Wednesday 26 December 2012

ஆறாம் திணை - 17

ங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்போதாவது அணில் குஞ்சு ஒன்று வேகமாக ஓடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? வாசலில் பால் பாக்கெட்டை எடுக்கச் செல்லும்போது, மைனாவின் குரலை எப்போதாவது கேட்டது உண்டா? நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
 சீக்கிரம் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். நெடுநாள் அவை உம்மோடு வாசம் செய்யப்போவது இல்லை. கூகுளில் மட்டுமே அவற்றைத் தேடிப் பார்க்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரலாம்.
சென்னையில் நாள்தோறும் கொட்டப்படும் 3,000 டன் திடக் கழிவுகளால், 61 வகை நீர்த் தாவர இனங்கள், 110 வகை ஏரியின நீர்ப் பறவை கள், 46 வகை மீன்கள் அழிந்திருக்கின்றன என்கி றார்கள் சூழலியலாளர்கள். யோசித்துப்பாருங்கள்... எத்தனை எத்தனை மரங்களை, வனங்களை, நீர்நிலைகளை, பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒவ்வொரு நாளும் அழிக்கிறோம் என்று.
இந்த அழிவு மற்ற உயிரினங் களை மட்டும் அல்ல; நம்மையும் தாக்குகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் மறைமுகமாக நடக்கிறது. தலைவிரித்தாடும் தற்போ தைய டெங்குவுக்கு மூல காரணம், இந்தியாவின் மோசமான குப்பை மேலாண்மை என செவிட்டில் அடித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நாமோ, குப்பையை மறந்துவிட்டு கொசுக்களைத் துரத்திக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால், எல்லா விஷயங்களையும் தாண்டி ஒரு பக்கம் மாற்றத்துக்கான விதைகளும் தூவப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 'சேலம் மக்கள் குழு’வின் முயற்சி அந்த வகையில்ஆனது.
மே 2010-ல் சேலம் மூக்கனேரி பகுதியில், நெடுங்காலமாக வறண்டு இருந்த ஒரு தாழ்வான பகுதியைச் செம்மைப்படுத்தத் துவங்கி இன்று 4.5 லட்சம் க்யூபிக் லிட்டர் தண்ணீரைக்கொண்ட ஏரியை நிர்மாணித்து உள்ளார்கள் இந்தக் குழுவினர். கிட்டத்தட்ட 7 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர் உயர்ந்திருப்பது கூடுதல் இனிப்புச் செய்தி. 42 வகைப் பறவையினங்கள் இப்போது மூக்கனேரி ஏரியில் வாழ்கின்றன என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பியூஸ் மானுஸ்.
அதேபோல், வேலூர் என்றதும் சி.எம்.சி-யைத் தாண்டி, கொடும் வெயிலும் மொட்டைப் பாறையும்தான் பலருக்கும் நினைவு வரும். கூடுதலாக எப்போதும் உள்ள தண்ணீர் கஷ்டமும். கொஞ்சம் ஆர்வம் மிக்க கல்லூரி மாணவர்களை வைத்து, பேராசிரியர் சீனிவாசன், வேலூர் மலைகளில், சிறிது சிறிதாக 50-க்கும் மேற்பட்ட குளங்களை நிர்மாணித்து, அந்த மாவட்டக் கிராமங்களின் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி, பறவைஇனங்களின் வாழ்விடத்தை உருவாக்கி, மலையைப் பசுமையாக்கி இருக்கிறார்.
'திம்பக்கு’- சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு. 'தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்துகிறார் களாமே?’ என்று நான் தேடிப் போன ஊர் இது. திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்கவைத்தது. கிட்டத்தட்ட 100 கிராமங்கள், ஏறத்தாழ 30,000 மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியா வின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தபூர்!) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக் கின்றனர் திம்பக்கு மக்கள். ஊரே தினையையும் ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது. அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச் சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலை யில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.
