Wednesday 29 May 2013

ஆறாம் திணை - 37

மூட்டுக்கள் அதிகம் நோவெடுக்கிறது. பசியே இல்லை. தூக்கம் வருவேனா என்கிறது. இந்தக் காது வேற சரியாக் கேட்க மாட்டேங்குது. இதுக்கு நடுவுல மலச்சிக்கல் வேற! அதுக்காக ரொம்ப மாத்திரை எழுதிடாதீங்க டாக்டர். எல்லாத்துக்கும் சரியா வர்ற மாதிரி ரெண்டு இல்லை மூணு மாத்திரை முந்நூறு ரூபாய்க்குள்ள வர்ற மாதிரி எழுதித் தாங்க!'' - இப்படி தள்ளாமை மற்றும் இல்லாமையோடு வரும் முதுமைத் தம்பதியர் கூட்டம் இன்று மருத்துவமனைகளில் அதிகம். வயோதிகம் வியாதியுகமாகத்தான் இருக்க வேண்டுமா?
வயோதிக உணவுத் தேவை கொஞ்சம் மாறுபாடானது. அளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய காலம், முதுமைக் காலம். முதலில்... தண்ணீர். வயோதிக உடலின் எடையில் 60 விழுக்காடு தண்ணீர்தான் இருக்கும். இது இளமையில் இருப்பதைக் காட்டிலும், 10 சதவிகிதம் குறைவு. இந்தப் பருவத்தில் பல பிரச்னைகள் தண்ணீர் சாப்பிட மறுப்பதிலும் மறப்பதிலும்தான் துவங்குகிறது. பெரும் பாலான பெரியவர்கள் ரத்தக் கொதிப்புக்கு, சர்க்கரைக்கு, இதய நோய்க்கு, மலச்சிக்கலுக்கு மருந்து சாப்பிடும் பழக்கத்தில் இருப்பார்கள். இந்த மருந்துகளினால் பல நேரம் நீரிழப்புக்கும், தேவையான உப்பு விகிதம் ரத்தத்தில் குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.  'என்ன நடக்குது? ஏன் தலை மட்டும் வேர்க்குது? வெலவெலனு வருது? குறை சர்க்கரையா? அதிக சர்க்கரையா? மெடிக்கல் ஃபைல்ல போட்டிருக்கிற நம்பருக்கு போன் பண்ணா, தேவையில்லாம அட்மிட் பண்ணிருவாங்களோ?’ என்ற பயம் வேறு அவ்வப்போது வந்துபோகும். இத்தனை பிரச்னைகளையும் சரியான அளவில் சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவதன் மூலமே தவிர்க்க முடியும். வயதாகும்போது, உடலின் நீரிழப்பை அறிவுறுத்தும் தாக உணர்வு இளம் வயதைக் காட்டிலும் கொஞ்சம் குறைவு. அதைப் புரிந்து, வீட்டுப் பிள்ளைகள் தம் தாத்தா பாட்டியைப் பார்த்து அவ்வப்போது கரிசனத்துடன், 'தண்ணி குடிச்சீங்களா பாட்டி?’ எனக் கேட்கும் கேள்வி எல்லா தாகத்தையுமே சேர்த்துப் போக்கும்.
செல்லுக்கு இடையில் தங்கி, வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவதைத் தடுக்கும் பொருளான Free radicals-யை, விலை உயர்ந்த ANTI  OXIDANTS மாத்திரைகளைக்கொண்டு தடுப்ப தைக் காட்டிலும், அவற்றைத் தன்னகத்தே இயற்கையாகக்கொண்ட க்ரீன் டீ, பப்பாளி, மாதுளை மூலம் எதிர்கொள்ளலாம். வயோதிகத்தில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. மலச்சிக்கலைப் போக்க, கரையா நார்களையும், இதய நாடிகளின் கொழுப்பை அகற்றக் கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலி பீனால்களையும், ஆற்றலை நீடித்துத்தர 'காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’டையும் தரும் பழங்கள், தினசரி உணவில் ஒரு பகுதியாக இருப்பது மிக மிக முக்கியம். ஆனால், மாம்பழம், சப்போட்டா பழங்கள் மரத்தில் தொங்கும் குளுக்கோஸ் பாக்கெட்டுகள். இந்த இரண்டு பழங்களையும் தாத்தாக்கள், பேரன் - பேத்திகளுக்கு வெட்டிக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பழங்களைத் தாண்டி, இன்னும் அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப்பயறு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல், மற்றும் வைட்டமின் பி12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி அவ்வப்போது சாப்பிட்டால் போதுமானது.
வயோதிகத்தில் கொழுப்பு உணவைக் குறைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால், முழுமையாகத் தவிர்ப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் கலவையைக் கொஞ்ச மாகப் பயன்படுத்துவது நல்லது. முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரதச் சேமிப்பு குறைந்துபோவதாலேயே தேகம் மெலிந்துபோகும். அதை ஈடுகட்ட முளை கட்டிய பாசிப்பயறு, முட்டை வெண்கரு, சத்து மாவு அடிக்கடி எடுப்பது முக்கியம்.
