Wednesday 31 October 2012

ஆறாம் திணை - 10

ரோக்கியமான வாழ்வை நோக்கி, பாரம்பரிய உணவு வகைகளை நோக்கிக் கிளம்பிய நம்முடைய பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறோம். அரிசி, கோதுமைக்கு மாற்றாக இந்த மண்ணில் கிடைக்கும், பல நூறு ஆண்டுகளாக நம்முடைய மூதாதையர் சாப்பிட்டுவந்த  சிறு தானியங்களில் முக்கியமான தானியங்களின் வரிசை இந்த வாரத்தோடு முடிகிறது. அடுத்து வரும் வாரங் களில் என்னவெல்லாம் சாப்பிடலாம், எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம். பாரம்பரிய சிறுதானிய வகைகள் பட்டியலில் கடைசி வரிசையில் இருக்கும் மூன்று கடைக் குட்டிகளை இந்த வாரம் பார்ப்போம். குதிரைவாலி, வரகு, சாமை!
 வரகரிசி என்று சொன்னதுமே ஒளவையின் நினைவு வருவது தவிர்க்க முடியாதது. 'வரகரிசியும் வழுதுணங்காயும்’ என்ற ஒளவை யின் ருசியான சேர்க்கை இருக்கிறதே... அதைச் சாப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும். (வழுதுணங்காய் என்றால் கத்திரி. ஒளவை வரகுச் சோறு வடித்து, கத்திரிக்காய் காரக் குழம்பு ஊற்றிச் சாப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்).
வரகுக்குக் காரக் குழம்பு சரியான சேர்க்கை என்றால், சாமைக்குத் தயிர் அட்டகாசமான சேர்க்கை. சாமையைஇரண்டாக உடைத்து, சோறாக்கி கெட்டித் தயிர் சேர்த்துச் சாப்பிட் டுப் பாருங்கள். அடடடடடா... சத்தியமாகச் சொல்கிறேன்... தயிர் சாதப் பிரியர்கள் வாழ் நாளுக்கும் சாமைத் தயிர் சாதம்தான் வேண்டும் என்று கேட்பீர்கள்.
எல்லாம் செய்தாயிற்று. குதிரைவாலியை எப்படிச் சாப்பிடுவது? பொங்கல் வையுங்கள் அய்யா. வெண்பொங்கல் ஆக்குங்கள்.  குதிரைவாலி, பாசிப் பருப்பு, மிளகு, இரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வெண்பொங்கல் பொங்கி, நெய்யில் அதை மிதக்கவிட்டு, மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிட்டுப் பாருங்கள். மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேடுவீர்கள்.
சரி, அப்படி என்ன நெல்லரிசி, கோதுமையில் இல்லாத சத்து இந்த வரகு, சாமை, குதிரைவாலியில்? சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் இவற்றில் வடிக்கும் சோறு இணையற்றது. புரதம் அதிகம். இரும்புச் சத்து அதிகம். உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து அதிகம்.
இந்த நார்ச் சத்துபற்றி கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது.
பட்டை தீட்டிய பச்சரிசி, தோல் நீக்கிய கோதுமை மாவில் நாம் அதிகம் இழப்பது நார்ச் சத்து. ஆனால், அதிக உடல் உழைப்பு இல்லாத இந்த யுகத்தில் நமக்கான அதிக தேவை இந்த நார்ச் சத்துதான் என்கிறது இன்றைய உணவு அறிவியல். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. ஆரம்ப காலத்தில், 'நார்ச் சத்து சுவையைக் குறைக்கும். ஜீரணத்தைத் தாமதப்படுத்தும். கொஞ்சம் மலத்தை இளக்கி அனுப்ப வேண்டுமானால் உதவும்’ என்றுதான் நினைத்திருந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து என்கிறது நவீன உணவியல் உலகம். அப்படி என்றால், அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் எவ்வளவு அற்புதமான தானியங்கள்?
   வெறும் சோறு மட்டும் அல்ல; நாம் அரிசி மாவில் செய்யும் அத்தனை தின்பண்டங்களையும் இந்த வரகு, சாமை, குதிரைவாலி மாவிலும் செய்ய முடியும். சென்னை- கொளத்தூரில் இயங்கிவரும் 'பெண்கள் இணைப்புக் குழு’ எனும் அமைப்பு  வரகரிசியிலும் குதிரைவாலியிலும் செய்யும் முறுக்கு, அதிரசம், லட்டு, சுருள் பக்கோடா வகை யறாக்களைப் பார்த்தபோது அசந்தே போனேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஷீலுவிடம் பேசியபோது, அவர் சொன்ன ஒரு விஷயம் நாம் எல்லோரும் கவனிக்க வேண்டியது. ''என்னதான் சிறுதானியங்கள் அற்புதமான குணங்களையும் ருசியையும் கொடுத்தாலும், பெரியவர்கள் மூலமாக அவற்றை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுசெல்வது கஷ்டம். காரணம், பெரியவர்கள் பழக்கத்தின் அடிமைகள். ஆனால், சின்னக் குழந்தைகள் அப்படி அல்ல. புதிய விஷயங்கள், புதிய ருசிக்கு அவர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். அதனால், குழந்தைகள் மூலமாக சிறுதானியங் களை வீட்டுக்குள் கொண்டுசெல்வதே சரியான முறை'' என்றார் ஷீலு. உண்மைதான். என் வீட்டில் அரிசி முறுக்கு, அதிரசம் வழக்கொழிந்து ரொம்ப காலம் ஆகிறது. உபயம்: என் வீட்டுப் பொடிசுகள்!
- பரிமாறுவேன்...

