Wednesday 19 December 2012

ஆறாம் திணை - 16

”தினை, கேழ்வரகு, கம்பு என்று சிறுதானியத்தின் சிறப்பைப் பக்கம் பக்கமா எழுதுகிறீர்கள். நெல்லரிசி மேல் மட்டும் உங்களுக்குக் கோபமா டாக்டர்?'' என்று சிலர் கேட்பது உண்டு. அவர்களுக்காக மட்டும் அல்ல; 'நான் டயட்ல இருக்கேன்; சாதம் சாப்பிடறதே கிடையாது' என்று பெருமையாகச் சொல்லத் தொடங்கி இருக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கும் சேர்த்தே அரிசியைப் பற்றி இந்த வாரம் பேசலாம்.
அளவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பரிய அரிசி ரகங்கள் வெறும் உணவு அல்ல; அவை மருத்துவ உணவு. 'மணக்கத்தை, வாலான், கருங்குறுவை இந்த மூன்றும் ரணக்க‌ஷ்டச் சில்விஷத்தைப் போக்கும்; சீரகச் சம்பா போகாத வாதமெல்லாம் போக்கும்; குன்றி மணிச்சம்பா கொண்டால் அனிலமறும்'' என்று வகை வகையான அரிசி ரகங்களின் மருத்துவக் குணங்களைப் பட்டியல் இடுகிறது சித்த மருத்துவம். இன்னும் சர்க்கரை வியாதியே அரிசியால் தான் என அரைகுறை அறிவில் பேசுவோருக்கு, ''நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்' எனச் சர்க்கரை வியாதிக்காரருக்கு என்றே ஒரு ரகத்தைச் சொல்கிறது நம் தமிழர் பாரம்பரியம். குள்ளக்கார் அரிசியில் இட்லி தோசையும் மாப்பிள்ளைச் சம்பாவில் மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள் அடிமையாகிப்போவீர்கள்.
பாரம்பரிய அரிசி ரகங்கள் பல, 'லோ கிளைசிமிக்’ தன்மை கொண்டன. நிறைய நார்கொண்டவை. கறுப்பு, சிவப்பு நிறங் களைத் தரும் 'ஆந்தோசயனின்’ எனும் நிறமிச் சத்து கொண்டவை. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் 'லைகோபின்’ நிறமியைப் பிரித்தெடுத்து, புற்றுநோய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். பெல்ஜியத்தில் உடைத்த குருணைகளை உலகெங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்சைப் பிரித்து எடுத்து ஏராளமாக உணவியல் கூறுகள் உற்பத்திசெய்கிறார்கள்.
ஆனால், இங்கே பிரச்னை என்னவென்றால், இன்றைய தலைமுறையினருக்கு எது நல்ல அரிசி - அதாவது, நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்களின் சிறப்பு என்ன - என்பதே தெரியாததுதான்.
இன்றைக்கு எல்லாம் நாம் அரிசி அரிசி என்று கொண்டாடும் பட்டை தீட்டி, சீவிச் சிங்காரித்த வெள்ளை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே கிடையவே கிடையாது. அன்றைக்கு ஏறத்தாழ 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிடையே இருந்ததாக அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா சொல்வார். அப்போதைய பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன் விளைச்சல் தருமாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, ''உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கித்தான் ஆக வேண்டும்' என்று அதுவரை வேளாண் கலாசாரமாக இருந்ததை வேகவேகமாக வேளாண் தொழிலாக மாற்றின புதுத் தொழில்நுட்பங்கள். அப்போது இந்தோனேஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும் கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட் டதுதான் 'ஐ.ஆர்.8’ ரக அரிசி. விளைச்சலில் 2.5 டன்னுக்கு மேல் மகசூல் வந்தவுடன் உலகமே இந்த புதுப் படைப்பைக் கொண்டாடியது. இப்படியே கொஞ்ச நாட்களில் மேலும் மேலும் பல ரகங்கள் வந்தன. நம்முடைய பாரம்பரிய ரகங்களை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டபோதுதான், அவர்களுக்கு ஒரு விஷயம் உறைத்தது. புதிய ரகங்களுக்குத் தேவைப்பட்ட ரசாயன உரச் செலவும், புதுசு புதுசாக இந்தப் பயிரைத் தேடி வந்த பூச்சி புழுக்களும் விவசாயத்தையே ஓட்டாண்டி ஆக்குவது. 'அடடா! பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லையே என்று நினைத்தவர்கள் ஏராளம். ஆனால், அதற்குள்ளாக வணிகப் பிடிக்குள் பலமாகச் சிக்கிக்கொண்டது அரிசிச் சந்தை. கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கின்றன. வயிற்றுப்பசி போக்க இவை வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா என்பது புரியாமலே அரிசி என்றால், இன்றைக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத் தொடங்கிவிட்டோம்.
நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்கள் பெற்றிருக்கும் மருத்துவக் குணம் ஒரு பக்கம் என்றால், மண்ணுக்கேற்ற, அங்கு நிலவும் மழை, தட்பவெப்பத்துக்கேற்ற எல்லாச் சூழல்களுக்கும் ஈடுகொடுப்பதில் அவற்றுக்கு உள்ள இயல்பு இன்னொரு பக்கம் அசரவைக்கக் கூடியது. களர் நிலத்துக்கென்றே 'களர்பாளை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும் வீட்டுக்குக் கூரையாகவும் பயன்பட சிறப்பு வைக்கோலையும் சேர்த்துத் தரும் குள்ளக்கார் ரகம். ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கு என்றே விளையும் நீலஞ்சம்பா. சில நேரங்களில் படகில் சென்று, அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத் திருக்கிறோம். லேசான தூறலுக்கே குடை சாய்ந்து, இன்றைய உழவனை மண்ணுக்குத் தள்ளும் உயர் விளைச்சல் ரகங்கள் அல்ல அவை. இன்னும் பூச்சி புழு தாக்காத தமிழகத்தில் மட்டும் விளையும் ஏறத்தாழ 38 வகை ரகங்களை இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் பட்டியல் இடுகிறது.
வாரத்துக்கு ரெண்டு மூணு நாள் பாரம்பரிய அரிசியில் உணவு, மற்ற நாளில் சிறுதானியச் சோறு எனச் சாப்பிட்டால், பயமுறுத்தும் பல நோய்களின் இறுக்கமான பிடியில் இருந்து வேகமாக வெளிவர முடியும்.
''கேட்க ரொம்ப நல்லாயிருக்கு சார்... எங்கே இவை கிடைக்கும்?'' என்போருக்கு, ஒரு விஷயம்... கூகுளில் போய்ச் சொடுக்கினாலோ, கால் சென்டரில் கூப்பிட்டுச் சொன்னாலோ வீடு தேடி அவை வரும் நிலை இன்னும் இங்கே உருவாகவில்லை. ஆனால், ஊருக்கு ஊர் ஆங்காங்கே பாரம்பரிய உணவு தானியக் கடைகள் உருவாகிவருகின்றன. அவற்றை விற்கும் சமூக அக்கறை உள்ள பலரில், ஏதேனும் ஓர் ஊரில் இந்தத் தொழிலில் இருக்கும் ஒருவரைப் பிடித்தால், உங்கள் ஊர்ப் பக்கம் எங்கே இவை கிடைக்கும் என்பதை சொல்லிவிடுவார். நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால், நிச்சயம் கண்டறிய முடியும்... கொஞ்சம் மெனக்கெடுங்கள்!
- பரிமாறுவேன்...

1 comment:

  1. நன்றி ஐயா அருமையானதொரு படைப்பு ...
    பாரம்பரிய மிக்க நெல் விதைகள் சிலவும் அதன் அரிசி சிலவும் கிடைக்கும்...
    ம.நந்தகுமார்
    9003232187(புலனம் )
    (தயவு செய்து மாலை 6 மணிக்கு மேல் அழைக்கவும்)

    ReplyDelete