'புளி துவர் விஞ்சிக்கின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம். வயோதிகத்தின் அடையாளமான முழங்கால் மூட்டுவலியும், தசைவலிகளும் வராது இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு தாத்தா, பாட்டிகள் ஆசைப் படவே கூடாது. கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக் கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள் வயோதிகத்தின் வரப்பிரசாதம்.
காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் சாப்பிடுவது வயோதிகத்தில் நோய் வராது காக்கும் மந்திரம் என்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய வியாதி, புற்று, மன வியாதி இல்லாத வயோதிகர்கள், உண்மையான பாக்கியசாலிகள். நிகழும் 1,000 மரணங்களில் 756 மரணங்கள் மேலே சொன்ன ஐந்து வியாதிகளால்தான் இந்தியாவில் நிகழ்கின்றனவாம். இந்த தொற்றா வாழ்வியல் நோய்க் கூட்டத்தின் பிடியில்தான் பெரும்பாலான முதியோர் உள்ளனர். இவை போக, 'வீட்லதானே இருக்கீங்க... எதுக்கு இப்போ உடனே கேட்ராக்ட் ஆபரேஷன்?’, 'அதெல்லாம் கொஞ்சம் கத்திப் பேசுனாக் கேட்கும். எதுக்கு இப்போ இவ்ளோ விலையில ஹியரிங் எய்டு?’, 'பல் இல்லேன்னாலும் மிக்சில அடிச்சு முறுக்குத் திங்கணுமா? வயசானா வாயைக் கட்டணும்னு ஒங்க அப்பாவுக்குத் தெரியாதா?’ என்ற அலட்சியங்களும், 'உங்க வயித்துக்கு செட் ஆகாது. நீங்க ஹோட்டலுக்கு வர வேண்டாம்’, 'மூட்டுவலியோட எதுக்கு இப்போ ஊருக்கு வரணும்னு அடம்பிடிக்கிறீங்க? பேசாம வீட்ல இருங்க’ போன்ற நிராகரிப்புகளும் சாலிகிராமத்திலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோ வரை குதித்து வரும். இப்படியான அறிவுரைகள் சர்க்கரை, ரத்தக் கொதிப்புகளைவிட, வலியும் வேதனையும் தருவன. வீட்டில் இருக்கும் முதிய வர்கள் மருந்தோடு உன்னத உணவு, உற்சாக மனம் இவற்றோடு உரசல் இல்லாத உறவும் இருந்தால் மட்டுமே வயோதிக வியாதிகளை ஜெயிக்க முடியும் என்பதை வீட்டின் 'வருங்கால வயோதிகர்’கள் உணர வேண்டியது அவசியம்!
- பரிமாறுவேன்...

Wednesday 22 May 2013

ஆறாம் திணை - 36

ரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS)  மதிப்புக் கூட்டி விற்பனை செய் கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் விளம்பரம் வழியாகவும் ஊட்டப்பட்ட அரைகுறைத் தெளிவுடன் இருக்கும் இளைய தலைமுறையினரும் மாசத் தொடக்கத்தில் புளி, பருப்போடு, இரண்டு பாட்டில் இரும்பு டானிக், ஒரு பாக்கெட் உயிர்ச்சத்து மாத்திரை வாங்கிவருவதைப் புத்திசாலித்தனமான அக்கறையாகக் கருதுகிறது.
'அவசர உலகில் அரக்கப்பறக்கத் தின்று திரியும்போது, இப்படி டானிக்குகள், பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகள் தினம் ஒன்று எடுத்தால் நல்லதுதானே?’, 'அப்போதைக்கப்போது 'கட்டிங்’ போடும் பழக்கம் உள்ள எனக்கு லிவர் டானிக் நல்லதுதானே செய்யும்?’ என்போருக்கு ஒரு தகவல்... செய்த குற்றங்களுக்கு இப்படி டானிக்குகளைச் சாப்பிடுவது என்பது பாவத்தைக் கழுவும் பிராயச்சித்தம் அல்ல; தவிர, அவசியம் இல்லாமல் எடுக்கப்படும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் தரும். எப்படி?
இரும்புச் சத்து டானிக் என்பது வெகு அதிகமாக மக்களால் அவசியம் இன்றிப் பயன்படுத்தப்படும் ஒரு சத்து மருந்து. சோகை நீக்க மிக அவசியமான அந்த மருந்து, அவசியம் இன்றி அதிகம் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரல் பாதிப்பையும்கூட ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சாக்லேட், பிஸ்கட் வாங்கிச் செல்வதுபோல, 'எதற்கும் இருக்கட்டும்’ என இரும்புச் சத்து டானிக் வாங்கிச் செல்வது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என எச்சரிக்கிறது நவீன மருத்துவ உலகம். இரும்புச் சத்து ஏற்கெனவே ஏராளமாக நம் அன்றாட உணவில் பொதிந்திருக்கிறது. இரும்பை உடல் உட்கிரகிக்க வைட்டமின் சி சத்து அவசியம். பட்டை தீட்டிய வெள்ளை அரிசியில் இரும்புச் சத்து கிட்டத்தட்ட கிடையாது. ஆனால், கம்பு அரிசியில் ஏராளம். குதிரைவாலியிலும் வரகு, சாமையிலும்கூட அதிகம். அந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதற்கு இணையானது. இது தவிர, முருங்கைக் கீரை சூப், கோழி ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்தும் இரும்புச் சத்தை இயல்பாகத் தரும். இப்படிச் சாப்பிடுபவருக்கு இரும்புச் சத்துக்கு என தனி டானிக் தேவை இல்லை.