Wednesday 17 October 2012

ஆறாம் திணை - 09

"உலகத்தையே தொழில்நுட்பம்தான் ஆள் கிறது. ஆனால், நீங்களோ இன்னமும் இயற்கை விவசாயம், பாரம்பரியச் சாப்பாடு என்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு விரோத மாகவே எழுதுகிறீர்களே டாக்டர்'' என்றார் போன வாரம் தொலைபேசியில் வந்த ஒரு வாசகர். அதிர்ந்துபோனேன் நான். அதிர்ச்சிக்குக் காரணம், என்னைப் பற்றிய விமர்சனம் அல்ல; இயற்கை வேளாண்மை மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பீடு.
 இந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா? வேளாண்மை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. சொல்லப்போனால், செயற்கை வேளாண்மை வந்த பிறகுதான் நம்முடைய தொழில்நுட்ப அறிவு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்டது. தவிர, நாம் எல்லாம் நினைப்பதுபோல, வேளாண்மை யில் புதிய விஞ்ஞானத் தொழில்நுட்பம் என்பது, எல்லோருக்கும் உணவு அளிக்கும் நோக்கத்தைப் பிரதானமாகக்கொண்டது இல்லை. அதற்குப் பின் பல்லாயிரம் கோடி ரூபாய் வியாபாரம் இருக்கிறது. சில நூறு முதலாளிகள் பல கோடி விவசாயிகளைச் சுரண்டும் திட்டங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அவர்களுடைய லாபத்துக்காக விஷத்தை உணவாக நமக்குத் தின்னக் கொடுக்கும் சூழ்ச்சி இருக்கிறது. அதனால்தான், ஓட்ஸுக்கும் மக்காச்சோளத்துக்கும் எதிராக, நம்முடைய கேழ்வரகு, சோளம், கம்பைப் பற்றிப் பேச வேண்டி இருக்கிறது. சரி, இந்த வாரம் கம்பைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா!
சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.
அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு (பார்க்க அட்டவணை).
கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். அரிசியைக்காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து உள்ள இந்தத் தானியம், வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். அனைத்துச் சத்துக்களுமே சற்று தூக்கலாக உள்ள இந்த தானியம், வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.
பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.
கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.
இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
- பரிமாறுவேன்...

