'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியையும் மாசுபடுத்திய
பின்னர், ஆற்றின் கடைசிச் சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும், இந்தப் பணத்தைத் தின்ன முடியாது என்று’ -செவ்விந்தியர்கள் கூற்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்தச் செய்திதான், இப்போது உலக மக்கள் அனைவ ருமே உணர வேண்டிய உண்மை.
'ஆறாம் திணை’ தொடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, 'நீங்க சொல்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்தை என்னால் திருத்தி விட முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?’ அப்படி எல்லாம் நினைத்து மலைத்துவிடாமல், நிறையப் பேர் சத்தமே இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் நண்பர்களே! சிலர் தத்தம் வேலையோடு; சிலர் இதனையே வேலையாக!
நம் தமிழகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் செல்வம், 'கிரியேட்’ ஜெயராமன் போல சுற்றுச் சூழல் போராளிகளை நாம் அறிவோம். அதுபோல இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

ஒரு நள்ளிரவில், போபால் யூனியன் கார்பைடு ஆலை விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலும் இருமலுமாகத் தன் மூன்று குழந்தைகளையும், வாயில் நுரை தள்ளும் கண வரையும் இழுத்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஏராளமான கும்பலுடன் மருத்துவமனைக்கு
ஓடியவர் சம்பாதேவி சுக்லா. ஐந்தே ஆண்டுகளில் கணவரை சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு மகன்களை விநோதமான நோய்களுக்கும் பறிகொடுத்தார் அந்தப் பெண். ஆனால், அந்தத் துயரத்தை வெறுமனே கண்ணீருடன் அவர் கழிக்கவில்லை. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக் கொழுந்துகள்’ என்ற முழக்கத்துடன் தன்னைப் போலவே அந்த விபத்தில் பாதிப்புக்குள்ளான ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இழந்த பத்தா யிரத்துக்கும் மேலான நபர்களுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு களாகப் போராடிவரும் சம்பாதேவி, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போராளி.
ஓடியவர் சம்பாதேவி சுக்லா. ஐந்தே ஆண்டுகளில் கணவரை சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு மகன்களை விநோதமான நோய்களுக்கும் பறிகொடுத்தார் அந்தப் பெண். ஆனால், அந்தத் துயரத்தை வெறுமனே கண்ணீருடன் அவர் கழிக்கவில்லை. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக் கொழுந்துகள்’ என்ற முழக்கத்துடன் தன்னைப் போலவே அந்த விபத்தில் பாதிப்புக்குள்ளான ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இழந்த பத்தா யிரத்துக்கும் மேலான நபர்களுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு களாகப் போராடிவரும் சம்பாதேவி, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போராளி.
இன்றைக்கும் வட இந்திய மலைகளில் கொஞ்சம் நெடு மரங்களையும் அடர்ந்த காடுகளையும் பார்க்க முடிகிறது என்றால், சிப்கோ என்ற அமைப்பின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் அது. உத்தரகாண்ட் பகுதியில் அரசாங்கமும் தனியாரும் இஷ்டத்துக்கு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்துவந்த நிலையை 100 பெண்கள் காந்திய வழியில் போராடி மாற்றி அமைத்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்த அமைப்புதான் சிப்கோ. 1974-ல் அவர்கள் மரங்க ளைக் கட்டி அணைத்து நடத்திய போராட்டத்துக்குப் பின்னர்தான் மலைகளில் மரம் வெட்டுவதற்கு இந்தியாவில் கடுமையான சட்டம் பிறந்தது.
மழை, பஞ்சம், பூச்சிகளுக்கு ஈடுகொடுத்து நிற்கும் சுமார் 900 வகை பாரம்பரிய விதைகளை கிராமம் கிராமமாகச் சென்று தனி ஆளாகச் சேகரித்தவர் உத்தரகாண் டின் விஜய் சர்தாரி. விதைகளைக் காக் கும் போராட்டத்தில் அவர் ஆற்றும் பணிகளுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, 'கிராமத் துக்கு பஸ்ல போவேன். விதைகளைக் கேட்டு வாங்கிக்குவேன். கடைசி பஸ் கிளம்பிடுச்சுன்னா, அவங்க வீட்டுத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிக்குவேன். எனக்கு எதுக்குப் பணம்?’ என்று கேட்ட விஜய், இன்னும் சின்ன மண் வீட்டில் தான் வசிக்கிறார்.