நாகச் சத்து (zinc), குழந்தை டானிக்குகளில் பிரபலம். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதிலும், கேன்சர் நோய்த் தடுப்பிலும், ஹார்மோன் சுரப்பைச் சீர்ப்படுத்துவதிலும் அதன் பயன்குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. இந்த நாகச் சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம் பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதையில் ஏராளம். பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது/சமைக்கும்போது விதையைத் தூர எறிந்துவிடாமல் உலர்த்தி எடுத்து, அவ்வப்போது சாப்பிட்டால் நாகச் சத்து தாராளமாகக் கிடைக்கும். இப்படி நாகச் சத்தைச் சாப்பிடாமல், டானிக்காக அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப் படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும் என பாதிப்புகளை வரிசையாகப் பட்டியலிடுகிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.
வைட்டமின்கள் மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்லை. அதே, 'உடம்பு சோர்வாக இருக்கிறது; தோல் இன்னும் பளபளப்பாக இருந்தால் நல்லா இருக்குமே; கணக்கில் சென்டம் வரலையே’ என்று காலை, மதியம், இரவு என வைட்டமின் மாத்திரைகளை இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிரை எடுக்கும் சத்தாகிவிடும். அளவுக்கு அதிகமான ஃபோலிக் அமிலம் எனும் பி9 வைட்டமின் மலக்குடல் புற்றைத் தரக்கூடும். அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீர்ப்பை புற்றைத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு வைட்டமின்களையுமே இயற்கையாக அளவோடு எடுத்துக்கொள்ளும்போது புற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.
'பையனுக்கு இந்த டானிக் கொடுத்தீங்கன்னா, அடுத்த சீன்லயே உலக செஸ் சாம்பியன் ஆகிடுவான்’ என்று மூளைக்கு டானிக் விற்பது, 'இந்தப் புரத பானம் குடிக்கக் குடிக்க இந்திய கிரிக்கெட் அணியில் அவனுக்கான இடம்  கர்ச்சீப் போட்டுவைக்கப்படும்’ என்பது போன்ற கற்பனை கமர்ஷியல்களுடன் தினமும் நாலு டானிக் கம்பெனிகள் சந்தையில் இறங்குகின்றன. பிளாஸ்டிக் பக்கெட், குடம் சைஸில் மாத்திரை டப்பாக்கள், இன்று ஒவ்வொரு ஜிம்முக்கு அருகிலும் ஊட்டச் சத்து உணவுகளாக விற்கப்படுகின்றன. அவசியம் இல்லாமல், அளவு தெரியாமல், குடும்ப மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதற்கு வசப்படுவது என்பது 'சொ.செ.சூ’தான்!  
- பரிமாறுவேன்...

Wednesday 15 May 2013

ஆறாம் திணை - 35

ண்ணத்துப்பூச்சியைப் பார்த்துச் சிலாகிப்பதும், சிட்டுக்குருவியைக் காணாமல் தவிப்பதும், வரகரிசிப் பொங்கலில் நலம் பேணுவதும், புவி வெப்பம் அடைவதை, நச்சுக் கசிவதை, கதிர்வீச்சு உமிழ்வதைப் பற்றி அக்கறையாகச் சிந்திப்பதும் மட்டும்தான் சூழல் கரிசனமா? இவற்றையெல்லாம் தாண்டிய முக்கிய சிந்தனை ஒன்றும் இருக்கிறது!