Wednesday 10 October 2012

ஆறாம் திணை - 08



ரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான் 'நைட் வாட்ச்மேன்’. அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?
 ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது சரி; சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது... உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம். . பாரம்பரிய சிறுதானியமான கேழ்வரகில் உள்ள சிறப்புகள்பற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் கிருஷ்ண பிரசாத் கேழ்வரகைப் பற்றிச் சொல்லும் தகவல்கள் பிரமிக்க வைக்கின் றன.
''கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது'' என்கிறார் கிருஷ்ண பிரசாத்.
அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம் (பார்க்க அட்டவணை). பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.
குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள - மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு - இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ''மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது'' என்றார்கள் அந்த அமைப்பினர்.
ஒரு முறை மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டுக்கு ஒரு  கருத்தரங்குக்காகச் சென்று இருந்தேன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி மசாலா வாடை இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. கொஞ்சம் பயத்தில் தலை சுற்றிய நிலையில், 'எங்காவது கொஞ்சம் சோறு தென்படுகிறதா?' என்று தேடிப் பார்த்தபோது, ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இதைச் சாப்பிடுங்க...' என்று ஒரு குவளையில் கஞ்சி கொடுத்தார். இஃப்தார் நோன்புக் கஞ்சி மாதிரி இருந்த அந்தக் கஞ்சியைக் கொஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர் கேழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் சொத்து. எங்களுடைய சிக்ஸ் பேக் உடம்புக்கும் சிறுத்தை மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரணம்' என்று சொன்னார் அந்த நண்பர். கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விலை இல்லாத ஊட்ட தானியமான இது தான் இன்று வரை வறுமை யில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உணவு. இன்றைய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகளப் போட்டிகளில் வில் எனப் பறக்கும் வேகத்துக்கும் கேழ்வரகின் கால்சியமும், அதில் உள்ள அமினோ அமிலங் களும்கூட காரணம் என்றால் அது மிகை யாகாது.
கேழ்வரகில் 'மித்தியானைன்’ எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரி தும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றனஆய்வு கள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?
 - பரிமாறுவேன்...

தித்திப்பால்!
ஞ்சியில் தொடங்கி தோசை, இட்லி, பொங்கல், அடை, புட்டு, இடியாப்பம், களி, கூழ், ஊத்தாப்பம் வரை கேழ்வரகில் சமைக்கலாம். சரி, விசேஷமாக ஒரு அயிட்டம்? கேழ்வரகுத் தித்திப்பால்!
கேழ்வரகை ஊறவைத்து, பால் எடுத்து, அதில் பனைவெல்லம் சேர்த்து கஞ்சி காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சம் நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ் வரகுத் தித்திப்பால். குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து உணவில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு சாப்பிடுவது சிலருக்கு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கலாம். ஆகையால், கேழ்வரகு உணவுடன் குளுமைக்காக பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது!

Wednesday 3 October 2012

ஆறாம் திணை - 07



ஒரு சந்தோஷமான செய்தியுடன் தொடங்குவோம். இன்னும் கொஞ்ச நாட்களில் மதிய உணவுத் திட்ட சத்துணவு, உண்மையிலேயே சத்தான உணவாகிவிடும். என்ன வார்த்தை விளை யாட்டு இது என்கிறீர்களா? ஆமாம். மத்திய வேளாண் துறை, அனைத்து மாநில அரசு களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி இனி, எல்லா மாநிலங்களும் தங்களுடைய மதிய உணவுத் திட்டத்தில், சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், நிச்சயம்  ஓர் அமைதிப் புரட்சிதான்.
 உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49 சதவிகிதத்தினர்; ஊட்டச் சத்துக் குறைவால் வளர்ச்சி தடைபட்டுள்ள குழந்தைகளில் 34 சதவிகிதத்தினர் இந்தியக் குழந்தை கள்தாம். இத்தகைய பின்னணியில், உலகின் மிகப் பெரிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியா, சிறுதானிய உணவுகளுக்கு மாறினால், அது எதிர்கால இளைய இந்தியாவை எவ்வளவு ஆரோக்கியமானதாக மாற்றும்? முயற்சி வெற்றி அடையட்டும்!
நம் கதைக்கு வருவோம். 'ஆறாம் திணை’யைப் படித்துவிட்டு என்னைத் தொடர்புகொள்ளும் வாசகர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி... ''டாக்டர், இந்தத் தினை, வரகு, கம்பு, சோளம்... இதை எல்லாம் கஞ்சி வைத்தோ, உருண்டை உருட்டியோதான் சாப்பிட முடியுமா?''
ஒரு சின்ன விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்... இந்தத் தினை, வரகு, கம்பு, சோளம்... இவை எல்லாமே அடிப்படையில் அரிசிபோலத்தான். அந்தக் காலத்தில் தினையரிசி, வரகரிசி என்று அரிசியின் பெயரைச் சேர்த்துதான் சொல்வார்கள். நெல் அரிசி என்பது அப்போதெல்லாம் விசேஷ நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ மட்டுமே சமைக்கப்படும் உணவாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லா நாட்களும் நெல் அரிசி சோறுக்கு நாம் மாறிவிட்ட பின்னரே அரிசி என்பது நெல் அரிசியை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. ஆகையால், தினை, வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று கேட்டால், அரிசியில் செய்யும் எல்லாமே செய்யலாம் என்பது தான் பதில்.
தினை இட்லி, சோளப் பணியாரம், வரகுப் புளியோதரை, குதிரைவாலிப் பொங்கல்... இப்படி உங்கள் விருப்பம்போலச் செய்து ருசிக்கலாம். ஒரே விஷயம்... இந்தத் தானியங்களைக்கொண்டு சமையல் செய்யும்போது அவற்றுக்கே உரிய இயல்புக்கு ஏற்ப உப பொருட்கள் சேர்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, சோள தோசை சுடுகிறீர்கள் என்றால், அரிசி அளவுக்கே சோளத்தைப் போட்டால், தோசை முறுகலாக இருக்கும். கொஞ்சம் உளுந்து கூடுதலாகச் சேர்த்துக்கொண்டால், தோசை பதமாக வரும். இந்தக் கூடக்கொறைச்சல் குறைகள் எல்லாம் முதல் இரு தடவைகள் வரலாம். அப்புறம் அப்புறம் நீங்களே நிபுணர் ஆகிவிடுவீர்கள். ஆகையால், தயக்கமின்றிக் கலக்குங்கள்.
சரி, பெருநிறுவன முதலாளிகள் உங்கள் அன்றாட உணவை மாற்றக் கண்டுபிடித்திருக்கும் ஒரு பெரிய சமாசாரத்தைப் பற்றி இந்த வாரம் அலசுவோம். உங்களுக்கு சோளத்துக்கும் மக்காச்சோளத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?
சோளம் என்றால், இப்போதெல்லாம் பெரும்பாலோருக்கு நினைவில் வருவது மக்காச்சோளம்தான். ஆனால், உண்மையில் நம்முடைய பாரம்பரியச் சோளம் அதுவல்ல. சிறு வெள்ளைச்சோளம்தான் நம்முடைய சோளம். புதிய மக்காச் சோளம் உற்பத்தியில் இன்று நாம் உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அது தென் அமெரிக்க நாட்டில் இருந்து வந்த பயிர்தான். வெள்ளைச் சோளம்தான் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும்கொண்டது. நம்ம ஊர் பாரம்பரிய சிறுசோளத்தையும் மக்காச்சோளத்தையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் புழுங்கல் அரிசியையும் கொஞ்சம் உற்றுப்பார்த்து ஒப்புநோக்கினால், பலவகையில் உப்புக்கள், உயிர்ச் சத்துக்கள், நார், கனிமங்கள் என எல்லாவற்றிலுமே சிறுசோளமே உயர்ந்து நிற்கும் (பார்க்க அட்டவணை).
