Tuesday 23 July 2013

ஆறாம் திணை - 45

'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியையும் மாசுபடுத்திய
பின்னர், ஆற்றின் கடைசிச் சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும், இந்தப் பணத்தைத் தின்ன முடியாது என்று’  -செவ்விந்தியர்கள் கூற்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்தச் செய்திதான், இப்போது உலக மக்கள் அனைவ ருமே உணர வேண்டிய உண்மை.  
'ஆறாம் திணை’ தொடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, 'நீங்க சொல்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்தை என்னால் திருத்தி விட முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன செய்துவிட  முடியும்?’  அப்படி எல்லாம் நினைத்து மலைத்துவிடாமல், நிறையப் பேர் சத்தமே இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் நண்பர்களே! சிலர் தத்தம் வேலையோடு; சிலர் இதனையே வேலையாக!
நம் தமிழகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் செல்வம், 'கிரியேட்’ ஜெயராமன் போல சுற்றுச் சூழல் போராளிகளை நாம் அறிவோம். அதுபோல இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் தெரியுமா?
ஒரு நள்ளிரவில், போபால் யூனியன் கார்பைடு ஆலை விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலும் இருமலுமாகத் தன் மூன்று குழந்தைகளையும், வாயில் நுரை தள்ளும் கண வரையும் இழுத்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஏராளமான கும்பலுடன் மருத்துவமனைக்கு ஓடியவர் சம்பாதேவி சுக்லா. ஐந்தே ஆண்டுகளில் கணவரை சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு மகன்களை விநோதமான நோய்களுக்கும் பறிகொடுத்தார் அந்தப் பெண். ஆனால், அந்தத் துயரத்தை வெறுமனே கண்ணீருடன் அவர் கழிக்கவில்லை. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக் கொழுந்துகள்’ என்ற முழக்கத்துடன் தன்னைப் போலவே அந்த விபத்தில் பாதிப்புக்குள்ளான ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இழந்த பத்தா யிரத்துக்கும் மேலான நபர்களுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு களாகப் போராடிவரும் சம்பாதேவி, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போராளி.
இன்றைக்கும் வட இந்திய மலைகளில் கொஞ்சம் நெடு மரங்களையும் அடர்ந்த காடுகளையும் பார்க்க முடிகிறது என்றால், சிப்கோ என்ற அமைப்பின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் அது. உத்தரகாண்ட் பகுதியில் அரசாங்கமும் தனியாரும் இஷ்டத்துக்கு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்துவந்த நிலையை 100 பெண்கள் காந்திய வழியில் போராடி மாற்றி அமைத்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்த அமைப்புதான் சிப்கோ. 1974-ல் அவர்கள் மரங்க ளைக் கட்டி அணைத்து  நடத்திய போராட்டத்துக்குப் பின்னர்தான் மலைகளில் மரம் வெட்டுவதற்கு இந்தியாவில் கடுமையான சட்டம் பிறந்தது.
மழை, பஞ்சம், பூச்சிகளுக்கு ஈடுகொடுத்து நிற்கும் சுமார் 900 வகை பாரம்பரிய விதைகளை கிராமம் கிராமமாகச் சென்று தனி ஆளாகச் சேகரித்தவர் உத்தரகாண் டின் விஜய் சர்தாரி. விதைகளைக் காக் கும் போராட்டத்தில் அவர் ஆற்றும் பணிகளுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, 'கிராமத் துக்கு பஸ்ல போவேன். விதைகளைக் கேட்டு வாங்கிக்குவேன். கடைசி பஸ் கிளம்பிடுச்சுன்னா, அவங்க வீட்டுத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிக்குவேன். எனக்கு எதுக்குப் பணம்?’ என்று கேட்ட விஜய், இன்னும் சின்ன மண் வீட்டில் தான் வசிக்கிறார்.