'வேண்டாம் இந்த வேளாண்மைக் கூலித் தொழில்; சமூக அவமானத்துடன், அடிப்படைக் கல்வி, மருத்துவம், வாழ்வியல் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் சவால் நிறைந்த கிராமத்துச் சேரியில் அடிமையாக வாழ்வதைக் காட்டிலும், நகர்ப்புறக் கூலியாக வாழ்வதில் எனக்குச் சில குறைந்தபட்ச உத்தரவாதமாவது கிடைக்கிறது. நகரத்தில் என் அடையாளத்தைத் தொலைக்க முடியும்!’ என வேகமாகக் கிராமங்களைவிட்டு வெளியேறுபவர்கள் இன்று ஏராளம். தமிழகத்தில் மட்டுமல்ல; பீகாரில் இருந்தும், ஜார்கண்டில் இருந்தும், சத்தீஸ்கரில் இருந்தும்... வெளியேறி சென்னைக்கு வந்து, பெரும் அடுக்குமாடிக் கட்டடங்களிலும் சுரங்க ரயில் பாதைகளிலும் உழைக்கும் வேதனையான ஒடுக்கப்பட்டவரின் வாழ்வில்தான் நம் சொகுசு வாழ்வு தொடங்குகிறது. நகரமயமாக்கம் சூழல்கேட்டுக்கு முக்கியச் சவால் என முழங்குகிறோம் நாம். ஆனால், அந்த நகரமயமாக்கலுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே காரணமல்ல; சக மனிதனை நேசிக்காத, வாழவிடாத இந்தச் சாதீயச் சமூகமும் ஒரு காரணம் என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
படுக்கை அறையை வண்ணமுடன் அலங்கரிக்க நானோ துகள்களில் வண்ணப்பூச்சு, கருப்பைக்குள்ளே உள்ள கருவுக்குக்கூட மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை, விண்கூடத்தில் இருந்துகொண்டு வீட்டில் கொதிக்கும் சாம்பாரில் வேகும் முருங்கைக்காயின் பதம் பார்க்கும் துல்லியத் தொழில்நுட்பம், இத்தனையும் இருக்கும் இந்த நாட்டில் கழிவு நீக்கத்தில் மட்டும் நவீனத் தொழில்நுட்பம் காணோம்.
இங்கே இந்தியாவில் இன்னும் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்யும் அவல நிலையில்தான் எட்டு லட்சம் மனிதர்களை வைத்திருக்கிறோம் என்ற செய்தி எவ்வளவு வேதனையை உண்டாக்குகிறது? இவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 27 ஆயிரம் பேர் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. 'வெட்கமாயில்லை உங்களுக்கு..?’ என இந்தியாவைப் பார்த்து ஐ.நா. கேட்ட பின்னர், இந்தக் கொடிய அவலத்தைக் கடுமையாகக் கண்டித்து, 1993-ல் சுப்ரீம் கோர்ட் தடை செய்தது. ஆனால், 20 ஆண்டுகளில் என்ன நடந்தது? எந்தப் பெரிய முன்னேற்றமும் நிகழவில்லை என்பதற்கு மேற்குறிப்பிடப்பட்ட அந்தச் சமீபத்திய புள்ளிவிவரங்களே சாட்சி. உச்ச நீதிமன்றம் சொன்ன பின்னரும், இதுவரை ஒருவரைக்கூட இந்தப் பணியில் ஈடுபடுத்தியமைக்காகக் கைது செய்ய வில்லை என்பது கூடுதல் செய்தி.
இந்தியாவில் ஒரு துறைக்கு எனப் பிரத்யேக பட்ஜெட் அரங்கேறுவது ரயில்வே துறையில் மட்டும்தான். கடந்த ரயில்வே பட்ஜெட்டில், 'ரயில் பெட்டிக் கழிப்பிடங்கள் ஸ்டீல் பிளேட்டில் இருக்க வேண்டும். தண்ணீர் நல்ல அழுத்தத்துடன் வர வேண்டும்; உள்ளே கண்ணாடி பளபளப்பாக இருக்க வேண்டும்; தாழ்ப்பாள் இப்படி இருக்க வேண்டும்’ என்றெல்லாம் விவாதித்த நம் பிரதிநிதிகள், இன்னமும் ரயில் நிலையங்களில் கைகளால் மலம் அள்ளும் நிலையை ஒடுக்கப்பட்ட மக்களைக்கொண்டு செய்வதை ஒருகணம்கூட யோசிக்க மறுப்பது ஏன்?
வயிற்றுக் குடலுக்குள் உள்ள புண்ணின் அளவை, இயல்பைச் சொல்லி, அதை வெட்ட, ஒட்டப் பயன்படுத்தப்படும், எண்டாஸ்கோப்பி மாதிரியான ஓர் உபகரணத்தை வடிவமைத்து, கழிவுநீர் அடைப்புகளைத் துல்லியமாகச் சரிசெய்ய முடியும். வருடத்துக்கு 1 லட்சம் பொறியாளர்கள் தமிழகத்தில் மட்டும் உருவாகின்றனர். ஒவ்வொரு சமயம் செய்தித்தாளில், 'என் கடைசி ஆண்டு  புராஜெக்ட்டில் குட்டியாக விமானம் தயாரித்தேன், குறைந்த பெட்ரோலில் வேகமாகச் செல்லும் வாகனம் தயாரித்தேன். கையடக்க கம்ப்யூட்டர் தயாரித்தேன்...’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். இத்தனையும் செய்யும் இளம்பொறியாளர்கள் சமூக அக்கறையுடன், சமூக அவமானத்துடன் செத்து மடியும் நம் சக மனிதருக்கு உதவியாக, கழிவுகளை நீக்குவதற்கென ஒரு கருவியை வடிவமைக்க முடியாதா? ஒருவேளை அப்படி ஒன்றைக் கண்டறிந்து ஓரமாக வைத்திருந்தால், அதை இந்த அரசு இயந்திரம் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால்தான் என்ன?