இத்தனை விவரங்களையும் கேட்டுவிட்டு பஸ் ஏறப் போகும்போது, திம்பக்குவில் பணியாற்றிக்கொண்டு இருந்த நண்பர் ஆசிஷிடம் வியந்துபோய், 'இவ்வளவு விஷயம் செய்திருக்கிறீர்களே, நீங்க எங்க படிச்சீங்க?’ எனக் கேட்டேன். அவர் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய்விட்டேன். 'உங்க ஊர் சென்னை டி.ஏ.வி-யில் படித்து, பின் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்து முடித்தேன்!’ என்றார். 'அப்போ அமெரிக்காவெல்லாம் போகலையா?’ என்றபோது, 'சீக்கிரம் நம்ம ஊருக்கு அமெரிக்காவில் இருந்து சாப்பிட வருவாங்க பாருங்க. இப்போதைக்கு நம் ஊரில் வாடி வதங்கும் விவசாயிக்கு எதாவது செய்வோம் எனக் கிளம்பிவிட்டேன்' என்றார், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த அந்தப் பொறியியல் பட்டதாரி. எனக்கு 'மாற்றத்தை விரும்புகிறாயா? மாற்றத்தை முதலில் உன்னில் இருந்து துவங்கு’ எனச் சொன்ன காந்தி நினைவுக்கு வந்தார். குறைகளைக் கண்களில் காணும் ஒவ்வொருவரும் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டிய கணம் இது தோழர்களே!
- பரிமாறுவேன்...

Wednesday 19 December 2012

ஆறாம் திணை - 16

”தினை, கேழ்வரகு, கம்பு என்று சிறுதானியத்தின் சிறப்பைப் பக்கம் பக்கமா எழுதுகிறீர்கள். நெல்லரிசி மேல் மட்டும் உங்களுக்குக் கோபமா டாக்டர்?'' என்று சிலர் கேட்பது உண்டு. அவர்களுக்காக மட்டும் அல்ல; 'நான் டயட்ல இருக்கேன்; சாதம் சாப்பிடறதே கிடையாது' என்று பெருமையாகச் சொல்லத் தொடங்கி இருக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கும் சேர்த்தே அரிசியைப் பற்றி இந்த வாரம் பேசலாம்.
அளவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பரிய அரிசி ரகங்கள் வெறும் உணவு அல்ல; அவை மருத்துவ உணவு. 'மணக்கத்தை, வாலான், கருங்குறுவை இந்த மூன்றும் ரணக்க‌ஷ்டச் சில்விஷத்தைப் போக்கும்; சீரகச் சம்பா போகாத வாதமெல்லாம் போக்கும்; குன்றி மணிச்சம்பா கொண்டால் அனிலமறும்'' என்று வகை வகையான அரிசி ரகங்களின் மருத்துவக் குணங்களைப் பட்டியல் இடுகிறது சித்த மருத்துவம். இன்னும் சர்க்கரை வியாதியே அரிசியால் தான் என அரைகுறை அறிவில் பேசுவோருக்கு, ''நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்' எனச் சர்க்கரை வியாதிக்காரருக்கு என்றே ஒரு ரகத்தைச் சொல்கிறது நம் தமிழர் பாரம்பரியம். குள்ளக்கார் அரிசியில் இட்லி தோசையும் மாப்பிள்ளைச் சம்பாவில் மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள் அடிமையாகிப்போவீர்கள்.
பாரம்பரிய அரிசி ரகங்கள் பல, 'லோ கிளைசிமிக்’ தன்மை கொண்டன. நிறைய நார்கொண்டவை. கறுப்பு, சிவப்பு நிறங் களைத் தரும் 'ஆந்தோசயனின்’ எனும் நிறமிச் சத்து கொண்டவை. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் 'லைகோபின்’ நிறமியைப் பிரித்தெடுத்து, புற்றுநோய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். பெல்ஜியத்தில் உடைத்த குருணைகளை உலகெங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்சைப் பிரித்து எடுத்து ஏராளமாக உணவியல் கூறுகள் உற்பத்திசெய்கிறார்கள்.
ஆனால், இங்கே பிரச்னை என்னவென்றால், இன்றைய தலைமுறையினருக்கு எது நல்ல அரிசி - அதாவது, நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்களின் சிறப்பு என்ன - என்பதே தெரியாததுதான்.