ஆந்திரா முழுக்கப் பரவலாக, கிட்டத்தட்ட 11 லட்சம் ஹெக்டேர் நிலத்தைப் பூச்சிக்கொல்லி இல்லாத பூச்சி கட்டுப்படுத்தும் முறை மூலம் செப்பனிட்டு இருக்கிறது ராமானுஜயலு என்ற வேளாண் விஞ்ஞானி மற்றும் விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இணைந்த முனைப்பு.  இவர்களின் முயற்சியை ஐ.நா. சபை அங்கீகரித்து மற்ற நாடுகளை ஆந்திராவை எட்டிப்பார்க்கச் சொல்லி யுள்ளது. அந்த இரு தனி நபர்கள்விதைத்த விதை... இன்று மொத்த ஆந்திராவும் பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயத்தை நோக்கி நகர்கிறது!
மரபணுப் பயிருக்கான நாடு தழுவிய போராட்டத்தைக் கையிலெடுத்து இன்று வரை மரபணு உணவுப் பயிரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல்,போராடும் ஆஷா அமைப்பின் கவிதா குருகந்தி மற்றும் அனந்து, பாரம்பரிய ராகி, கம்பு முதலான பல்வேறு சிறுதானிய வகைகளை மீட்டு எடுத்து கர்நாடகம் முழுவதும் பரப்பிவரும் கிருஷ்ண பிரசாத், தன் 80 வயதிலும் புல்லட் ஓட்டிக்கொண்டு, 'என் பலத்துக்குக் காரணம் தெரியுமா... பாரம்பரிய விதை களைக்கொண்டு நான் செய்யும் நச்சிலா இயற்கை விவசாயம்தாம்ல...’ என மார் தட்டும் புளியங்குடி அந்தோணிசாமி, காப்புரிமைக்கும் விதையுரிமைக்குமாக பல ஆண்டுகளாகப் போராடிவரும் நவதானியா அமைப்பின் வந்தனா சிவா, பாரம்பரிய உணவுப் பொருளுக்கு என முதன்முதலாக அங்காடிவைத்து விழிப்பு உணர்வு செய்துவரும் நெல்லை கோமதி நாயகம்...  இப்படி எத்தனையோ பேர் நமக்கான அடையாளங்கள்.
கால் நூற்றாண்டு படிப்பு முடித்து பெற்ற வேலை, உயர் பதவிகளைத் தூக்கி எறிந்து களமிறங்கிப் பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்களைப் போல முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூழல் நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்கை செயலாற்றிட முடியும்!
'அம்மா.. நான் சாப்பாட்டை வீணாக்காம சாப்பிட்டுட்டேன்... பாருங்க’ என தட்டைக் காண்பிக்கும் உங்கள் குழந்தை, 'எதுக்கு வழியில தண்ணி பாட்டில் வாங்கிட்டு... வீட்ல இருந்தே எடுத்துட்டுப் போயிடலாமே?’ எனும் வீட்டுத் தலைவி, 'நான் ஒரு ஆள் போறதுக்கு எதுக்கு தனி கார்? கார் பூலிங் பண்ணிக்கலாமே!’ எனச் சொல்லும் தம்பி, 'பிளாஸ்டிக் பை வேண்டாம்... வீட்டுல இருந்தே பை கொண்டாந்து இருக்கேன்’ எனக் கடையில் சொல்லும் அக்கா, 'வாரம் ரெண்டு தடவையாவது எங்க வீட்ல வரகரிசி பொங்கல்; திணை உப்புமா; சோளப் பணியாரம் செய்வோம். உங்க வீட்லக்கா?’ எனத் திண்ணையில் பேசும் அம்மா, 'அம்மா... அம்மா... கிச்சன் குப்பையைப் போட்டு நான் வளர்த்த கத்தரிச் செடி பூ விட்டுருக்கு பாரு’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் குழந்தை... இவர்கள் எல்லோருமே சூழல் போராளிகள்தான்!
- பரிமாறுவேன்...