ஆந்திரா முழுக்கப் பரவலாக, கிட்டத்தட்ட 11 லட்சம் ஹெக்டேர் நிலத்தைப் பூச்சிக்கொல்லி இல்லாத பூச்சி கட்டுப்படுத்தும் முறை மூலம் செப்பனிட்டு இருக்கிறது ராமானுஜயலு என்ற வேளாண் விஞ்ஞானி மற்றும் விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இணைந்த முனைப்பு. இவர்களின் முயற்சியை ஐ.நா. சபை அங்கீகரித்து மற்ற நாடுகளை ஆந்திராவை எட்டிப்பார்க்கச் சொல்லி யுள்ளது. அந்த இரு தனி நபர்கள்விதைத்த விதை... இன்று மொத்த ஆந்திராவும் பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயத்தை நோக்கி நகர்கிறது!
மரபணுப் பயிருக்கான நாடு தழுவிய போராட்டத்தைக் கையிலெடுத்து இன்று வரை மரபணு உணவுப் பயிரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல்,போராடும் ஆஷா அமைப்பின் கவிதா குருகந்தி மற்றும் அனந்து, பாரம்பரிய ராகி, கம்பு முதலான பல்வேறு சிறுதானிய வகைகளை மீட்டு எடுத்து கர்நாடகம் முழுவதும் பரப்பிவரும் கிருஷ்ண பிரசாத், தன் 80 வயதிலும் புல்லட் ஓட்டிக்கொண்டு, 'என் பலத்துக்குக் காரணம் தெரியுமா... பாரம்பரிய விதை களைக்கொண்டு நான் செய்யும் நச்சிலா இயற்கை விவசாயம்தாம்ல...’ என மார் தட்டும் புளியங்குடி அந்தோணிசாமி, காப்புரிமைக்கும் விதையுரிமைக்குமாக பல ஆண்டுகளாகப் போராடிவரும் நவதானியா அமைப்பின் வந்தனா சிவா, பாரம்பரிய உணவுப் பொருளுக்கு என முதன்முதலாக அங்காடிவைத்து விழிப்பு உணர்வு செய்துவரும் நெல்லை கோமதி நாயகம்... இப்படி எத்தனையோ பேர் நமக்கான அடையாளங்கள்.
கால் நூற்றாண்டு படிப்பு முடித்து பெற்ற வேலை, உயர் பதவிகளைத் தூக்கி எறிந்து களமிறங்கிப் பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்களைப் போல முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூழல் நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்கை செயலாற்றிட முடியும்!
'அம்மா.. நான் சாப்பாட்டை வீணாக்காம சாப்பிட்டுட்டேன்... பாருங்க’ என தட்டைக் காண்பிக்கும் உங்கள் குழந்தை, 'எதுக்கு வழியில தண்ணி பாட்டில் வாங்கிட்டு... வீட்ல இருந்தே எடுத்துட்டுப் போயிடலாமே?’ எனும் வீட்டுத் தலைவி, 'நான் ஒரு ஆள் போறதுக்கு எதுக்கு தனி கார்? கார் பூலிங் பண்ணிக்கலாமே!’ எனச் சொல்லும் தம்பி, 'பிளாஸ்டிக் பை வேண்டாம்... வீட்டுல இருந்தே பை கொண்டாந்து இருக்கேன்’ எனக் கடையில் சொல்லும் அக்கா, 'வாரம் ரெண்டு தடவையாவது எங்க வீட்ல வரகரிசி பொங்கல்; திணை உப்புமா; சோளப் பணியாரம் செய்வோம். உங்க வீட்லக்கா?’ எனத் திண்ணையில் பேசும் அம்மா, 'அம்மா... அம்மா... கிச்சன் குப்பையைப் போட்டு நான் வளர்த்த கத்தரிச் செடி பூ விட்டுருக்கு பாரு’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் குழந்தை... இவர்கள் எல்லோருமே சூழல் போராளிகள்தான்!
- பரிமாறுவேன்...