இன்றைக்கு எல்லாம் நாம் அரிசி அரிசி என்று கொண்டாடும் பட்டை தீட்டி, சீவிச் சிங்காரித்த வெள்ளை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே கிடையவே கிடையாது. அன்றைக்கு ஏறத்தாழ 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிடையே இருந்ததாக அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா சொல்வார். அப்போதைய பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன் விளைச்சல் தருமாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, ''உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கித்தான் ஆக வேண்டும்' என்று அதுவரை வேளாண் கலாசாரமாக இருந்ததை வேகவேகமாக வேளாண் தொழிலாக மாற்றின புதுத் தொழில்நுட்பங்கள். அப்போது இந்தோனேஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும் கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட் டதுதான் 'ஐ.ஆர்.8’ ரக அரிசி. விளைச்சலில் 2.5 டன்னுக்கு மேல் மகசூல் வந்தவுடன் உலகமே இந்த புதுப் படைப்பைக் கொண்டாடியது. இப்படியே கொஞ்ச நாட்களில் மேலும் மேலும் பல ரகங்கள் வந்தன. நம்முடைய பாரம்பரிய ரகங்களை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டபோதுதான், அவர்களுக்கு ஒரு விஷயம் உறைத்தது. புதிய ரகங்களுக்குத் தேவைப்பட்ட ரசாயன உரச் செலவும், புதுசு புதுசாக இந்தப் பயிரைத் தேடி வந்த பூச்சி புழுக்களும் விவசாயத்தையே ஓட்டாண்டி ஆக்குவது. 'அடடா! பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லையே என்று நினைத்தவர்கள் ஏராளம். ஆனால், அதற்குள்ளாக வணிகப் பிடிக்குள் பலமாகச் சிக்கிக்கொண்டது அரிசிச் சந்தை. கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கின்றன. வயிற்றுப்பசி போக்க இவை வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா என்பது புரியாமலே அரிசி என்றால், இன்றைக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத் தொடங்கிவிட்டோம்.
நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்கள் பெற்றிருக்கும் மருத்துவக் குணம் ஒரு பக்கம் என்றால், மண்ணுக்கேற்ற, அங்கு நிலவும் மழை, தட்பவெப்பத்துக்கேற்ற எல்லாச் சூழல்களுக்கும் ஈடுகொடுப்பதில் அவற்றுக்கு உள்ள இயல்பு இன்னொரு பக்கம் அசரவைக்கக் கூடியது. களர் நிலத்துக்கென்றே 'களர்பாளை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும் வீட்டுக்குக் கூரையாகவும் பயன்பட சிறப்பு வைக்கோலையும் சேர்த்துத் தரும் குள்ளக்கார் ரகம். ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கு என்றே விளையும் நீலஞ்சம்பா. சில நேரங்களில் படகில் சென்று, அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத் திருக்கிறோம். லேசான தூறலுக்கே குடை சாய்ந்து, இன்றைய உழவனை மண்ணுக்குத் தள்ளும் உயர் விளைச்சல் ரகங்கள் அல்ல அவை. இன்னும் பூச்சி புழு தாக்காத தமிழகத்தில் மட்டும் விளையும் ஏறத்தாழ 38 வகை ரகங்களை இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் பட்டியல் இடுகிறது.
வாரத்துக்கு ரெண்டு மூணு நாள் பாரம்பரிய அரிசியில் உணவு, மற்ற நாளில் சிறுதானியச் சோறு எனச் சாப்பிட்டால், பயமுறுத்தும் பல நோய்களின் இறுக்கமான பிடியில் இருந்து வேகமாக வெளிவர முடியும்.