Wednesday 10 July 2013

ஆறாம் திணை - 43

ரைவேக்காடாக வெந்த அரிசியை வனஸ்பதியால் வறுத்துச் சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. ஆனால், இப்போது அந்த ஃப்ரைடு ரைஸ் இல்லாமல் இரவுவிருந்துகள் கிடையாது. 'அரிசியைவிட கோதுமை நல்லதாம்’ என நம்மில் ஆழமாக விதைக்கப் பட்ட தவறான கருத்தினால், உருளை, கேரட், காலிஃப்ளவர் என இங்கிலீஷ் காய்கறிகளின் பயன்பாடு ஏகத்துக்கும் பெருகிவிட்டது. சப்பாத்திக்கு வத்தக்குழம்பும், கத்திரிக்காய் பொரியலும் வைத்து நமக்குச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லை என்பதால், கோபி மஞ்சூரிய னுக்குக் காலிஃப்ளவரும், கடாய் வெஜிடபிளுக்கு உருளையின் பயனும் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
'ஊட்டியில் இருந்து வரும் பீட்ரூட், கேரட் எல்லாம் நமக்கானது அல்ல’ என்பதைச் சொல்லி, கத்திரியையும் வெண்டைக்காயையும் கடை விரித்து இருக்கும் சீவலப்பேரி பாட்டியிடம் மண்டியிட்டு, கூறாகவும் கொசுறாகவும் வாங்கிவரச் சொல்லித்தந்த அன்றைய அனுபவம் இன்று நம் குழந்தைகளுக்கு இல்லை. 'பிராக்கோலி கேன்சருக்கு நல்லதாமே; மஷ்ரூம்ல வைட்டமினும் புரதமும் கூடுதலாமே... அதுல குருமா வை மம்மி...’ என இங்கிலீஷ் காய்கறிக்கு வக்காலத்து வாங்கும் நம் குழந்தைகளுக்கு உள்ளூர் காய்கறிகளின் உசத்திபற்றி யாரும் சொல்லித் தரவே இல்லை. முந்தைய தலைமுறையோடு நாம் தொலைத்து வருவனவற்றில்  நாட்டுக் காய்கறிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது.
'கரிக்காய் பொரித்தாள்;
கன்னிக்காய்  தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடி செய்தாள்;
உருக்கமுள்ள அப்பைக்காய்
நெய் துவட்டல் ஆக்கினாள்’
- என்ற காளமேகப் புலவரின் பாடல் சொன்ன அத்திக்காய் (கரிக்காய்) பொரியல், வாழைக்காய் (கன்னிக்காய்) தீயல், மாங்காய் (பரிக்காய்) பச்சடி மற்றும் கத்தரி (அப்பைக் காய்) நெய் துவட்டல் நம்மைவிட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம் உயர்த்திப் பாடிய பாகல், பீர்க்கு, கொத்தவரை, மாதுளங்காய் வகை களில் பாதி இப்போது நம்மிடம் கிடையாது. மிச்சம் இருப்பவையும் வீரிய ஒட்டுரக மேக்அப்பில், கூடுதல் அழகாக இருந்தாலும் பயமாக இருக்கிறது. ஆனால், ஒரு முக்கிய மான விஷயம்... அத்தனை நாட்டுக் காய் கறிகளும் சத்து விஷயத்தில் இங்கிலீஷ் காய் களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல.