அதிகம் மெனக்கெட முடியாத நம்முடைய காலைப் பொழுது அவசரத்தைப் புரிந்துவைத்திருக்கும் பெருநிறுவனங்கள், மாற்றுக் காலை உணவாகக் கொண்டுவர முனைவது மக்காசோளத்தைத்தான். ஆனால், விளம்பரங்களில் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சோள அவலின் பின்னணியும் அவ்வளவு நல்லதாக இல்லை நண்பர்களே. அதில் ஏகப்பட்ட சத்து இருப்பதாகச் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்டால்... நான் உங்களிடம் கேட்கிறேன்... அது எப்படித் தயாராகிறது என்று தெரியுமா உங்களுக்கு?
காலை உணவாக இன்று வேகமாகப் புகுத்தப்படும் சோள அவலின் உற்பத்தியை நீங்கள் நேரில் பார்த்தால், அதைச் சாப்பிடுவதே உங்களுக்குச் சங்கடமாகிவிடும். தானியத்தை வெந்நீரில் ஊறவைத்து, 40 டன் எடை கொண்ட ராட்சத இயந் திரங்களால் ஓங்கி ஓங்கி அறைந்து அடித்துத் தட்டையாக்கி, பின் 600 டிகிரி ஓவனில் 30 விநாடிகள் வேகவைத்து, உலர்த்தி எடுத்து, கடைசியாகத் தேவையான வைட்டமின்களையும் மினரல்களையும் தெளித்து, எப்போதும் உலர் வாக இருக்கவும் கெட்டுப்போகாமல் இருக் கவும் ரசாயனங்கள் சேர்த்து, அதிகபட்ச விலை யுடன் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.
ஒரு தானியம் கஷ்டப்பட்டு தன் குறைந்த வாழ்நாளில் சேமித்த உணவுக்கூறுகளை எல்லாம் இப்படி அடித்து, துவைத்து, காயப்போட்டுவிட்டு, கடைசியாக, செயற்கையாகச் சேர்க்கப்படும் ஊட்டச் சத்துக் கலவையில் என்னவெல்லாம் கலக்கப்படுகின்றன தெரியுமா? யாருக்குமே தெரியாது. யாருக்கும் அதைச் சொல்ல வேண்டியது இல்லை; அது எங்கள் தொழில் ரகசியம் என்கிறார்கள். கூடவே ரசாயனம் வேறு. இதோடு, நம் ஊர் சோளத்தில் செய்யப்படும் இட்லி, தோசையையோ, பணியாரத்தையோ ஒப்பிட்டுப்பாருங்கள். அவற்றின் உன்னதம் புரியும்.
தினம் தினம் இட்லி, தோசை சாப்பிடுவோருக்குச் சோள மாவு இட்லி, தோசை கூடுதல் பயன் அளிக்கும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். எதையுமே சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைக்கு, சோள தோசையைச் சூடாக, கொஞ்சம் மெலிதாகச் சுட்டுத்தாருங்கள். அதன் மொறுமொறுப்பில், அரிசி தோசையைக் காட்டிலும் அதிகப் புரதம், அதிக இரும்பு, அதிக உயிர்ச் சத்துக்கள், அதிகக் கனிமங்கள் கிடைக்கும். இட்லி, தோசை மட்டுமா? சோளப் பணியாரம் சுவையும் குணமும் நிறைந்த பாரம்பரிய உணவு (பார்க்க: செய்முறை). உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை அதற்கு உண்டு. 'கொஞ்சம் குண்டாக மாட்டாளா சார் என் குழந்தை?' என வருத்தத்துடன் கேட்கும் தாய்மார்கள் இந்தச் சோளத்தில் ஒரு நாள் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லமும் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுங்கள்; ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தையின் உடல் எடை கண்டிப்பாகப் பெருகும்.
ங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப் பவர்கள், சோளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு எவ்வளவோ சத்துக்களைத் தருகிறது சோளம். குறிப்பாக, எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ள பெண்களுக்குச் சோளம் கொடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்துக்கு இணையே கிடையாது.
 - பரிமாறுவேன்...