துங்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு செல்போனைப் பயன்படுத்துங்கள்.  ஒருபோதும் மொட்டை மாடி சும்மாதானே இருக்கிறது; வாடகைக்கு விட்டால் மாதம் 5,000 ரூபாய் கிடைக்குமே என்று செல்போன் கோபுரங்கள் அமைக்க இடம் கொடுக்காதீர்கள்.
ஏனென்றால், சில சிதைவுகள் உடனுக்குடன்; சில சிதைவுகள் நாளையும் அதன் பின்னும்!
- பரிமாறுவேன்...

Wednesday 7 November 2012

ஆறாம் திணை - 11

த்தனை வாரங்களாக தினை, கேழ்வரகு, நெல்லி, கொய்யா உள்ளிட்ட தமிழர்களுக்கு நெருக்க மாகவும் விருப்பமாகவும் இருந்த உணவு வகைளைப் பற்றிப் பார்த்தோம். இனி, 'கார்ப்பரேட் கலாசாரம்’ நம் வாழ்க்கை முறையில் என்னவெல்லாம் தவறான நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது, அதில் இருந்து தெளிவது எப்படி என்பதைப் பார்ப்போம்...
 'பசித்துப் புசி’ என்பதுதான் தமிழர்களின் உணவுக் கலாசாரம். சாப்பிட்டது நன்கு ஜீரணம் ஆகிய பின்னரே அடுத்த வேளை உணவைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதை, 'மருந்தெனவேண்டா வாம் யாக்கைக்கு’ என்று கூறியதன் மூலம் உறுதிப் படுத்தி இருக்கிறார் வள்ளுவர். ஆனால், இன்றைய நடப்பு?
அரக்கப்பரக்க வேலையை முடித்து ஓடி,கோபத் துடன் காத்திருக்கும் குடும்பத்தைச் சமாதானப் படுத்தி, அகோரப் பசியுடன் ஹோட்டலில் அமர்ந் தால், 'வாட் சூப் டு யூ லைக் டூ ஹாவ் சார்?’ என்பதே பேரரின் முதல் கேள்வியாக இருக்கிறது.
எங்கோ குளிர் தேசத்தில், உடல் உறுப்புகளுக்கு வேலையே வைக்காமல் பொழுதைக் கழித்து, பசி எடுக்காமல்... ஆனால், சாப்பிட வேண்டுமே என்ற சூழலில் பசியைத் தூண்டுவதற்காகக் தயாரிக்கப்பட்ட 'அப்பிடைசர்’தான் சூப்புகள். ஆனால், வேகாத வெயிலில் வெந்து, அலைந்து திரிந்து, பசியோடு வந்து சாப்பிட அமரும் நம்மவர்களும், 'அப்பிடை சர்ல ஆரம்பிக்கிறதுதானே ஐதீகம்’ என்று எடுத்த எடுப்பில் சூப்பை உறிஞ்சுவது... மன்னித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே... இது மிகமிக முட்டாள்தனம்.
ஏற்கெனவே பசித் தூண்டலில் வயிற்றில் ஜீரண அமிலங்கள் நிறைந்து கொதித்துக்கொண்டுஇருக்கும் போது, ரசாயன மூலப் பொருட்கள் நிரம்பிய சூப்பை வயிற்றுக்குள் இறக்குவது என்ன நியாயம் நண்பர்களே? ஆனால், இப்படி எடுத்த எடுப்பிலேயே வயிற்றைப் பதம் பார்ப்பதில்தான் துவங்குகின்றன இன்றைய விருந்துகள்.
முதலில் பழத் துண்டுகள், பிறகு உணவு, இடை யில் ரசம் (அல்லது அது போன்ற சூப்), இறுதியில் கண்டிப்பாக மோர். இதுதான் தமிழர் வாழ்வியலுக் கான உணவுக் கலாசாரம். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எதைச் சாப்பிட வேண்டும் என்பதோடு, எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கிறது.
