Wednesday 30 January 2013

ஆறாம் திணை - 20



கிர்ணிப்பழம் சைஸில் இருந்தது அந்தக் கொய்யாப்பழம். 'இவ்ளோ பெரிசா?’ என வாய் பிளந்தபோது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ஹைபிரிட் கொய்யா!'' என்றார் பழக் கடைக்காரர். பக்கத்தில், அப்படியே நம் ஊர் கொய்யா சைஸில், கொட்டை இல்லாத கலிஃபோர்னியன் திராட்சை; செக்கச்செவேல் என காபூல் மாதுளை, விதை இல்லாத பெரிய இலந்தை, 'லேத்’தில் அடித்துச் செய்ததுபோல் வார்த்தெடுத்த பளபள பெங்களூரு கேவன்டிஷ் வாழைப்பழம். விவரம் அறியாப் பழக்கடைக்காரர், ''எல்லாமே நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!'' என்றார். 'இனிப்பு மட்டும்தான் பழத்தின் சுவையா?’ என்ற யோசனையுடன் கொஞ்சம் நகர்ந்தபோது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் ஆஸ்திரேலியன் ஆரஞ்சு கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன.
 வழக்கமாக, கொஞ்சம் தொளதொளவென்ற தோலுடன், உரிக்க ரொம்பத் தோதாக இருக்குமே... அந்த கமலா ஆரஞ்சைக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடிவது இல்லை. ஆனால், கமலா ஆரஞ்சு பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லாம் 'கமலா’வுக்கோ, 'கமலாவின் பாட்டி’க்கோ தூரத்து உறவுகூடக் கிடையாது. இப்படி எல்லாமே பெரிது பெரிதாக, கண்களைஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி செய்யப்படும் இவை எந்த அளவுக்கு உடலுக்கும் உழவுக்கும் நல்லது?
'இனிப்புச் சுவைக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத் துப் பிள்ளைங்களைக் கெடுக்காதீங்க... பழம் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப பழங்கள் மேலயும் பழி சொல்றீங்க!’ என்று பதற வேண்டாம். பழங்களைப் பரிந்துரைப்பதன் காரணமே, அதில் நிறைந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் கூட்டு இனிப்பு சேர்த்து சுவைபட அவை வழங்கும் அற்புதமான மருத்துவத் திறனுக்காகத்தான். ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு இனங்கள் எத்தனை சத்து நிரம்பியவை? அதிக இனிப்பும், பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே இவற்றில் கிடைக்கும். ஒட்டு ரகங்களின் கூடுதல் இனிப்பைப் பார்த்தால், 'கொஞ்சம் வைட்டமின் தெளித்த மைசூர்பாகு தேவலையோ?’ எனத் தோன்றுகிறது.
கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்னைக்கும் உகந்தது என்பதால், மாதுளைக்கு எப்போதும் கனி வகையில் தனி இடம் உண்டு. ஆனால், தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையின் இனிப்பு, நம் ஊர் நாட்டு மாதுளையை ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிக்கும் சர்க்கரை வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? மெள்ள உள்வாங்கும் இனிப்புடன், இரும்புச் சத்தையும், நார்ச் சத்தை யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின் சுவையும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுளை, விலை குறைவாக, ஓரமாக இருப்பது வேதனை.
மதுரை, தேனிப் பக்கம் கொடி கட்டிப் பறக்கும் கொட்டை உள்ள பன்னீர்த் திராட்சையின் உள்ளே இருக்கும் விதைகூட ஆரோக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'மஸ்கட் திராட்சை’ என விவசாயிகளால் அழைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்சையின் கொட்டையில் உள்ள எண்ணெய், இதய நோய்க்கு மருந்து. 'ரிஸ்வெரட்ரால்’ எனும் சத்து நிறைந்திருக்கும் இந்த கிரேப் சீட் ஆயிலுக்கு இப்போது கிரேக்க உலகிலும் வளர்ந்த நாடுகளிலும் ஏக கிராக்கி. ஆனால் நாமோ, 'இதென்ன துவர்க்கிறது’ எனத் திராட்சையைத் தின்றுவிட்டு, கொட்டையைத் துப்புகிறோம். புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபோர்னியன் இனிப்பு திராட்சையை நமக்குக் கூடுதல் விலையில் தந்துவிட்டு, திராட்சை விதை எண்ணெயைக் கேப்சூல் குப்பியில் அடைத்து, மருத்துவரை வைத்து மிரட்டிச் சாப்பிடவைக் கிறார்கள்.
ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பெரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக, பெரிதாக நமக்குள் புகும் சுவைகள், இத்தனை நாள் இருந்துவந்த பழங்களின் பொத்தாம்பொதுவான பயனையும் காலி செய்துவிடுமோ என்று அஞ்சவைக்கிறது. உணவின் சத்து விஷயம் இப்படி என்றால், ஹைபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் உரமும், பூச்சிக்கொல்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும் மாசுபடுத்தும் கேடு இன்னொரு பக்க வேதனை.
'இத்தனை கோடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப் பக்கம் பறித்து வருவதைவைத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பேசுங்க பாஸ்!’ என இணையத்தில் இதைப் படிக்கும் யாரேனும் திட்டி எழுதக்கூடும். போதாக்குறைக்கு, போன வாரம் நமது பிரதம மந்திரி வேறு, 'விவசாயத்தில் தொழில்நுட்பம் ரொம்ப அவசியம். மேம்போக்காக எதிர்க்க வேண்டாம். விவாதிக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிஉள்ளார். நாங்களும் தொழில்நுட்பத்தை மேம்போக்காக எதிர்க்கவில்லை. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள் நோக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல் உன் அனுபவத்தைவிட மேலானது’ என்ற மமதை இன்றி விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விடை மட்டும் தான் சூழலுக்கு இசைவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம் தரும். நாட்டின் இறையாண்மைக்குப் பலம் தரும்; வாருங்கள் விவாதிப்போம்!
- பரிமாறுவேன்...

Friday 25 January 2013

ஆறாம் திணை - 19

என் புள்ளை போஷாக்கா வளர்றதுக்கு டானிக் ஏதாவது கொடுக்கலாமா டாக்டர்?'' - குழந்தைகள் மீது அக்கறை தொனிக்கும் இந்தக் கேள்வியை மருந்து நிறுவனங்கள் எப்படி உருமாற்றிக்கொண்டு இருக்கின்றன தெரியுமா? 32 பில்லியன் ரூபாய் சந்தையாக!
ஏறத்தாழ 46 சதவிகிதத்துக்கும் மேலான குழந்தைகள் சவலையாகவும் சத்துக்குறைபாட்டுடனும் இருக்கும் இதே நாட்டில்தான், இன்னொரு பக்கம் பால் மாவு, வைட்டமின் மாத்திரைகள், புரதச்சத்து மாவு, கூடுதல் ஊட்ட உணவுகள் என வகை வகையாகக் கொடிகட்டிப் பறக்கிறது ஊட்டச் சத்து வணிகம்.
'ரொம்ப மெலிஞ்சிருக்கானே புள்ள; இந்தப் புரத உணவைக் கொடுங்க; தோசை மாவுலகூடக் கரைச்சி ஊற்றலாம்'' என்ற நேரடி வணிகரின் சிபாரிசு, ''ஜீரோ சைஸ் இடுப்புடன் அழகா இருக்கணுமா? பட்டினி கிடங்க; வேற எதுவும் சாப்பிடாம இந்த டிரிங்க்கை மட்டும் குடிங்க; அப்படித்தான் எங்க நாத்தனார் 30 கிலோ குறைஞ்சாங்க தெரியுமா?'' என்ற கதைகள்; சிக்ஸ்பேக் உடம்புக்கு அந்தப் புரத மாவைச் சாப்பிட்டே ஆக வேண்டும்!'' என்று உடற்பயிற்சி நிலையங்களில் சொல்லப்படும் பரிந்துரைகள் என டப்பா புரதச் சத்து உணவு வணிகம் இன்று மிகமிக அதிகம். ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் கிட்டத்தட்ட  2,50,300 கோடிக்கு தனது புரத மாவை விற்கிறது.
'இந்த அவசர உலகில் இதெல்லாம் அவசியம்தானே சார்?' என நீங்கள் கேட்கலாம். பெரும்பாலும் சோள மாவிலும் பால் புரதங்களிலும் வைட்டமினும் கனிமங்களும் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஊட்டப் பொருளைக் காட்டிலும் நம் வீட்டு உணவுகள் எவ்வளவோ மேல் என்பதுதான் எங்கள் ஆதங்கம். டப்பா உணவைக் காட்டிலும் வீட்டுப் பொங்கலிலோ, சத்து மாவுக் கஞ்சியிலோ இருந்து பெறப்படும் புரதம் முழுமையாக உட்கிரகிக்கப்படும் என்பது பல முறை உணவியலாளர்களால் மறுபடி மறுபடி சொல்லப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக நம் பாரம்பரிய உணவுகளான வெண்பொங்கல், சோள தோசை, உளுந்தங்களி, பாசிப்பயறு மாவு உருண்டை, சத்து மாவு என இவை எல்லாமே ஊட்டம் தரும் புரத உணவு கள்.