சூழல் கரிசனம் என்பது புவியை நேசிப்பதோடு நின்றுவிடாமல், நம் சகமனிதரை எந்தவித சாதி, மத அடையாளமும் இன்றி நேசித்தால் மட்டுமே சாத்தியம். 'மூட்டுல பசி உள்ளவங்க நீங்க... வயித்துப் பசில நாங்க முனங்குறது உங்களுக்கு எப்படிக் கேட்கும்?’ என்ற கேள்வியுடன் கிராமங்களை வலியுடன் தொலைக்கும் சாமானியன்; 'அணை கட்டுகிறேன்; அடியில் உள்ள கனிமத்தைத் தோண்டுகிறேன்... நீ நகர்ந்து போ’ என்று ஆங்காங்கே விரட்டப்படும், காட்டைத் தன் வாழ்வாதாரமாகவும் வாழ்வியலாகவும்கொண்ட மலைவாழ் மக்கள்; உப்புக் கரிக்கும் கண்ணீருடன் ஒவ்வொரு நாளும் உயிரோடு திரும்பிவந்தால்தான் ஆச்சு எனக் கடலோடு உறவாடும் மீனவன்; 'சிங்காரச் சென்னையாக்கப் போறோம்; கூவம் ரொம்ப அசிங்கமா இருக்கு, நீங்கள் உங்கள் குடிசையை எடுத்துக்கொண்டு 50 கி.மீ. அந்தப் பக்கமா போங்க...’ என விரட்டப்படும் ஏழை; 'என் வீட்டு வாசலில் கார்ப்பரேஷன்காரன் குப்பைத் தொட்டியை வெச்சுட்டான். எப்படியாச்சும் எடுத்துடுங்க’ என தனக்குத் தெரிந்த உயர் அதிகாரியைக் கையைக் காலைப் பிடித்து மாற்றச் சொல்லும் நாம், அதே குப்பையை, நம் கழிவுகளை அன்றாடம் அப்புறப்படுத்துவதையே தொழிலாகச் செய்யும் ஒடுக்கப்பட்ட நம் சக தோழர்கள்; இவர்கள் எல்லோரின் நலவாழ்வையும் உள்ளடக்கியதுதான் சுற்றுச்சூழல் அக்கறை. அந்த மனிதரின் விடுதலை யோடு சேர்த்துதான் சுற்றுச்சூழலின் விடுதலையும் சாத்தியம். 'கார்பன் கசிவு கூடிப்போச்சு; ஓசோன்ல ஓட்டை;  நாமெல்லாம் நாளைக்கு பீச்சில் இதுக்கு விழிப்பு உணர்வுக்கு டி ஷர்ட், தொப்பிப் போட்டு மாரத்தான், சைக்ளோட்ரான் போறோம்...’ என்று  பேசுவதில் மட்டும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ஏனென்றால், இங்கே விடியல் கிழக்கில் இருந்துதான் வந்து சேரும் என்றிருக்க முடியாது. எட்டுத் திக்கில் இருந்தும் எட்டிப் பார்க்க வேண்டும். ஏனெனில், எல்லா பக்கமும் இருட்டு விதைக்கப்பட்டுள்ளது!
- பரிமாறுவேன்...

Wednesday 8 May 2013

ஆறாம் திணை - 34

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க என்ன திட்டம்வைத்திருக்கிறீர்கள்?
கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்ல வேண்டும் என்று இம்சிக்கும் குடும்பத்தோடு வெள்ளிக்கிழமை கும்பலோடு கும்பலாக, இரைச்சலோடு பயணித்து, வழி எல்லாம் வாந்தி எடுத்து, கெண்டைக்கால் ஆடுசதை, தொடை எல்லாம் வலிக்கும்படியாகப் படகு சவாரி செய்து, பசிக்கு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு, திரும்பும் வழியிலேயே அதை வாந்தி எடுத்து, திங்கட்கிழமை காலை தலைவலியுடன் அலுவலகத்தில் அமரும் தற்போதைய வாழ்வியல்தான் கோடை வாழ்க்கையா? இல்லவே இல்லை!
ஒரு காலத்தில் கோடைக்கு என்றே நம்மவர்களுக்குத் தனி வாழ்வியல் இருந்தது நம்மில் பலருக்குத் தெரியாது.