''கேட்க ரொம்ப நல்லாயிருக்கு சார்... எங்கே இவை கிடைக்கும்?'' என்போருக்கு, ஒரு விஷயம்... கூகுளில் போய்ச் சொடுக்கினாலோ, கால் சென்டரில் கூப்பிட்டுச் சொன்னாலோ வீடு தேடி அவை வரும் நிலை இன்னும் இங்கே உருவாகவில்லை. ஆனால், ஊருக்கு ஊர் ஆங்காங்கே பாரம்பரிய உணவு தானியக் கடைகள் உருவாகிவருகின்றன. அவற்றை விற்கும் சமூக அக்கறை உள்ள பலரில், ஏதேனும் ஓர் ஊரில் இந்தத் தொழிலில் இருக்கும் ஒருவரைப் பிடித்தால், உங்கள் ஊர்ப் பக்கம் எங்கே இவை கிடைக்கும் என்பதை சொல்லிவிடுவார். நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால், நிச்சயம் கண்டறிய முடியும்... கொஞ்சம் மெனக்கெடுங்கள்!
- பரிமாறுவேன்...

Wednesday 5 December 2012

ஆறாம் திணை - 15

பிள்ளை, பிறந்ததும் அழவில்லை; சில மாதம் கழிந்தும் தவழவில்லை. மழலை மொழி பேசவில்லை. வயதுக்கு உரிய மன வளர்ச்சி இல்லை என்றால், நமக்கு மனம் எப்படி வலிக்கும்? கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கேரளத்தின் ஒரு பகுதியான வயநாடு ஊரில் மட்டும் மன வளர்ச்சியற்று இருக்கின்றனர். வழக்கமாகச் சந்தேகிப்பதுபோல, நெருங்கிய உறவுக்குள் திருமணமோ, மூளைக்காய்ச்சலோ இதற்குக் காரணமாக இல்லை. அங்கே ஏலக்காய்க்கும் முந்திரிக்குமான விவசாயத்துக்குத் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்’ பூச்சிக்கொல்லிதான் இதற்குக் காரணம்.
 பூச்சிக்கொல்லியின் கதை இப்படி என்றால், உரத்தின் கதை வேறு ரகம். சமீபத்தில் பஞ்சாப் அதிர்ந்தது. காரணம்? 11 கிராமங்களில் ஏராளமாகி இருக்கும் புற்றுநோய் பாதிப்புகள். நிலத்தடி நீரில் உலக சுகாதார மையம் நிர்ணயித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகக் கலந்திருக்கும் யுரேனியமே இதற்குக் காரணம் என்று தெரியவந்தபோது, 'பஞ்சாப்பில் எப்படியப்பா தண்ணீரில் யுரேனியத் துணுக்குகள்?’ என்று பாபா அணு சக்திக் கழகம் ஆய்வுக்கு வந்தது. பாசுமதி பயிருக்காக அங்கு நிலத்தில் ஏராளமாகக் கொட்டப்படும் உரங்களே மண்ணுக்கு அடியில் உள்ள கிரானைட் கற்களுடன் சேர்ந்து வளர்சிதை மாற்றம் அடைந்து, தண்ணீரில் யுரேனியம் கசிவுக்கு வழிவகுத்து இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.
பெருகிவரும் தொற்றாநோய்க் கூட்டத்துக்குச் சிதைவடைந்த வாழ்வியல் மட்டும் காரணம் இல்லை. இந்த மண்ணையும் நம் அன்றாட உணவு தரும் தாவரத்தையும் ரசாயன உரங்களால் விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளால் கெடுத்துவருவதும் மிக முக்கியக் காரணம்.