தோசையிலோ, களியிலோ அல்லது சத்து மாவிலோ வாசம் போகாமல் இருக்க ரசாயனம் சேர்ப்பது இல்லை. பிடித்த வெனிலா வாசம் வேண்டும்... சாக்லேட் வாசம் வேண்டும் என்று மணக் கூறுகளைச் சேர்ப்பது இல்லை. கெட்டுப்போகாமல் இருக்க ஆன்டிஆக்சிடென்ட்டுகள் சேர்ப்பது இல்லை. பொலபொலவென உதிர வேண்டும் என சிலிக்கான் ரசாயனங்கள் சேர்ப்பது இல்லை. நீர்த்துவம் வந்துவிடக் கூடாது என நீர் உரிஞ்சும் வாயுக்கள் அல்லது உணவைப் பாதுகாக்க இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக் முதலான ஏராளமான உறைகள் போடுவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு ஸ்பூன் உணவுக்கு ஒரு நாள் சம்பளப் பணம் போடுவது இல்லை. ஆனால், சந்தையில் வரும் ஊட்ட உணவில் இத்தனையும் உண்டு தோழரே!
நம் பாரம்பரிய உணவில் என்ன உள்ளது தெரியுமா? ஆறு மாதங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து, திட உணவுக்கு கைக்குழந்தை போகும்போது ''டப்பா உணவு தேவை இல்லை. குருணையரிசி; பாசிப் பருப்பு; தேங்காய் எண்ணெய் இரண்டு துளி சேர்த்து கூழாகக் காய்ச்சிக் கொடுங்கள்' என்று இன்றளவும் சொல்லி வருபவர்கள் நம் பாட்டிகள் மட்டுமல்ல... உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும்தான். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ஹெச்.சி.எம். (High Calorie Meal).அதே குழந்தை சோறு சாப்பிட ஆரம்பிக்கும்போது பாசிப்பயறும் நெய்யும் மிளகும் சேர்த்து திணை அரிசியில் அல்லது சாமை அரிசியில்  வெண்பொங்கல் தயாரித்துக் கொடுங்கள். அது அளிக்கும் புரதச் சத்து, இரும்புச் சத்து, மிளகின் சத்து ஆகியவை இணைந்து சுவாச மண்டல நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கும். முளைகட்டிய பாசிப்பயறும் கேழ்வரகும் மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி, வறுத்த உளுந்து, நிலக்கடலை, கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் சுக்கு சேர்த்து அரைத்துத் தயாரிக்கும் சத்து மாவுக் கஞ்சி வெறும் புரதம் மட்டும் தருவது இல்லை; இரும்பும் கால்சியமும் இன்னும் உடலின் பல வளர்சிதை
மாற்றத்துக்குத் தேவையான தாவர நுண் பொருளும் சேர்த்துத் தரும்.
மாதவிடாய் துவங்கிய பெண்ணுக்கு இடுப்பைப் பலப்படுத்தும் என்று தாய் மாமன் சீதனமாக தரும் உளுத்தங்களியின் புரதம் இடுப்பை மட்டுமல்ல, கருப்பையையும் வலுப்படுத்தும் என்ற பாரம்பரிய தமிழ் மருத்துவக் கருத்தை இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்திஉள்ளன. இப்படி வாழ்வின் ஒவ்வொரு நகர்வுக்கும் நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டி, சில நேரம் கலாசாரத்தில் கலந்து காட்டிச் சென்ற உணவைக் காட்டிலும் இந்த டப்பா உணவு பெரிதாக நன்மை செய்வது இல்லை. மாறாக, இப்படி ஊட்டத்தை உடனடியாக டப்பா உணவின் மூலம் தருவதில், உடல் கொஞ்சம் கொஞ்ச மாக சத்துக்களைக் கனியில் இருந்தும் தானியத்தில் இருந்தும் பிரித்து எடுப்பதை மறந்துவிடுகிறது. சர்க்கஸ் சிங்கம், ரப்பர் வளையத்துக்குள் போவதைப் போல, இதுபோன்ற ஊட்ட உணவு களின் ஆக்கிரமிப்புகள் உடலின் ஆர்ப்பரிக்கும் ஆற்றலை வேகமாக இழக்கச் செய்யும். நேரம் இல்லை என்ற ஒரே விஷயத்துக்காக எதிர்காலத்தை மருந்துக்கு அடகுவைப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெடுவதும் கொஞ்சம் மூளைச் சலவை செய்யும் விளம்பரத்தைவிட்டு விலகி, பாரம்பரியத்தை உற்றுப் பார்த்தால் உண்மை தெரியும் நண்பர்களே!