கத்திரிக்காய், குறைந்த கலோரியுடன், அதிக நார்ச் சத்துடன், குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸுடன் உடல் எடை குறைப்புக் கும் கொலஸ்ட்ரால் குறைப்புக்கும் உதவும். கத்திரி விதையில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும், அதன் கருநீலத் தோலில் நிறைந்துள்ள பாலிஃபீனால்களால் கிடைக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், சர்க்கரை, புற்றுநோய் முதலான பல வாழ்வியல் நோய்களுக்குப் பலன் அளிக்கக் கூடியது. 'கத்திரிக்காய் பித்தங்கன்றைக் கபந் தீர்ந்துவிடும். முத்தோஷம் போக்கும்’ எனச் சித்தர்கள் பாடியதை, பி.டி. கத்திரிக்கு எதிரான போராட்டத்தில் எடுத்துச் சொன்னபோது, அதை முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி ஏற்றுக்கொண்டு, கத்திரியின் மரபு விளையாட்டை நிறுத்திவைத்தார். ஆனால், இன்றும் பல மெத்தப் படித்த அறிவியல் அறிஞர்கள், 'கத்திரிக்காய்க்கு அப்படி எல்லாம் ஒண்ணும் சிறப்பு இல்லை. பாரம்பரிய மருத்துவத்தில் அதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை. மரபணு மாற்றம் செய்யலாம்’ என தற்போதும் நூல் எழுதிவருவது வேதனை அளிக்கிறது. கத்திரியில் பொய்யூர் கத்திரி, கண்ணாடிக் கத்திரி, வரிக் கத்திரி, பச்சைக் கத்திரி என 500-க்கும் மேற்பட்ட வட்டார வகைகள் உண்டு. ஒவ்வொரு வகைக்கும் ஒரு மணம், ஒரு குணம் எனப் பண்புகளும் உண்டு. அலர்ஜிக்காரர்கள் தவிர, அத்தனை பேருக் கும் நாட்டுக் கத்திரி உணவல்ல; ஊட்ட மருந்து!
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வருமா என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. அது தன் மக்குப் பையனைச் சாப்பிடவைக்க யாரோ ஒரு கணக்கு டீச்சர் உருவாக்கிய கதையாகக்கூட இருக்கலாம். ஆனால், வெண்டைக்காய் குளிர்ச்சி தரும், வயிற்றுப் புண் நீக்கும், சர்க்கரை நோய்க்கு நல்லது என்பதற்குப் பல மருத்துவச் சான்றுகள் உள்ளன. எண்ணெயில் வதக்கி, அதைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிச் சுவைக்காமல், லேசாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது. ஆனால் கண்ணாடி, பச்சை, சிவப்பு, கஸ்தூரி என்ற ஊருக்கு ஒன்றாக இருந்த வெண்டையின் வட்டார வகைகள் எல்லாம் அருகிப்போய், இன்று 'ஆபீஸ் வெண்டை’ எனும் ஒட்டு வீரிய ரகம்தான் விவசாயிகளின் ஓட்டுக்களை அள்ளுகிறது. கஸ்தூரி வெண்டையின் நரம்பை உரமாக்கும் பயனை ஆபீஸ் வெண்டை தராது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவரைக்காயும் அப்படித்தான். கொலஸ்ட்ராலைக் குறைக்கும், வைட்டமின்-பி சத்தையும் புரதத்தையும் சேர்த்துத் தரும். அவரை விதை ஆண்மைக் குறைவுக்கும்கூட நல்லது. அவரைக் குடும்பத்தின் ஒண்ணுவிட்ட மச்சினனான கொத்தவரங்காயை வாய்வுக் குத்து என நம்மில் பலரும் ஒதுக்கிவிடுவது உண்டு. ஆனால், அதன் விதைப் பிசினான, guar gum உலகில் மிக அதிகம் தேடப்படும் பிசின். அதில் உள்ள நார்ச் சத்துகள் ரத்தக் கொழுப்பைக்கூடக் குறைக்க உதவுமாம்.
அதேபோல், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை எளிதாகப் போக்கிடும் வெள்ளைப் பூசணியும், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கோவைக்காயும், சிறுநீரகக் கல்லை வெளியேற்றிட உதவிடும் சுரைக்காயும், உடல் சூட்டைத் தணித்து, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் உப்புக்கனிமச் சத்துகள் நிறைந்த பீர்க்கங்காயும் நலம் பயக்கும் நம் நாட்டுக் காய்கறிகள்தான்.
'அட... நாட்டுக் காய்கறிதானே’ என்று இனியும் அலட்சியப்படுத்திட வேண்டாம். நாளைய நல வாழ்வுக்கான நம்பிக்கைகள் அவை!