தாலேட்டுகள்... பிளாஸ்டிக்குகளை வளைத்து, நெளித்துச் செய்யப் பயன்படுத்தும் ஒரு ரசாயனம். பிளாஸ்டிக்கில் மட்டுமல்ல... அன்றாடம் சாப்பிடும் வழுவழு கோட்டிங் போட்ட பெருவாரி மாத்திரை மருந்துகள், குக்கர் கேஸ்கட், குளிர் உணவு களைச் சூடாக்க உதவும் மைக்ரோவேவ் ஓவனின் பிளாஸ்டிக் பாத்திரம், காரின் உள்புற பிளாஸ்டிக்குகள்... இப்படி எத்திக்கிலும் எகிறிக்கிடக்கிறது பிளாஸ்டிக்கின் பயன்பாடு. இந்த தாலேட்டுகள் பிளாஸ்டிக்கோடு கலந்துசெய்யப்பட்டாலும் சூட்டில், நெளிசல், உடைசலில் முதலில் இது காற்றில் கசியத் துவங்கிவிடும். புது காருக்குள் வரும் வாடை, புது பெயின்ட் அடித்துப் பூட்டியிருந்த வீட்டினுள் வரும் வாடை... பெரும்பாலும் இந்த தாலேட் கசிவினால்தான். இந்த தாலேட் விந்து அணுக் குறைவை உண்டாக்கும்; விந்து உற்பத்தி செய்யும் ஆண் சினைப் பையின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என நவீன ஆய்வு கள் உறுதிபடக் கூறுகின்றன. பெண்களுக்கோ, கூடுதலாக அவர்கள் பயன்படுத்தும் அழகூட்டிகளில், குறிப்பாக நகப்பூச்சு, லிப்ஸ்டிக், முகப்பொலிவு க்ரீம் கள் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் தாலேட்டுகள், குறைப்பிரசவம், சினைப்பை நீர்க்கட்டிகள் என ஏகமான சிக்கல்களை உருவாக்குகின்றன். விளைவு? முன்னர் மணியடித்ததுபோல மாதாமாதம் வந்துகொண்டு இருந்த மாதவிடாயை, இப்போது வருடத்துக்கு ஏறத்தாழ 706 மில்லியன் டாலர் செலவழித்து வரவைக்க வேண்டியிருக்கிறது. ஆம் நண்பர் களே... முன்னரெல்லாம் எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட பாலிசிஸ்டிக் ஓவரி சிக்கல், இப்போது மிகப் பெரும்பாலான இளம் மகளிரிடம் உள்ளது.
கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள், கொஞ்சம் மூச்சு/உடற்பயிற்சி ஆண்களிடம் விந்தணுக்களை உயர்த்தவும், பெண்ணில் இந்த சினைப்பை நீர்க்கட்டியைத் தடுக்கவும் பெரிதும் உதவும். தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே. ஹை கிளைசிமிக் தன்மைகொண்ட பாலீஷ் போட்ட பச்சரிசி, குளூட்டன் சேர்த்த கோதுமை மாவு இல்லாத சமையல் வேண்டும். மாப்பிள்ளை சம்பாவில் சோறாக்கி, முருங்கைக்காய் சாம்பா ரும், பசலைக்கீரை பாசிப்பயறுக் கூட்டும், மாதுளை பழச்சாறும் செய்து சாப்பிடுவது விந்தணுக்கள் எண்ணிக்கையை உயர்த்தும். விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த 'வெல்வட் பீன்’ எனும் பூனைக்காலி விதை, பாதிக்கப்பட்ட செர்டோலி செல்களைக்கூடச் சீர்படுத்தும் சாதாரண நெருஞ்சில் முள், வயல் வரப்பில் களையாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி விதை என எளிய சித்த மருந்துகள் ஏராளமாய் நம் மரபில் உண்டு. அவற்றில் பல நம் பாட்டிக் கும் தாத்தாவுக்குமே தெரியும். அதையெல்லாம் தொலைத்துவிட்டு, 'ஆண்மைக் குறைவா..? ஆண் கரடியின் வலது கால் பெருவிரல், காண்டாமிருகக் கொம்பு, சிட்டுக் குருவி லேகியம் என யோசிப்பது முழு உட்டாலக்கடி.
சாத்தியமற்றதும், சுற்றுச்சூழலுக்குக் கேடானதுமான ஆறுகளை இணைக்கும் திட்டத்தைவிட, முதலில் மின்சார க்ரிடுகளை இணைத்தாலே ஒடிசாவில் வீணாகும் மின்சாரத்தை ஒட்டன்சத்திரத்துக்குக் கொண்டுவரலாம். நம் நாட்டில் ஏறத்தாழ 6,000 சிறு மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத் துக்கும் அதிகபட்சம் 15-20 மெகா வாட் மின்சாரம்தான் தேவைப்படும். அதை ஆங்காங்கே உற்பத்திசெய்துகொள்ளும் சிறு திட்டங்களைச் செயல்படுத்தினாலே போதும். இப்படி எல்லாம் யோசிக்காமல் கடல் நீரில் அணுக் கழிவை விடுவதும், காற்றை நஞ்சாக்குவதும், மண்ணுக்குள் கதிரியக்கக் கழிவுகளைப் புதைப் பதுமான கொடுஞ்செயலைப் புவியில் வேறு எந்த மிருகமும் எப்போதும் செய்யாது.