                                                                                                                 - பரிமாறுவேன்...

Wednesday 9 January 2013

ஆறாம் திணை - 18

மாற்றுச் சிந்தனை பேசுபவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள்; வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்பிற்போக்குவாதிகள் அல்லது நாட்டை வல்லரசாகவிடாமல் தடுக்கும் அந்நியச் சக்திகளின் கைக்கூலிகள் என்ற பொய்ப் பிரசாரம் பகிரங்கமாகச் செய்யப்படும் காலம் இது. சரி... மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏன் புதுப்புது வரவுகளை, நவீனத்துவத்தை எதிர்க்கிறார்கள்? மாற்றுச் சிந்தனையாளர்கள் எதிர்ப் பது அறிவியலை அல்ல; அறிவியலும் தொழில்நுட்ப மும் அறத்தையும் மக்கள் நலத்தையும் கொன்று வணிகத்துக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கும் அடிவருடிகளாக மாறுவதைத்தான் எதிர்க்கிறார்கள்.
 இன்றைக்கு உலகம் அனுபவிக்கும் சகல சௌகரி யங்களுக்கும் மூலகாரணிகள் என்று நியூட்டனையும், டார்வினையும், கலீலியோவையும், ஐன்ஸ்டீனையும் நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களுடைய ஆரம்ப காலங்களில் அவர்கள் எல்லோருமே கலகக் காரர்களாகத்தான் பார்க்கப்பட்டார்கள் தெரியுமா? அன்றைக்கு வரை உலகம், 'இதுதான் உண்மையான விஞ்ஞானம்’ என்று எதை நம்பிக்கொண்டு இருந்ததோ அதை உடைத்து எறிந்தவர்களை, மாற்றுச் சிந்தனை யாளர்கள் என்று பார்க்கப்பட்டவர்களைத்தான் இன்றைக்கு உலகம் கொண்டாடுகிறது.
அடிப்படையில், முழுக்க முழுக்க இயற்கையைப் புரிந்துகொள்ளவும் அதன் மூலம் மனித நல்வாழ்வுக்கு வழி தேடவும் பிறந்தவைதான் அறிவியலும் தொழில்நுட்பமும். ஆனால் இன்றைய அறிவியல், மொத்தமாக வணிக மதத்துக்குள் போய்ச் சிக்கிக்கொண்டதுதான் பிரச்னை. இந்த வணிக மதத்துக்குப் பணம்தான் கடவுள். விஞ்ஞானி அதன் பூசாரி. பன்னாட்டு நிறுவனத்தினரும் அரசாங்கங்களும் அந்த வணிக மதக் கோயிலின் முதலாளிகள். ஐன்ஸ்டீனோ, கலீலியோவோ, டார்வினோ அந்த மதத்தில் இருந்து இந்த வணிக மதத்தில் தம் படைப்புகள் சிக்கும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அணுப் பிளவுக்கு அடித்தளம் அமைத்த ஐன்ஸ்டீனுக்கு, அதன் ஆதிக்க நீட்சி ஹிரோஷிமா, நாகசாகியை அழித்த அணுகுண்டுகளாக மாறும் எனத் தெரியாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் புல்பூண்டு முளைக்காத ஃபுகுஷிமாவாகவோ செர்னோபில்லாகவோ ஆகும் எனத் தெரியாது. பரிணாம வளர்ச்சியின் மீது வெளிச்சம் பாய்ச்சிய டார்வி  னுக்கு, அதன் வணிக நீட்சி பி.டி. கத்திரிக்காயாகவும் பி.டி. சோளமாகவும் உருவெடுக்கும் எனத் தெரியாது. ஆம் நண்பர் களே... உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால், அதுதான் உண்மை.