விருந்து என்றால், யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள் பரிமாற, ஹோட்டல் மேஜையில் சாப்பிடு வது மட்டும்தானா? பௌர்ணமி வெளிச்சம் வெள்ளமெனப் பொழிய, தென்னை மரத் தாலாட்டுடன் மொட்டை மாடியில் சாப்பிடும் நிலாச் சோறும் விருந்துதான்.
' 'தூரம்’ வந்த பெரியவளுக்கு உளுந்தங்களி செஞ்சு கொடுத் தியா?’, 'அவன் மூஞ்சப் பார்த்தா, சரியா வெளியே போற மாதிரி தெரியலையே, பாலாஸ்பத்திரியில கடுக்காய் லேகியம் வாங்கிக் கொடுத்தியா?’, 'ஏண்டி புதுப் பொண்ணு... 'அவகளுக்கு’ பால்ல முருங்கைப் பூ போட்டுக் காய்ச்சித் தரச் சொன்னேனே... செஞ்சியா?’ - இவை அனைத்துமே நலம் பயக் கும் விருந்துகள்தான்.
சாப்பாடுதான் பசித்துப் புசி. தண்ணீரைப் பொறுத்தவரை தவிக்காவிட்டாலும் குடித்தே ஆக வேண்டும் மக்களே! இரண்டு சதவிகித நீர் இழப்பைக்கூட மனித உடல் தாங்காது. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம்.
'என் அலுவலகம் முழுக்கக் குளிரூட்டப்பட்டது. நாள் முழுக்க நான் அங்குதான் பணிபுரிகிறேன். நானும் அவ்வளவு தண்ணீர் குடிப்பது அவசியமா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஏ.சி. அறையிலேயே அமர்ந்திருக்கும் உங்கள் சருமம் வியர்வையை வெளிக்காட்டிக்கொள்ளாது. ஆனால், வெயிலில் அலைந்து திரிபவர்களைவிட உங்களுடைய கிட்னிக்கு வேலை அதிகம். சருமத்தில் கசியும் வியர்வையை ஏ.சி. காற்று உடனடியாகப் பதப்படுத்தி உங்களை உற்சாகத்திலேயே வைத்திருக்கும். ஆனால், பிசுபிசுப்பு உணர்வு இல்லாமல் உங்கள் உடல் அதிவேகமாக நீர்ச் சத்தினை இழந்துவரும். ஆதலால், குளிர்சாதன அறையிலேயே இருந்தாலும் அடிக்கடி நீர் அருந்துங்கள்.
'ஆபீஸ் டென்ஷன்ல அடிக்கடி என்னால எந்திரிச்சுப் போய் தண்ணி குடிச்சுட்டு இருக்க முடியாது. காலையில எந்திரிச்சதுமே ரெண்டு லிட்டர் தண்ணி குடிச்சா நல்லதுனு நெட்ல படிச்சிருக்கேன்!’ என்றபடி காலை எழுந்ததும் மாங்கு மாங்கென்று தண்ணீரை மண்டுகிறார்கள் பலர். தடாலடியாக இந்தப் பழக்கத்துக்கு மாறுவது உடல்நலத்துக்குக் கேடு.
திடீரென ஒரே நாளிலேயே உங்களால் மாரத் தான் ஓட்டத்தின் முழுத் தொலைவையும் ஓடிக் கடக்க முடியுமா? இரண்டிரண்டு கிலோ மீட்டர் களாக ஓடிப் பழகித்தானே முழு தூரத்தையும் கடக்க முடியும். அப்படிக் கொஞ்சம் கொஞ்ச மாக இரண்டு, மூன்று குவளைகளாக ஒரு லிட்டர் வரை நீர் அருந்துங்கள். அதற்கு மேல் ஒரே நேரத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியம் இல்லை.
உணவு உண்ணும்போது எப்படி நீர் அருந்த வேண்டும்? 'இடையில் குடியாதே... கடையில் மறவாதே’ என்பதே நமது பழக்கமாக இருக்க வேண்டும். உணவு உண்ணும்போது இடையில் குடித்தால் ஜீரண அமிலங்கள் நீர்த்துப்போகும். அதே சமயம், உணவு உண்டு முடித்ததும் சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, நீரோ... மோரோ அருந்தத் தவறாதீர்கள். அதுதான் உங்கள் வயிற்றைப் புண்ணாகாமல் எப்போதும் பாதுகாக்கும்.
- பரிமாறுவேன்...