ஆட்டிஸக் குழந்தைகளின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் அவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டிஸக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச் சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிஸ நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம் என்கின்றனர் அறிவியலாளர்கள். குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு உத்தமம். பெஞ்சமின் ஃபென்கோல்ட் என்ற மருத்துவர் எந்த அளவுக்கு, வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிஸத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கி, இப்போது ஃபென்கோல்ட் உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிஸ நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறதாம். பாரம் பரிய உணவு வகைகளின் சாரம்தான் அது. நேற்றைக்குப் பிறந்து மிரட்டும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக்கூட விரிவாக வேறு வார்த்தைகளில் பேசும் பழமையான சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிஸத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை என்பதை வைத்துப்பார்த்தால், அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பரிய உணவு, பதற்றம்இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை என்பது புரிகிறது.
பிரிட்டனில் செயல்படும் அமெரிக்காவைத் தலைமையகமாகக்கொண்ட உலகின் முன்ன ணிப் பலசரக்கு அங்காடி அஸ்டா (Asda). சகலமும் தங்கள் கடையில் 24x7 கிடைக்கும் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த நிறுவனம், காய்கறிகளைக் கொள்முதல் செய்யும் போது, 'இந்த கேரட் கொஞ்சம் கோணலா இருக்கு. நீள அகலம் எங்கள் தரத்துக்கு மேட்ச் ஆகலை. பளிச் கலர்லஇல்லையே’ என்று ஏகமாக கேரட்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். அப்படி அவர்கள் ரிஜெக்ட் செய்யும் கேரட் களின் அளவு, மொத்த உற்பத்தியில் கிட்டத் தட்ட 25-30 சதவிகிதமாம். ஒதுக்கித்தள்ளு வதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'எங்க அஸ்டா கேரட்டை பீலரில் (தோல் சீவும் இயந்திரம்) வைத்து இழுத்தால், ஒரே இழுப்பில் எந்தச் சிக்கலும் இல்லாமல் தோல் உரிய வேண்டும். அதற்கு உதவாத விதமாக கேரட் வளைந்திருந்தால், அது எங்களுக்குத் தேவை யில்லை’ என்பது அவர்கள் சொல்லும் காரணம். 'முருங்கைக்காய் சாம்பார்தான். ஆனா, காய்கறிக் கூடைல ரெண்டே ரெண்டு கேரட் மட்டும் மிச்சமாக் கெடந்துச்சு. அதான், அதையும் வெட்டிப் போட்டேன். இப்ப அதனால முருங்கைக்காய் என்ன கோச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் வேளைகளில் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. முந்தைய அக்கறை கரன்ஸி... பிந்தைய அக்கறை... கரிசனம்!
வணிக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விளையும் பொருட்களை ஏகத்துக்கும் வீணாக்குகிறார்கள். இப்படி வளர்ந்த நாடுகளின் வணிக நிறுவனங்கள் பாழாக்கும் உணவுக்கான காரணங்களைப்பட்டிய லிட்டுக்கொண்டே போகலாம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஆப்பிரிக்க நாடுகள் உற்பத்திசெய்யும் மொத்த அளவு 234 மில்லியன் டன். கிட்டத்தட்டஅமெரிக் காவும் ஐரோப்பாவும் மட்டுமே சாப்பிடும்போது வீணாக் கும் உணவின் அளவு (222 மில்லியன் டன்) இது.
வேட்டையாடிப் பெறும் இரையை, புலியும் சிறுத்தையும் வீணாக்குவது இல்லை. ஒவ்வொரு கவளத்தையும் கவர்ந்து வந்து சாப்பிடும் காக்கையும் பூனையும் எப்போதும் உணவை அழிப்பது இல்லை. குருவியும் புறாவும் தான் கொத்தும் தானியத்தின் அழகைப் பார்ப்பது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே தன் சக பயணிக்குக் கிடைக்காத உணவைச் சகட்டுமேனிக்குப் பாழடித்துவிட்டு நிற்கிறான். தண்ணீரை வீணடிக்காத சிறுதானிய உணவு, மண்ணைப் பாழாக்காத மரபு வேளாண்மை, சூழலைக் கெடுக்காத உள்ளூர் காய்கனி, உடலைப் பாழாக்காத பாரம்பரியப் பக்குவம், அளவாகச் சமைத்து, அன்பாக அதைப் பரிமாறும் அக்கறை, எதையும் வீணாக்காமல் பகிர்ந்துண்ணும் கலாசாரம்... இதை மீண்டும் மீட்டெடுப்பது மட்டுமே பசிப் பிணி போக்கும் பயிற்சி... முயற்சி!