Wednesday 3 July 2013

ஆறாம் திணை - 42



‘சிறுகை அளாவிய கூழ்...’
''சார்... அது என்ன ஏதாவது புது சிறுதானியக் கூழ் வகையா? ரெசிபி சொல்லுங்க!'' எனக் கேட்போர், புறநானூற்றில் பயணம் துவங்கி திருக்குறளில் கொஞ்சம் இளைப்பாற வேண்டும். அன்றே புறநானூற்றில் அன்னை தனக்கு ஊட்டுவதற்கு வைத்திருந்த சோற்றை ஒரு குழந்தை கையில் பிசைந்து விளையாடி மகிழ்ந்ததை,
'இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்,நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்’ எனச் சிலாகித்திருக்கிறது. திருக்குறளோ அதற்கு ஒருபடி மேல் போய், 'அந்த கூழாகிப்போன உணவின் சுவை, அமிழ்தத்தைவிட இனிதானதல்லவா?’ என,
'அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என மக்கட்பண்பில் போற்றுகிறது.
ஆனால், இன்றைய இளம் தாய்மார்களோ, 'ஒரு ரெண்டு நிமிஷம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள சாதத்துல கையைப் போட்டு உழப்பிட்டியா? யாராச்சும் கையில சாப்பிடுவாங்களா... ஜெர்ம்ஸ்... கிருமி!’ எனக் குழந்தை யின் கையை வேகமாக உதறி, ஒரு மிரட்டு மிரட்டுகிறார்கள். ஏற்கெனவே ஏப்ரன் கட்டி 'மைனர் ஆபரேஷன்’ நோயாளி கணக்காக 'பேபி சிட்டர்’ இருக்கையில் அமரவைக்கப்பட்டிருக்கும் குழந்தை, 'அம்மா... குப்பையையும் தொடக் கூடாதுங்கிறா. சாப்பாட்டையும் தொடக் கூடாதுங் கிறா!’ என இரண்டையும் ஒரே புள்ளியில் பொருத்தித் தன் மனதில் பதித்துக்கொள்ளும்.
சமீபத்தில் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தபோது ஒரு அம்மா தன் இடதுபக்க இடுப் பில் குழந்தையை வைத்துக்கொண்டு, இடது கையில் பருப்புச் சோறு குழைத்துவைத்திருந்த சிறு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு தன் வலக்கை விரல்களால் ஏற்கெனவே குழைந்திருந்த அந்த பருப்புச் சாதத்தை இன்னும் நசுக்கிக் குழைத்து, ஆள்காட்டி விரலும் நடுவிரலும் இணைந்த பகுதி யில் இருந்த சாதத்தைத் தன் பெருவிரலால் குழந்தையின் புதிதாக முளைத்த பல் தாங்கும் மெல்லிய ஈறுகள் வலித்துவிடாதபடி பரிமாறிய காட்சியைக் கண்டேன். அர்த்தம் நிறைந்த கவிதை!
எங்கே போனது இந்தக் கரிசனம்? கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆனால், ஸ்பூன்தான் சுத்தம் என்று விரல்களை விலக்குவதுதான் வலிக்கிறது. பல் ஈறு தட்டாமல் பரிமாற ஸ்பூனுக்குத் தெரியாது. பல்லின் பலம் அறிந்து குழைவைக் கைகளாலேயே கூட்ட ஸ்பூனுக்குத் தெரியாது. இடுப்பில் இருக் கும் குழந்தையின் வயிறு நிறைவது நாற்காலிக்குத் தெரியாது. ஒவ்வோர் உருண்டைக்கும் பின் முதுகில் லேசாகத் தட்டிவிட நாற்காலிக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, 'அடிச்சட்டி ஆனைபோல, இது மட்டும்தாண்டா... வாங்கிக்கோ செல்லம்’ எனச் சொல்லி கடைசி உருண்டையை வழித்து, உருட்டி வாய்க்குள் தள்ளும் தாயின் விரல் சுவையை ஸ்பூன் சத்தியமாகத் தராது!