'முடி கொட்டிரும்; சைனஸ் அடைக்கும்’ எனச் சொல்லி, நம்மில் பலர் கழுத்துக்குக் கீழே, இடுப்புக்குக் கீழே குளிக்கும் கலாசாரத்தில் திளைக்கிறோம். இந்தக் கோடையில் இருந்தாவது குளியல் என்பது நலவாழ்வியல் கூறுகளில் ஒன்று என்பதைப் புரிந்து, அதற்கு ஏற்பக் குளித்துப் பழகுவோம். இரவில் பித்தம் கூடி, சூடாகிப்போன உடலின் சூட்டைத் தணிக்க, இளங்காலையில் தலைக்குக் குளிக்கச் சொன் னது நம் தமிழர் பாரம்பரியம். ஆனால், இப்போது தலை நனையாமல் குளிக்கும் நவீன 'வாட்டர் சர்வீஸுக்கு’ப் பெயர் குளியல் அல்ல. கோடைக் குளியலின் இன்னொரு சிறப்பம்சம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. அது மிக அவசியமானதும்கூட. அந்தக் காலத்தில் நல்லெண்ணெய், முக்கூட்டு நெய், பசு நெய் எனப் பல எண்ணெய்களைத் தலைக்குத் தேய்த்துக் குளித் தனர் நம் முன்னோர்கள். 'எண்ணெய்... நெய்யா..? அந்தப் பிசுபிசுப்பினால் எந்தப் பயனும் இல்லை!’ என்று பேசிய நவீன விஞ்ஞானம்,   'எண்ணெய்க் குளியல் உடலுக்கு நன்மை பயக்கும் பல என்ஸைம்களை, ஹார்மோன்களை உடனடியாகத் தூண்டுகிறது!’ என மருத்துவக் கட்டுரைகளைப் படைத்துவருகிறது. நவீன விஞ்ஞானத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தில், பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஆயில் மசாஜ் செய்யப்படுகிறது. உடம்பு முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து, ஊற விட்டு பம்புசெட்டில் குளித்த காலம் கரைந்தே போய்விட்டது. குறைந்தபட்சம் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாகவேனும் தலையிலும் உடலிலும் நல்லெண்ணெய் தேய்த்து ஷவரில் குளிக்கப் பழகுவோமே!
'எண்ணெய்ப் பிசுக்கை எப்படிப் போக்குவது? ஷாம்பு சரியா?’ என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு என் பதில்... பஞ்சகற்பம்! அது என்ன பஞ்சகற்பம்? சோடியம் லாரல் சல்பேட் ஃபார்மால்டிஹைடு முதலான எந்த வில்லங்க ரசாயனங்களும் இல்லாத மூலிகைக் குளியல் மருந்தே பஞ்சகற்பம். கஸ்தூரி மஞ்சள், மிளகு, நெல்லிப்பருப்பு, வேம்புவித்து, கடுக்காய்த் தோல் சேர்ந்த இந்த மூலிகைக் கலவை கூந்தலுக்கு நலம் பயக்கும் ஷாம்பு கண்டிஷனர் மட்டுமல்ல; உடலின் பித்தம் போக்கும் அருமருந்தும்கூட. முக்கியமான விஷயம் மற்ற சோப்பு, ஷாம்புபோல குளிக்கும்போது சருமத்திலும் பிறகு தரையிலும் விழுந்தோடி நிலத்திலும் நச்சு பாய்ச்சாது.  
நம்மை அழகுபடுத்தவும், மணமூட்டவும், பொலிவாக்கவும் அன்றைக்கே பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பாசிப் பயறு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், கார்போக அரிசி, கருஞ்சீரகம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனத் தூள் இவற்றை ஒன்றாக அரைத்தெடுத்து தயாரிக்கப்படும் நலுங்கு மாவு இன்றைக்கும் சாத்தியமானதுதான். வியர்வை வாடை நீக்கி, தோலுக்கு டியோடரன்ட் டாக கோரைக் கிழங்கு மணம் தரும். கிருமித் தொற்று இருந்தால் தோல் பூஞ்சைக்கு எதிர் நுண்ணியிரியாக, பூஞ்சைக்கொல்லியாக கருஞ்சீரகம் செய்யப்படும். பாசிப் பயறு தோல் வறட்சியைப் போக்கும்!
'நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக்கிற் போமே பிணி’- என்பது தமிழனின் நோயணுகா விதி. வெயில்கால பிரிஸ்கிரிப்ஷனாக மட்டும் இந்த சித்தர் வாக்கு அமையவில்லை. வாழ்நாள் எல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய சூத்திரமாகத்தான் சொன்னார். கோடைக் காலத் தில், நீரைச் சுடவைத்தும், மோரை நன்கு நீர் சேர்த்துப் பெருக்கி நீர் மோராக அதிக அளவிலும், நெய்யை உருக்கிக் கொஞ்சமாகவும் சாப்பிட்டால், வியாதி வந்து சேராது என்பது இந்தப் பாடலின் பொருள். ஆம் நண்பர்களே... வெயிலுக்கு நீரும் மோரும் மட்டுமே போதும்.
நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல; உடம் பும்தான்! உடலில் ஒரு சதவிகிதம் நீர்த்துவம் குறைந்தாலே தாகம் எடுக்கும். இரண்டு சதவிகிதத்துக்கு மேல் என்றால் நா வறண்டு தவிக்கும். நான்கரை சதவிகிதத்துக்கு மேல், 'நான் யாரு... எங்கே இருக்கேன்?’ என உளறவைக்கும். ஐந்து சதவிகிதத்துக்கும் மேல் குறைந்தால் மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும். உடலின் இயக்கத்துக்கு இந்த அளவு முக்கியமான தண்ணீரைக் கோடையில் நான்கு லிட்டரேனும் குடிப்பது அவசியம். 'நாங்க ஏ.சி- யில் தூங்கி, ஏ.சி. காரில் போய் ஏ.சி -யில் வேலைபார்த்து ஏ.சி. மக்களுக் காகவே உழைப்பவர்கள். நாங்களுமா தண்ணீர் குடிக்க வேண்டும்?’ என்று கேட்பவர்களே... நீங்கள்தான் அதி அவசியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏ.சி. சூழலில் சருமத்தில் பிசுபிசுப்பாகாது. ஆனால், வியர்வை உடனடியாக உலர்த்தப்படுவதால், நொடிக்கு நொடி நீங்கள் உடலில் நீரினை இழந்து கொண்டே இருப்பீர்கள். கோடையில் கூடுதல் தண்ணீர் குடிக்கவில்லை என்றால், சூடு பிடிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகக் கூடும்.  
வெயிலுக்கு எனக் கூடுதல் பீர் பாட்டிலை வாங்கிவைக்கப் போகிறதாம் டாஸ்மாக். ஓட்டை வால்வுகளைக்கொண்டு அணு உலை அமைக்க முயல்வதைத் தடுக்காத அரசு, பள்ளிக்கூடங்கள் துவங்கும்போது பாடப் புத்தகங்கள் சரிவரக் கிடைக்குமா என்று சோதிக்காத அரசு, 'குடிமகன்களுக்காக’ இவ்வளவு அக்கறைப்படுவது அகில உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி! பீர் சாப்பிடுவதால் உண்டாகும் குளிர்ச்சி நம் உடலில் சேர்வது இல்லை. பீரில் உள்ள ஆல்கஹால் ஈரலைக் குளிர்விக்கும். இதனால் நாளடைவில் அந்த ஈரல் உறைந்து சுருங்கிப்போகும். அதற்கு சிரோசிஸ் என்று பெயர். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலாக உணர்ந்தால்... உஷார்! அந்த நொடியில் இருந்து பீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையெனில், வெகு விரைவிலேயே ஊர் உலகத்துக்கெல்லாம் 'சேதி’ சொல்லியனுப்ப வேண்டியிருக்கலாம்!
- பரிமாறுவேன்...

Wednesday 1 May 2013

ஆறாம் திணை - 33

ஞ்சலியைக் காணோம்’ என்று பரபரப்படைந்த நம்மில் பலருக்கு, 'அரல் கடல்’ ஒன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பது அதிகமாகத் தெரியாது. அரல் என்பது கடல் அல்ல; நிலத்தால் சூழப்பட்ட மிகப் பெரிய அளவிலான ஏரி. மத்திய ஆசியாவில் இப்போதும் இருக்கிறது. ஆனால், '2030-க்குள் முழுவதுமாகக் காணாமல் போய்விடும்’ என்கின்றனர் சூழலியல் அறிவியலாளர்கள்.
அமு தார்யா, சிர் தார்யா என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இந்தக் கடல், 1960-ல் 16 முதல் 68 மீட்டர் ஆழம்கொண்ட 66 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள நன்னீர் ஏரி. அரிசியை இரண்டு போகம் விளைவித்துவந்தது. விளைச்சலை இன்னும் பெருக்க வேண்டும் எனத் தண்ணீரைத் திருப்பி, ஆற்றின் போக்கை நினைத்தபடி எல்லாம் மாற்றியதில் அரல் கடல் வற்றி உப்பு மண்டலமாகிவிட்டது. இப்போது தினசரி 2,00,000 டன் உப்பை சுற்றியுள்ள 400 கி.மீ. நிலப்பரப்பில் காற்று வழியே வீசுகிறது. பாதித் தண்ணீர் வற்றிப்போய், ஆழம் 14 மீட்டருக்கும் கீழே குறைந்துவிட்டது. அரல் கடல் மட்டுமல்ல... நிறைய விஷயங்கள் நம் அட்டூழியம் தாங்காமல் நம்மைவிட்டு அகன்றுவிட்டன. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராபின் பறவை கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. 1963-ல் உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் ரேசல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்’ நூல், எப்படி ராபின் பறவை டி.டி.டீ. (DDT) பூச்சிக்கொல்லிகளின் வருகைக்குப் பின் உலகைவிட்டுக் காணாமல்போயின என்று வெளிச்சமிட்டுக் காட்டியது. கதைகளில் நாம் படித்து மகிழ்ந்த டோடோ பறவை இப்போது இல்லை. வெண்முதுகுப் பிணம் தின்னிக் கழுகுகள் என்றொரு பறவை இனம் உண்டு. இவை, விலங்குக் கழிவுகளை உண்டு உயிர் வாழும். நாம் ஆடு, மாடுகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் சோடியம் கொடுத்ததால், அதன் சதைகளைச் சாப்பிட்டு, நச்சு தாங்காமல் அந்தக் கழுகுகள் வருவதையே குறைத்துவிட்டன. மரபணு மாற்றப்பட்ட பி.டி. சோளத்தில் உள்ள நச்சு, மொனார்க் பட்டாம்பூச்சிகளைக் கொன்று குவித்தது. இப்போது அவை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வேகமாக அழிவு நிலையை எட்டுகின்றனவாம். இன்னும் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மொத்தத்தில், ஒரு பேட்டையில் குடியேறிய தாதா, ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்த சக ஜீவன்களைக் கொன்று குவித்தோ, அடித்து விரட்டியோ அப்புறப்படுத்திவிட்டது.
