Wednesday 19 June 2013

ஆறாம் திணை - 40

"..எல்லாம் பொருளில் தோன்றிவிடும்’ என அன்று நான்மணிக்கடிகை முடித்த வரிகள், இந்த நவீன யுகத்தின் பிரதான சூத்திரம்! இப்போதைய பொருளீட்டும் வாழ்வியலுக்கு அச்சாணி, மனிதன் கண்டறிந்த அபரிமித ஆற்றல். இரவு பகலை ஜன்னலுக்கு வெளியே தள்ளிச் சாத்தி, எந்நேரமும் ஜொலிஜொலியென மிளிர மின் ஆற்றல் வந்ததும், பல நாழிகைகள் யானை, குதிரையில் பயணித்த காலம் போய், சில மணி நேரங்களில் கண்டங்கள் கடக்க வெள்ளை பெட்ரோல் வந்ததும், நாவாயை நகர்த்திப் போட்டுவிட்டு, சொகுசாகப் பயணிக்க டீசல் கப்பல் வந்ததும், மனிதனின் சர்வாதிகாரத்துக்குள் பூவுலகு பிடிபட்டுப்போனது. இத்தனை ஆற்றலுக்கும் தேவையான கரி இன்னும் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளிலும், க்ரூடு எண்ணெய் 45 ஆண்டுகளிலும் காலியாகிவிடும். அதற்குப் பின்னர்?
'அதுக்குத்தான்யா அணு ஆற்றல்’ என்று ஒரு பச்சைப் பொய்யைப் பெருவாரியாக அரசும் அதிகம் படித்த அரசுசார்புத் தொழில்நுட்ப வல்லுநர்களும் சூடம் அணைத்துச் சத்தியம் செய்கிறார்கள். உலக மின் உற்பத்தித்தர வழிகாட்டுதலின்படி, மின் உற்பத்தியின்போது, க்ரிடின் வழி மின்சாரம் பாய்ந்து மின் கடத்தல் நிகழும்போது ஏற்படும் மின் இழப்பு (Aggregate Technical And Commercial Loss)   4 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்கிறது. ஆனால், நாமோ 35 சதவிகிதத்தை இந்த வகையில் வீணாக்குகிறோம். குண்டுபல்பு, தரமற்ற விவசாய மோட்டார் பம்புகள் போன்ற வகை யில் பயன்பாட்டில் மேலும் 45 சதவிகித சக்தியை வீணடிக்கிறோம். இந்த இரண்டு வீணடிப்புக்கும் மிக முக்கியக் காரணம், நேர்மையற்ற, அறிவற்ற, செயல்திறனற்ற, பின்விளைவுபற்றிய சிந்தனை இல்லாத திட்டங்கள். அவற்றைத் திருத்தினாலே, இந்தியாவில் எங்குமே அணு உலைகளின் தேவையிருக்காது.
சரி... கரியும் எண்ணெயும் குறைந்துவருகிறது. அணுவோடு விளையாட்டு அவசியமற்றது. உண்மைதான். வேறு என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட 94 பில்லியன் மெகாவாட் ஆற்ற லைத் தினம் காலை முதல் மாலை வரை சூரியன் தருகிறது. அதைப் பயன்படுத்த நமக்கு ஏன் இத்தனை தயக்கம்? நிலக்கரி பேரம், யுரேனியம் இறக்குமதி ஊழல், எண்ணெய்ப் பங்கு என அந்த வகையறாவில் கிடைக்கும் ஊழல் பணம், சூரிய ஒளியில் எப்போதும் கிடைக் காது என்பதாலா? பிறகு, சூரிய சக்தியை மறுப் பதற்கு நமக்கு வேறெந்தக் காரணமும் தட்டுப் படவில்லையே!
போட்டோவோல்டைக்ஸ் (Photovoltaics)...  நாளைய உலகுக்கான ஆற்றல் படைக்கும் சூரிய சக்தி இது. 'அட... அங்க பாருங்க 1,000 மெகா வாட் சூரிய மின்சக்தியைப் பெறுகிறார்கள்’ என்று சமீபமாக எல்லாரும் குஜராத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தியாவில் உண்மையாகவே ஒளிரும் மாநிலமாகச் சொல்லப்படும் குஜராத் மட்டுமல்ல நண்பரே, பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் முன்னணி வகிக்கும் பீகார் கூடச் சத்தமே இல்லாமல் 1,600 மெகாவாட் சக்தி யைச் சூரிய ஒளியில் இருந்து அள்ளிக்கொள்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் இதற்கு 'அனா... ஆவன்னா’ போட்டிருக்கிறது. இருந் தாலும் வாழ்த்துவோம்!