இன்றைய பெரும்பாலான ஆய்வுகள், மனித நலம் நாடி நடத்தப்படுவது இல்லை. ஆய்வுக்கு வரும் பணம், ஆய்வாளருக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பயணங்கள், ஆய்வாளருக்குக் கிட்டும் அறிவுசார் சொத்து உரிமை, அதில் இருந்து ஆயுள் முழுக்கக் கிடைக்கும் ராயல்ட்டி லாபம், இன்னும் சிலருக்கு, மிக அதிகபட்ச உயர் பதவிகள்.
கிட்டத்தட்ட 750-க்கும் மேற்பட்ட கேன்ச ருக்கு உதவக்கூடும் என நம்பப்படும் மருந்துகளின் காப்புரிமைகளை மொத்தமாக ஒரே ஒரு பன்னாட்டு நிறுவனம் தனது சட்டைப் பைக்குள் வைத்திருக்கிறது. இப்போதைய வணிகத் திட்டத்தில், இந்த 'சப்ஜெக்ட்களுக்கு’ 20 பில்லியன் டாலர் லாபம் கொட்டித் தரும் மூன்று மூலக்கூறுகளை மட்டும் விற்பனை செய்தால் போதும் என்று செய லாற்றும் அந்த நிறுவனத்துக்கு, அடையாறு கேன்சர் மருத்துவமனையில், 'இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையிலாவது நிச்சயம் உயிர் பிழைத்துவிடுவோமா?’ என்ற நம்பிக்கையில் காத்து நிற்கும் சாமானியனைப் பற்றிய அக்கறை துளியும் இருக் காது.
இந்த உலகில் ஒவ்வொருவர் உண்ணும் தாவரப் பொருளின் விதையும் தன் நிறுவனத்தில் மட்டுமே தயாரித்ததாக இருக்க வேண்டும் என மரபணு மாற்றிய உணவுத் தாவரங்களின் ஒரே கடவுளாக இருக்கும் நிறுவனத்துக்கு, 50 சென்ட் நிலத்தில், தாலிக் கொடியை அடகுவைத்து வானம் பார்த்து, வாய்க்கால் பார்த்துப் பயிர் செய்யும் விவசாயியின் வலியும் துயரமும் புரியாது.
பனை ஓலையில் இருந்து, காகிதத்தில் எழுதுவதை எதிர்ப்பது மடமை. காகிதத்தினால் அழியும் காடுகளைப் பார்த்து, கணினி உபயோகத்துக்கு மாறுவதைக் குறை சொல்வது முட்டாள்தனம். ஆனால், ரோஜாப்பூ சேலைக்குப் பொருத்தமாக சிவப்பு நிற செல்போன், கறுப்பு ஜீன்ஸுக்குப் பொருத்தமாக மஞ்சள் நிற லேப்டாப் என ஹேர்பின், ரிப்பன் போல வருடத்துக்கு ஒரு மின்சாதனப் பொருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவு களைக் கண்டிப்பாக எதிர்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
அந்தக் கழிவுகள் அனைத்தும் மண்ணுக்குத்தான் செல்கிறது. கொஞ்சநஞ்சம் அல்ல... கிட்டத்தட்ட 8,000 டன். 'பயன்படுத்து; தூர எறி’ எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அமெரிக்கா மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிவைப் பூமியில் கொட்டுகிறது. உலகத்தின் குப்பைக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும் சீனாவும்தான். ஈயம், செம்பு, பாதரசம், பல்லாடியம், கோபால்ட் கலந்து கொட்டப்படும் இந்தப் பேசாத செல்போன் கழிவுகள் பூமித் தாய்க்குச் செரிக்காது தோழா!
விதை மட்டும் அல்ல, கணினி துவங்கி சலவை சோப் வரை எந்தப் பொருளையும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று சொல்லியோ, சந்தைக்குப் புதிது என்றோ விற்பனைக்கு வரும் எதையும் உபயோகிக்கும்  முன்னர் ஒரு முறைக்கு மூன்று முறை சிந்தியுங்கள் நண்பர் களே!
சில புதுசுகளைக் காட்டிலும் பல பழசுகள் பாதுகாப்பானவை. அறிவியல் என்பது புதுமையில் மட்டும் இல்லை... பழமையிலும் உறைந்து இருக்கிறது!
- பரிமாறுவேன்...