- பரிமாறுவேன்...

Wednesday 3 July 2013

ஆறாம் திணை - 42



‘சிறுகை அளாவிய கூழ்...’
''சார்... அது என்ன ஏதாவது புது சிறுதானியக் கூழ் வகையா? ரெசிபி சொல்லுங்க!'' எனக் கேட்போர், புறநானூற்றில் பயணம் துவங்கி திருக்குறளில் கொஞ்சம் இளைப்பாற வேண்டும். அன்றே புறநானூற்றில் அன்னை தனக்கு ஊட்டுவதற்கு வைத்திருந்த சோற்றை ஒரு குழந்தை கையில் பிசைந்து விளையாடி மகிழ்ந்ததை,
'இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்,நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்’ எனச் சிலாகித்திருக்கிறது. திருக்குறளோ அதற்கு ஒருபடி மேல் போய், 'அந்த கூழாகிப்போன உணவின் சுவை, அமிழ்தத்தைவிட இனிதானதல்லவா?’ என,
'அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என மக்கட்பண்பில் போற்றுகிறது.
ஆனால், இன்றைய இளம் தாய்மார்களோ, 'ஒரு ரெண்டு நிமிஷம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள சாதத்துல கையைப் போட்டு உழப்பிட்டியா? யாராச்சும் கையில சாப்பிடுவாங்களா... ஜெர்ம்ஸ்... கிருமி!’ எனக் குழந்தை யின் கையை வேகமாக உதறி, ஒரு மிரட்டு மிரட்டுகிறார்கள். ஏற்கெனவே ஏப்ரன் கட்டி 'மைனர் ஆபரேஷன்’ நோயாளி கணக்காக 'பேபி சிட்டர்’ இருக்கையில் அமரவைக்கப்பட்டிருக்கும் குழந்தை, 'அம்மா... குப்பையையும் தொடக் கூடாதுங்கிறா. சாப்பாட்டையும் தொடக் கூடாதுங் கிறா!’ என இரண்டையும் ஒரே புள்ளியில் பொருத்தித் தன் மனதில் பதித்துக்கொள்ளும்.
சமீபத்தில் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தபோது ஒரு அம்மா தன் இடதுபக்க இடுப் பில் குழந்தையை வைத்துக்கொண்டு, இடது கையில் பருப்புச் சோறு குழைத்துவைத்திருந்த சிறு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு தன் வலக்கை விரல்களால் ஏற்கெனவே குழைந்திருந்த அந்த பருப்புச் சாதத்தை இன்னும் நசுக்கிக் குழைத்து, ஆள்காட்டி விரலும் நடுவிரலும் இணைந்த பகுதி யில் இருந்த சாதத்தைத் தன் பெருவிரலால் குழந்தையின் புதிதாக முளைத்த பல் தாங்கும் மெல்லிய ஈறுகள் வலித்துவிடாதபடி பரிமாறிய காட்சியைக் கண்டேன். அர்த்தம் நிறைந்த கவிதை!
எங்கே போனது இந்தக் கரிசனம்? கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆனால், ஸ்பூன்தான் சுத்தம் என்று விரல்களை விலக்குவதுதான் வலிக்கிறது. பல் ஈறு தட்டாமல் பரிமாற ஸ்பூனுக்குத் தெரியாது. பல்லின் பலம் அறிந்து குழைவைக் கைகளாலேயே கூட்ட ஸ்பூனுக்குத் தெரியாது. இடுப்பில் இருக் கும் குழந்தையின் வயிறு நிறைவது நாற்காலிக்குத் தெரியாது. ஒவ்வோர் உருண்டைக்கும் பின் முதுகில் லேசாகத் தட்டிவிட நாற்காலிக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, 'அடிச்சட்டி ஆனைபோல, இது மட்டும்தாண்டா... வாங்கிக்கோ செல்லம்’ எனச் சொல்லி கடைசி உருண்டையை வழித்து, உருட்டி வாய்க்குள் தள்ளும் தாயின் விரல் சுவையை ஸ்பூன் சத்தியமாகத் தராது!
துரித யுகத்தில் இங்கே பெரும்பாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு அன்னை மடி கிடையாது. எல்லாமே மேஜை மடிதான். 'ஸ்கூல் விட்டு வந்தவுடனே டேபிள்ல உள்ள கார்ன் ஃப்ளேக்ஸ்ல ஃப்ரிஜ்ல இருக்குற பாலை ஊத்திச் சாப்பிடு. அதுக்கும் மேல பசிச்சா, சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட் எல்லாம் இருக்கு. ஆப்பிளை வெட்டுறேன்னு கைய வெட்டிக்காத’ எனப் பல அக்கறைக் கட்டளைகளை அவசரமாக மம்மி - டாடிகள் சொல்லி அனுப்ப, 'சாயந்தரம் மட்டுமே பசிக்கும்’ பல நகர்ப்புறக் குழந்தைகள், தொலைக்காட்சி முன் அமர்ந்து, அத்தனையையும் தனியே சாப்பிட்டு சீக்கிரம் குட்டிக் குண்டர்கள் ஆவார்கள். அல்லது எதையும் சாப்பிடாமல், பிஸ்கட் டின் கிரீமை மட்டும் விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொடுக்கும்படி நக்கிச் சாப்பிட்டுப் பசியாறுவார்கள்.
''அதுக்குத்தான் சார்... வீக் எண்ட் ஹோட்டல்ல மொத்த ஃபேமிலியும் சாப்பிடுறோம்!'' என அவசரமாகச் சாக்கு சொல்லாதீர்கள். எப்போதேனும் உணவு விடுதிக்குச் சென்று மனம் மகிழப் பேசி வகை வகையான உணவருந்தி வருவதில் தப்பு இல்லை. ஆனால், தற்போதைய நவீன உணவு விடுதிகள் சிலவற்றின் விஷம சூட்சுமங் களைப் புரிந்துகொள்ளுங்கள்.  
'ஹோட்டலுக்குப் போனால்கூட நான் ஆரோக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிடு வேன். கோதுமை தந்தூரி ரொட்டி கடாய் வெஜிடபிள் கொண்டுவாப்பா!’ என்று நீங்கள் சொன்னால், முன்பே வெட்டிவைத்து, மைக்ரோ ஓவனிலோ நீராவியிலோ வெந்த இங்கிலீஷ் காய்கறிகள், இரண்டு நாளைக்கு முன்னரே செய்த தக்காளி, வெங்காய கிரேவியுடன், சில தினங்களுக்கு முந்தைய இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் வேக வேகமாகச் சூடாக்கப்பட்டு, கொஞ்சம் சுவையூட்டி ரசாயன உப்புக்கள் சேர்க்கப்பட்டு, உங்கள் தட்டுக்கு வரும். உங்கள் வீட்டுச் செல்லங் கள், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்திருப் பார்கள். அவை முந்தைய இரவே வேகவைக்கப் பட்டு ஈரத் துணியில் சுற்றி பிரிஜ்ஜுக்குள் இருந்து எடுக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு, மிக்ஸிங் செய்து, பொலபொலவென அலங்கரித்து, மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் வரும். எல்லா உணவகங்களும் அப்படி இல்லைதான். ஆனால், 'வீணாவதைத் தடுப்பதில்தான் விடுதியின் லாபம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றும் உணவகங்கள்தான், இங்கே பெரும்பான்மை. அதிலும் பல தந்தூரி உணவகங்களுக்குள் நுழையும் எந்த உணவுப் பொருளும் கழிவாகவோ காலாவதியாகவோ குப்பையில் கொட்டப்படாது. இப்படியான உணவக வியாபார சூத்திரங்களைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டில் சமைத்து, மெனக்கெடலுடன் பரிமாறி, ஊட்டி உறவாடும் கரிசனங்களில் இந்தப் பயம் எப்போதும் இல்லை!
- பரிமாறுவேன்...