தமிழகத்தில் ஏறத்தாழ வருடத்தின் 300 நாட்கள் தடையில்லா சூரிய ஒளி கிடைக்கும். வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 'வான மகள் நாணுகின்ற, வேறு உடை பூணுகின்ற’ நேரம் தவிர, மீதி நேரமெல்லாம் சூரிய சக்தி இங்கே இலவசம். நமக்கு உடனடித் தேவை சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் செல்கள்கொண்ட போட்டோவோல்டைக்ஸ் பேனல்கள் மட்டுமே. சராசரியாக ஒரு மாதத் துக்கு வீட்டு உபயோகத்துக்குத் தேவையான வெளிச்சத்துக்கும், காற்றுக்கும் 60 யூனிட் மின்சாரத்தை (ஏ.சி, குளிர்சாதனப் பெட்டி இல்லாமல்) அவரவர் வீட்டு மொட்டை மாடி யில் இருந்தே இலவசமாகத் தினமும் தயாரிக்க முடியும். ஆனால், அப்படித் தயாரித்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்தாலொழிய, நம்மில் பலர் மாற மாட்டோம். சுமாராக 50 லட்ச ரூபாய் முதலீடு இல்லாமல் சென்னையில் மட்டுமல்ல; தெற்கே பாளையங்கோட்டையிலும் தனி வீடு வாங்க முடியாது என்ற சூழலில், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சூரிய சக்தி பேனலை வீட்டில் பதிந்தால் மட்டுமே அந்த வீட்டைப் பதிவுசெய்வது சாத்தியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இடிந்த கரை கடல் நீர், அந்தப் பகுதி மக்களின் கண்ணீரால் மேலும் உப்புக் கரிக்காமல் இருக்கும்!  
இந்தியாவில் சுமார் 7,200 கி.மீ. (அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள் உள்ளடக்கிய) நீளமான கடற்கரை உள்ளது. ஒரு கி.மீ-க்கு ஒரு காற்றாலை போட்டால்கூட, ஏறத்தாழ 6,000 மெகாவாட் நமக்கு நிச்சயம். சூரியன் முழு வீரியத்துடன் வெளுத்துக்கட்டும் தார் பாலைவனத்தில் ஒரு சதுர கி.மீ-க்கு 35 மெகா வாட் சூரிய ஆற்றல் பெற முடியுமாம். கொஞ்சம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மொத்த இந்தியாவுக்கே சூரிய ஆற்றல் பெறுவதும்கூட இங்கே சாத்தியம்தான்!
சாத்தியமற்றதும், சுற்றுச்சூழலுக்குக் கேடானதுமான ஆறுகளை இணைக்கும் திட்டத்தைவிட, முதலில் மின்சார க்ரிடுகளை இணைத்தாலே ஒடிசாவில் வீணாகும் மின்சாரத்தை ஒட்டன்சத்திரத்துக்குக் கொண்டுவரலாம். நம் நாட்டில் ஏறத்தாழ 6,000 சிறு மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத் துக்கும் அதிகபட்சம் 15-20 மெகா வாட் மின்சாரம்தான் தேவைப்படும். அதை ஆங்காங்கே உற்பத்திசெய்துகொள்ளும் சிறு திட்டங்களைச் செயல்படுத்தினாலே போதும். இப்படி எல்லாம் யோசிக்காமல் கடல் நீரில் அணுக் கழிவை விடுவதும், காற்றை நஞ்சாக்குவதும், மண்ணுக்குள் கதிரியக்கக் கழிவுகளைப் புதைப் பதுமான கொடுஞ்செயலைப் புவியில் வேறு எந்த மிருகமும் எப்போதும் செய்யாது.
இதே நிலை நீடித்தால், இன்னும் 300 ஆண்டுகளில் மொத்தமே 50 மில்லியன் மக்கள்தான் உலகில் மிச்சம் இருப்பார்கள் என ஒரு சூழலியலாளர் அறிக்கை சொல்கிறது. 'இப்படித்தாம்பா சொல்லிட்டே இருப்பாங்க... இவங்களுக்கு வேற வேலை இல்லை!’ என அலட்சியம் வேண்டாம்.
2004 நவம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கலந்துரையாடல் ஒன்றில், சேது சமுத்திரத் திட்ட மக்கள் குழுக் கூட்டத்தில் சூழலியலாளர்கள், 'சுனாமி வரும் ஆபத்து இந்த சமுத்திரப் பகுதியில் உள்ளது’ என்று சொன்னபோது, 'கொல்’லெனச் சிரித்தது அந்த அரசுக் கூட்டம். அடுத்த மாதத்தில் பொங்கிப் பெருகிய சுனாமி 2,30,000 உயிரை வாரிச் சுருட்டிச் சென்றது வரலாறு. இப்போதும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டோம்!  
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment