“ஒரு வாரிசு வந்தா போதும் தாயி... வீட்டை வித்துக் காசு எடுத்துட்டேன். அந்த டெஸ்ட் டியூப்ல கருத்தரிச்சிரலாம்ல... பார்த்துச் சொல்லும்மா!'' என உடைந்த குரலுடன் கருத்தரிப்பு உதவி மையங்களில் கண்ணீருடன் காத்திருக்கும் ஏழைத் தம்பதியரும், ''இன்னும் நாலஞ்சு நாள்ல ஓவுலேஷன் டேட் வரலாம்னு நினைக்கிறேன். நாம ஒண்ணா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்'' என மனைவி அலைபேசியில் அழைக்க, ''ம்ம்ம்... ஸாரி டியர்... க்ளையன்ட் சைட் டெஸ்ட்டிங் போயிட்டு இருக்கு. என்னால இப்போ உறுதியா சொல்ல முடியலையே... கடைசி நேரத்துல அடிச்சுப்பிடிச்சாவது வந்துடு றேம்மா!'' என வருத்தத்துடன் தகவல் சொல்லும் கணவனுமாக நகர்ப்புறத் தம்பதியரும்... இப்போது இந்தியாவில் அதிகம்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம்போய், இப்போது கிட்டத்தட்ட 20 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கழகக் குறிப்பு. எண்ணிக்கை மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குறைந்தும் சிதைந்தும்வருவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. என்ன காரணம்? ஒருபக்கம் நகரமயமாக்கம் தரும் வாழ்வியல் நெருக்கடி, மகிழ்ச்சியை மறந்துபோய் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் மனம், விஷத் துணுக்குகளை அலங்கரித்துச் சந்தை விற்பனைக்குக் கொண்டுவரும் அபாய உணவுகள், காற்றில், தண்ணீரில் எனச் சூழலில் கசிந்து நிற்கும் பல்வேறு ரசாயனங்கள்... இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து, நிறையப் பேருக்குக் கருத்தரிப்பு என்பது காதலில் நிகழாமல், கண்ணாடிக் குடுவையில் நிகழ்கிறது.
தாலேட்டுகள்... பிளாஸ்டிக்குகளை வளைத்து, நெளித்துச் செய்யப் பயன்படுத்தும் ஒரு ரசாயனம். பிளாஸ்டிக்கில் மட்டுமல்ல... அன்றாடம் சாப்பிடும் வழுவழு கோட்டிங் போட்ட பெருவாரி மாத்திரை மருந்துகள், குக்கர் கேஸ்கட், குளிர் உணவு களைச் சூடாக்க உதவும் மைக்ரோவேவ் ஓவனின் பிளாஸ்டிக் பாத்திரம், காரின் உள்புற பிளாஸ்டிக்குகள்... இப்படி எத்திக்கிலும் எகிறிக்கிடக்கிறது பிளாஸ்டிக்கின் பயன்பாடு. இந்த தாலேட்டுகள் பிளாஸ்டிக்கோடு கலந்துசெய்யப்பட்டாலும் சூட்டில், நெளிசல், உடைசலில் முதலில் இது காற்றில் கசியத் துவங்கிவிடும். புது காருக்குள் வரும் வாடை, புது பெயின்ட் அடித்துப் பூட்டியிருந்த வீட்டினுள் வரும் வாடை... பெரும்பாலும் இந்த தாலேட் கசிவினால்தான். இந்த தாலேட் விந்து அணுக் குறைவை உண்டாக்கும்; விந்து உற்பத்தி செய்யும் ஆண் சினைப் பையின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என நவீன ஆய்வு கள் உறுதிபடக் கூறுகின்றன. பெண்களுக்கோ, கூடுதலாக அவர்கள் பயன்படுத்தும் அழகூட்டிகளில், குறிப்பாக நகப்பூச்சு, லிப்ஸ்டிக், முகப்பொலிவு க்ரீம் கள் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் தாலேட்டுகள், குறைப்பிரசவம், சினைப்பை நீர்க்கட்டிகள் என ஏகமான சிக்கல்களை உருவாக்குகின்றன். விளைவு? முன்னர் மணியடித்ததுபோல மாதாமாதம் வந்துகொண்டு இருந்த மாதவிடாயை, இப்போது வருடத்துக்கு ஏறத்தாழ 706 மில்லியன் டாலர் செலவழித்து வரவைக்க வேண்டியிருக்கிறது. ஆம் நண்பர் களே... முன்னரெல்லாம் எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட பாலிசிஸ்டிக் ஓவரி சிக்கல், இப்போது மிகப் பெரும்பாலான இளம் மகளிரிடம் உள்ளது.
கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள், கொஞ்சம் மூச்சு/உடற்பயிற்சி ஆண்களிடம் விந்தணுக்களை உயர்த்தவும், பெண்ணில் இந்த சினைப்பை நீர்க்கட்டியைத் தடுக்கவும் பெரிதும் உதவும். தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே. ஹை கிளைசிமிக் தன்மைகொண்ட பாலீஷ் போட்ட பச்சரிசி, குளூட்டன் சேர்த்த கோதுமை மாவு இல்லாத சமையல் வேண்டும். மாப்பிள்ளை சம்பாவில் சோறாக்கி, முருங்கைக்காய் சாம்பா ரும், பசலைக்கீரை பாசிப்பயறுக் கூட்டும், மாதுளை பழச்சாறும் செய்து சாப்பிடுவது விந்தணுக்கள் எண்ணிக்கையை உயர்த்தும். விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த 'வெல்வட் பீன்’ எனும் பூனைக்காலி விதை, பாதிக்கப்பட்ட செர்டோலி செல்களைக்கூடச் சீர்படுத்தும் சாதாரண நெருஞ்சில் முள், வயல் வரப்பில் களையாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி விதை என எளிய சித்த மருந்துகள் ஏராளமாய் நம் மரபில் உண்டு. அவற்றில் பல நம் பாட்டிக் கும் தாத்தாவுக்குமே தெரியும். அதையெல்லாம் தொலைத்துவிட்டு, 'ஆண்மைக் குறைவா..? ஆண் கரடியின் வலது கால் பெருவிரல், காண்டாமிருகக் கொம்பு, சிட்டுக் குருவி லேகியம் என யோசிப்பது முழு உட்டாலக்கடி.
சினைப்பை நீர்க்கட்டிகளால், திடீரென உடல் பெருத்து, மாதவிடாய் வராமல், லேசாக மீசை தாடி வந்து சங்கடப்படும் பெண்ணுக்கு, சோற்றுக் கற்றாழையும், வெந்தயமும், பூண்டும், பனை வெல்லமும் சேர்த்துக் கிண்டிய களி உணவு மிக விரைவில் தீர்வு தரும். தினை, கம்பு, சோளம், வரகரிசி முதலான லோ கிளைசிமிக் தன்மையுடைய சிறுதானிய உணவுகளும், ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் உள்ள நம்ம மலபார் குடம் புளியும் உடல் எடையை ஓரளவுக்குக் குறைக்க உதவும். இந்த மாதிரியான உணவுகளைக் கருத்தரிப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தின்போது தேடாமல், வளரிளம் பருவத்திலேயே பழக்கப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். 'களியா... அய்ய கை எல்லாம் ஒட்டுமே. பப்பாளி மட்டும் வேணாம்ப்பா!’ எனச் சொல்லும் பெண் குழந்தைகளுக்கு, உளுந் தங்களி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உரமேற்றி மாதவிடாயைச் சீர்படுத்துவதுபோல, பப்பாளி யின் பாலிஃபீனாலும் வைட்டமினும் கருப் பையை வலுவாக்கும் எனச் சொல்லித் திருத் துவது, பெற்றோரின் அதிஅவசியமான கடமை!
'நீருக்குள் நிற்கும்போதும்கூட வியர்க்கின்றது’ எனச் சிலாகிக்கும் காதல் சமீபமாக இல்லை. 'அயித்தயும் மாமனும் சுகம்தானா?’ என இப்போது மாமன் மகள்கள் கரிசனமாகப் பாடுவதில்லை. 'எதற்கு வம்பு?’ எனக் காதலை கசின் சிஸ்டரிடம் காட்டுவதும் இல்லை. உலா போகும் நிலா பார்த்துக் கனாக் காணும் கற்பனை எல்லாம் இப்போதைய காதலில் வற்றிப்போய், 'சரியா வரலைடி... அதான் ரிலேஷன்ஷிப் பிரேக் பண்ணிட்டேன்!’ எனக் காதலைப் பங்குச் சந்தையில் மாற்றிவிட்டுப்போகும் நவீன நோய் பரவி வருகிறது. கூடவே வெற்றிலை, வெண் பூசணி, வாழைப்பழம், சோற்றுக் கற்றாழை எனக் கருத்தரிக்க உதவும் பல மரபு உணவுகளும்கூட மறந்து போனதில், காதல் மாத்திரைகளும் கருத்தரிப்பு மருத்துவமும் மட்டும் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன!
- பரிமாறுவேன்...

சாத்தியமற்றதும், சுற்றுச்சூழலுக்குக் கேடானதுமான ஆறுகளை இணைக்கும் திட்டத்தைவிட, முதலில் மின்சார க்ரிடுகளை இணைத்தாலே ஒடிசாவில் வீணாகும் மின்சாரத்தை ஒட்டன்சத்திரத்துக்குக் கொண்டுவரலாம். நம் நாட்டில் ஏறத்தாழ 6,000 சிறு மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத் துக்கும் அதிகபட்சம் 15-20 மெகா வாட் மின்சாரம்தான் தேவைப்படும். அதை ஆங்காங்கே உற்பத்திசெய்துகொள்ளும் சிறு திட்டங்களைச் செயல்படுத்தினாலே போதும். இப்படி எல்லாம் யோசிக்காமல் கடல் நீரில் அணுக் கழிவை விடுவதும், காற்றை நஞ்சாக்குவதும், மண்ணுக்குள் கதிரியக்கக் கழிவுகளைப் புதைப் பதுமான கொடுஞ்செயலைப் புவியில் வேறு எந்த மிருகமும் எப்போதும் செய்யாது.
ஆட்டிஸக் குழந்தைகளின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் அவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டிஸக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச் சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிஸ நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம் என்கின்றனர் அறிவியலாளர்கள். குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு உத்தமம். பெஞ்சமின் ஃபென்கோல்ட் என்ற மருத்துவர் எந்த அளவுக்கு, வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிஸத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கி, இப்போது ஃபென்கோல்ட் உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிஸ நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறதாம். பாரம் பரிய உணவு வகைகளின் சாரம்தான் அது. நேற்றைக்குப் பிறந்து மிரட்டும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக்கூட விரிவாக வேறு வார்த்தைகளில் பேசும் பழமையான சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிஸத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை என்பதை வைத்துப்பார்த்தால், அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பரிய உணவு, பதற்றம்இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை என்பது புரிகிறது.
பிரிட்டனில் செயல்படும் அமெரிக்காவைத் தலைமையகமாகக்கொண்ட உலகின் முன்ன ணிப் பலசரக்கு அங்காடி அஸ்டா (Asda). சகலமும் தங்கள் கடையில் 24x7 கிடைக்கும் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த நிறுவனம், காய்கறிகளைக் கொள்முதல் செய்யும் போது, 'இந்த கேரட் கொஞ்சம் கோணலா இருக்கு. நீள அகலம் எங்கள் தரத்துக்கு மேட்ச் ஆகலை. பளிச் கலர்லஇல்லையே’ என்று ஏகமாக கேரட்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். அப்படி அவர்கள் ரிஜெக்ட் செய்யும் கேரட் களின் அளவு, மொத்த உற்பத்தியில் கிட்டத் தட்ட 25-30 சதவிகிதமாம். ஒதுக்கித்தள்ளு வதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'எங்க அஸ்டா கேரட்டை பீலரில் (தோல் சீவும் இயந்திரம்) வைத்து இழுத்தால், ஒரே இழுப்பில் எந்தச் சிக்கலும் இல்லாமல் தோல் உரிய வேண்டும். அதற்கு உதவாத விதமாக கேரட் வளைந்திருந்தால், அது எங்களுக்குத் தேவை யில்லை’ என்பது அவர்கள் சொல்லும் காரணம். 'முருங்கைக்காய் சாம்பார்தான். ஆனா, காய்கறிக் கூடைல ரெண்டே ரெண்டு கேரட் மட்டும் மிச்சமாக் கெடந்துச்சு. அதான், அதையும் வெட்டிப் போட்டேன். இப்ப அதனால முருங்கைக்காய் என்ன கோச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் வேளைகளில் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. முந்தைய அக்கறை கரன்ஸி... பிந்தைய அக்கறை... கரிசனம்!
வணிக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விளையும் பொருட்களை ஏகத்துக்கும் வீணாக்குகிறார்கள். இப்படி வளர்ந்த நாடுகளின் வணிக நிறுவனங்கள் பாழாக்கும் உணவுக்கான காரணங்களைப்பட்டிய லிட்டுக்கொண்டே போகலாம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஆப்பிரிக்க நாடுகள் உற்பத்திசெய்யும் மொத்த அளவு 234 மில்லியன் டன். கிட்டத்தட்டஅமெரிக் காவும் ஐரோப்பாவும் மட்டுமே சாப்பிடும்போது வீணாக் கும் உணவின் அளவு (222 மில்லியன் டன்) இது.
வேட்டையாடிப் பெறும் இரையை, புலியும் சிறுத்தையும் வீணாக்குவது இல்லை. ஒவ்வொரு கவளத்தையும் கவர்ந்து வந்து சாப்பிடும் காக்கையும் பூனையும் எப்போதும் உணவை அழிப்பது இல்லை. குருவியும் புறாவும் தான் கொத்தும் தானியத்தின் அழகைப் பார்ப்பது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே தன் சக பயணிக்குக் கிடைக்காத உணவைச் சகட்டுமேனிக்குப் பாழடித்துவிட்டு நிற்கிறான். தண்ணீரை வீணடிக்காத சிறுதானிய உணவு, மண்ணைப் பாழாக்காத மரபு வேளாண்மை, சூழலைக் கெடுக்காத உள்ளூர் காய்கனி, உடலைப் பாழாக்காத பாரம்பரியப் பக்குவம், அளவாகச் சமைத்து, அன்பாக அதைப் பரிமாறும் அக்கறை, எதையும் வீணாக்காமல் பகிர்ந்துண்ணும் கலாசாரம்... இதை மீண்டும் மீட்டெடுப்பது மட்டுமே பசிப் பிணி போக்கும் பயிற்சி... முயற்சி!
அலுவலகத்தில் இருந்து திரும்பி வரத் தாமதமாகும் என்போர், இரவு உணவை அலுவலகத்தில் 7 அல்லது 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள். உறங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுப் படுங்கள். உறக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது சாலச் சிறந்தது. ஆழ்ந்த தூக்கத்துக்குத் தினசரி நடைப் பயிற்சி மிகவும் அவசியம். 'மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலையே அப்படியாக்கும்’ என்றெல்லாம் உட்டாலக்கடி அடிக்காமல், தினசரி 45 நிமிடங் கள் மிதவேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப் படுத்தும், மனதை ஒருமுகப்படுத்தித் தூங்க வைக்கும். கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக் கிழங்குப் பொடி, மாதுளம்பழம் என இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் தூக்க மருந்தில்லாத உணவுகள்.