மனிதன் வசிப்பது இந்தப் பூமியின் 25 சதவிகிதத்துக்கும் குறைவான பகுதியில்தான். ஆனால், பூமியின் மிச்ச வளங்கள் அனைத்தையும் எந்த அக்கறையும் இல்லாமல் உறிஞ்சி வாழ்கிறோம். அந்த உறிஞ்சலில் அழிந்தவற்றில் 50 சதவிகித உயிர்கள், மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதவை. இனியும் இந்த உறிஞ்சல் தொடர்ந்தால், ''அன்னப்பறவை, கவரிமான், ஃபீனிக்ஸ் பறவைபோல... சிட்டுக்குருவியும் ஒரு கற்பனைப் படைப்பா?'' என்று உங்கள் பையன் கேட்பான்.
'வளர்ச்சிப் பணியில் இதெல்லாம் வாடிக்கைதானே? மக்கள்தொகைப் பெருக்கம், உணவுப் பற்றாக்குறை... என்னதான் செய்வது? சும்மா புலம்பாதீங்க' என அதிகம் படித்த அறிஞர்கள் அலுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் அறிவுரை யில், 2000-ம் ஆண்டில் உலகின் 100-க்கும் மேற்பட்ட ஜனாதிபதிகள், மன்னர்கள், சர்வாதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து, இந்த உலகில் பசியோடு இருப்பவர்களைப் பாதியாகக் குறைத்தாக வேண்டும் என உறுதிபூண்டனர். 13 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை பசி குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள் தினமும் இரவில் பசியோடுதான்படுக்கைக் குச் செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, தாராளமயமாக்கலுக்குப் பின்னர், ஒட்டுமொத்த உலக வணிகமும் நான்கு மடங்கு உயர்ந்த பின்னரும்கூட, இந்த வறுமையும் பசியும் மட்டும் ஒழிக்கப்படவே இல்லை. இந்தியாவில் 1993-ல் இருந்த சராசரி ஆண்டு வருமானம், 2005-ல் இரு மடங்கான பின்னரும் இங்கே பசிப்புள்ளி எவ்வளவு தெரியுமா? 23. (hunger index நாட்டின் குழந்தைகளின் எடை, ஆரோக்கியம், சிசு மரணம் ஆகியவற்றைவைத்து அளவிடுவது) சில சகாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளைவிட இது அதிகம். தாராளமயமாக்கம் மட்டும்தான் இந்தியாவை மிளிரவைக்கும் எனக் குட்டிக்கரணம் போட்டுப் பேசி, அதைப் புகுத்தி, வறுமையையும் பசியையும் பெருக்கி, பணக்காரன் - ஏழை இடைவெளியை அதிகரிக்க வைத்ததுதான் தாராளமயத்தின் சாதனை. இங்கே பற்றாக்குறைக்குக் காரணம் உற்பத்திப் பிரச்னை இல்லை. பகிர்தல் கிடையாது என்பதுதான்.
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனப் பகிர்ந்துண்ணும் பாரம்பரியம் 2,000 வருடங்களுக்கு முன்பே நம்மிடம் இருந்தது. அது வெறுமனே உணவைப் பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடு அல்ல; இந்தப் பூமியின் இயற்கை வளங்களை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பங்கிட்டுக்கொள்வது. ஆனால், நாம் 'பயோடைவர்சிட்டி’ என்பதை பரீட்சையைத் தாண்டி யோசிப்பது இல்லை. சூழலைக் காக்காமல் பசியைப் போக்க முடியாது. பல்லுயிர் பாதுகாப்பை உடைத்துப் பசியாற்றுவது என்பது வேடிக்கை வசனம். காந்தி சொல்வார், 'எல்லோரின் தேவைக்கு இயற்கை போதுமானது. எல்லோரின் பேராசைக்கு அல்ல’ என்று. ஆனால், பேராசைகொண்ட வணிக உலகத்தின் கிடுக்கிப் பிடியில்தான் இன்று நாம் உழல்கிறோம். ஒவ்வொரு வாய் சோற்றை உண்ணும்போதும், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு வல்லரசின் ஏகாதிபத்திய சிந்தனை, உள்ளூர் அரசியல் தந்திரம், வணிகச் சூழ்ச்சி, பாலுக்காக அழும் இன்னொரு குழந்தையின் பசி மறைந்திருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
- பரிமாறுவேன்...