'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என மண்ணைக் கெடுக்காது பயிர் செய்து, தாவரத்தின் அடிக் குருத்தை மண்ணுக்கும் அதன் தண்டுப் பகுதியை மாட்டுக்குத் தீவனமாகவும் அதன் நுனியில் இருக்கும் கதிரை மட்டும் தன் உணவுக்கும் பயன்படுத்தியவர்கள் நம் விவசாயிகள். வேப்பம் புண்ணாக்கு, பசுந்தாள் உரம், மாட்டுச்சாணம் எனப் பயிருக்கு உணவிட்டனர் அன்று. நம் நாட்டில் மட்டும் அல்ல; எல்லா நாட்டிலுமே விவசாயம் இயற்கையாகத்தான் நடந்தது. பின்னர் எப்படித் திடீரென்று ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் உள்ளே புகுந்தன? ''இரண்டாம் உலகப் போர் திடீரென நின்றுபோனதில், திகைத்துப்போன ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்து என்ன செய்வது என வேகமாகத் திட்டமிட்டதில் விளைந்ததுதான் இந்த உரம் என்ற பெயரிலான ரசாயன வணிகம்'' என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
இந்திய அரசு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது. யாருக்கு? விவசாயிகளுக்கு. விவசாயிகள் மூலம் போகும் அந்தப் பணம் எங்கே போகிறது? நூற்றுச் சொச்சம் உர நிறுவனங்களுக்கு. செயற்கை விவசா யத்தின் பின்னுள்ள சங்கதி இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இன்னமும் ஏன் நம் உயிரைப் பணயம்வைத்து யாரோ சம்பாதிக்க வழிவகுக்கும் நவீன விவசாயத்தின் வாலைப் பிடித்து அலைய வேண்டும்? மாறக் கூடாதா?
இந்த விஷயத்தில் விவசாயிகள் மாற்றத்தின் முதல் படியில் காலடி எடுத்துவைத்துவிட்டார்கள். அடுத்த படி நாம் எடுத்துவைக்க வேண்டியது. எப்படி?
முதல் விஷயம்... மேக்கப் போட்ட புஷ்டிவாலாக்கள் மாதிரி காய்கறிகளை எதிர்பார்க்காதீர்கள். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் பளபளப்பாக இராது; புஷ்டியாகத் தெரியாது. ஆனால், சத்து மிக்க சுள்ளான்கள் அவை.
இரண்டாவது விஷயம்... சற்றே அவை விலை கூடுதலாகத்தான் இருக்கும். காரணம், இயற்கை விவசாயம் கொஞ்சம் கூடுதல் செலவாகும். 'இயற்கைக் காய்கறி என்றால், பலரும் வெறும் மாட்டு மூத்திரம், சாணி, வேப்பம் தழைதானே... அதுக்கெதுக்குக் காசு அதிகமாகப் போகுது?’ எனத் தவறாக நினைக்கிறார்கள். உரத்தைத் தவிர, மற்ற அனைத்துக்குமான செலவு விவசாயிக்கு எப்போதும்போல் அதிகம்தான். மானியத்தில் பெறும் ரசாயன உரம் ஒரு சட்டி தேவைப்படும் இடத்துக்கு, இயற்கை உரம் என்றால், ஒரு டிராக்டர் அளவு தேவைப்படும். வண்டிக் கூலி, ஆள் கூலி எல்லாம் இருக்கிறது. இன்னொரு விஷயம், தினம் சிக்கனமாக மலிவு விலையில் ரசாயன உணவை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, டாக்டர் ஃபீஸிலும் மருந் துச் செலவிலும் பின்னாளில் சொத்தை அடமானம்வைப்பது எந்த வகையில் புத்தி சாலித்தனம்?
மூன்றாவது விஷயம்... நீங்களே பயிர் செய்யலாம். 60 சதுர அடி நிலமோ, பால்கனியோ, மொட்டை மாடியோ இருந்தால் நீங்களும் விவசாயிதான். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்துமல்லி, பச்சை மிளகாய் என வீட்டுத்தொட்டியில் உங்க ளால் விளைவிக்கக் கூடிய காய்கறிப் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். பூச்சி புழு வந்தால் எனக் கேட்போருக்கு, இஞ்சி, பூண்டு அரைத்துத் தெளியுங்கள், அதுவே போதுமானது. உரம்? பயிர் ஊக்கம் பெற்று சத்தான காய்கறி தர, மண் வளம் பெற, மோர் கரைத்து ஊற்றுங்கள்; அதில் உள்ள லாக்டோபாசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கூட்டம், ஒரு சூப்பர் இயற்கை உரம் என்கின்றன ஆய்வு முடிவுகள். அப்புறம் என்ன, களத்தில் இறங்க வேண்டியதுதானே?  
- பரிமாறுவேன்...