துரித யுகத்தில் இங்கே பெரும்பாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு அன்னை மடி கிடையாது. எல்லாமே மேஜை மடிதான். 'ஸ்கூல் விட்டு வந்தவுடனே டேபிள்ல உள்ள கார்ன் ஃப்ளேக்ஸ்ல ஃப்ரிஜ்ல இருக்குற பாலை ஊத்திச் சாப்பிடு. அதுக்கும் மேல பசிச்சா, சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட் எல்லாம் இருக்கு. ஆப்பிளை வெட்டுறேன்னு கைய வெட்டிக்காத’ எனப் பல அக்கறைக் கட்டளைகளை அவசரமாக மம்மி - டாடிகள் சொல்லி அனுப்ப, 'சாயந்தரம் மட்டுமே பசிக்கும்’ பல நகர்ப்புறக் குழந்தைகள், தொலைக்காட்சி முன் அமர்ந்து, அத்தனையையும் தனியே சாப்பிட்டு சீக்கிரம் குட்டிக் குண்டர்கள் ஆவார்கள். அல்லது எதையும் சாப்பிடாமல், பிஸ்கட் டின் கிரீமை மட்டும் விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொடுக்கும்படி நக்கிச் சாப்பிட்டுப் பசியாறுவார்கள்.
''அதுக்குத்தான் சார்... வீக் எண்ட் ஹோட்டல்ல மொத்த ஃபேமிலியும் சாப்பிடுறோம்!'' என அவசரமாகச் சாக்கு சொல்லாதீர்கள். எப்போதேனும் உணவு விடுதிக்குச் சென்று மனம் மகிழப் பேசி வகை வகையான உணவருந்தி வருவதில் தப்பு இல்லை. ஆனால், தற்போதைய நவீன உணவு விடுதிகள் சிலவற்றின் விஷம சூட்சுமங் களைப் புரிந்துகொள்ளுங்கள்.  
'ஹோட்டலுக்குப் போனால்கூட நான் ஆரோக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிடு வேன். கோதுமை தந்தூரி ரொட்டி கடாய் வெஜிடபிள் கொண்டுவாப்பா!’ என்று நீங்கள் சொன்னால், முன்பே வெட்டிவைத்து, மைக்ரோ ஓவனிலோ நீராவியிலோ வெந்த இங்கிலீஷ் காய்கறிகள், இரண்டு நாளைக்கு முன்னரே செய்த தக்காளி, வெங்காய கிரேவியுடன், சில தினங்களுக்கு முந்தைய இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் வேக வேகமாகச் சூடாக்கப்பட்டு, கொஞ்சம் சுவையூட்டி ரசாயன உப்புக்கள் சேர்க்கப்பட்டு, உங்கள் தட்டுக்கு வரும். உங்கள் வீட்டுச் செல்லங் கள், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்திருப் பார்கள். அவை முந்தைய இரவே வேகவைக்கப் பட்டு ஈரத் துணியில் சுற்றி பிரிஜ்ஜுக்குள் இருந்து எடுக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு, மிக்ஸிங் செய்து, பொலபொலவென அலங்கரித்து, மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் வரும். எல்லா உணவகங்களும் அப்படி இல்லைதான். ஆனால், 'வீணாவதைத் தடுப்பதில்தான் விடுதியின் லாபம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றும் உணவகங்கள்தான், இங்கே பெரும்பான்மை. அதிலும் பல தந்தூரி உணவகங்களுக்குள் நுழையும் எந்த உணவுப் பொருளும் கழிவாகவோ காலாவதியாகவோ குப்பையில் கொட்டப்படாது. இப்படியான உணவக வியாபார சூத்திரங்களைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டில் சமைத்து, மெனக்கெடலுடன் பரிமாறி, ஊட்டி உறவாடும் கரிசனங்களில் இந்தப் பயம் எப்போதும் இல்லை!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment