Wednesday 12 June 2013

ஆறாம் திணை - 39

'Think-eat- save’- இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் உலக சுற்றுச்சூழல் தினக் கொள்கை முழக்கம் இது. 'சாப்பாட்டை எக்குத்தப்பா வீணாக்குறீங்க... சாப்பிடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க; அப்புறம் நல்லாச் சாப்பிடுங்க; நிறைய சேமிங்க; உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பசியோடு காத்திருக்கிறார்கள்’ என ஐக்கிய நாட்டு அறிக்கை ஒருபக்கம் திண்டாட்ட நிலையைச் சொல்கிறது. 'அட, என்னப்பா யோசனை? நல்லாச் சாப்பிடு... குதூகலமாக் குடி... கொஞ் சம் கலாட்டா பண்ணு கண்ணு!’ என்று தினம் கொண்டாடச் சொல் லும் விளம்பரங்கள் மறுபுறம். இன்றைய எக்ஸ்பிரஸ் யுகம், உணவை யும் ஒரு போகப்பொருளாக மாற்றி வருகிறது. அதன் பக்கவிளைவாகத் தினமும் உலகில் உற்பத்தி செய்யப் படும் உணவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பல வகையில் வீணாக்கப்படுகிறது.
கதிர் அறுப்பில் துவங்கி, கரண்டியில் இருந்து நம் இலையில் விழுவதற்குள், ஆண்டு ஒன்றுக்கு 1.3 பில்லியன் டன் உணவை நாம் இழக்கிறோம். நம் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை விதித்து, 'அதைச் செய்... இதைப் பண்ணாதே’ என்று மிகவும் 'அக்கறை’யோடு அதட்டும் பெரிய அண்ணன்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான், உலகில் உணவை வீணாக்குவதில் முதலிடம் வகிக்கின்றன. அந்த நாடுகளில் நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்குத் தோராயமாக 95,115 கிலோ உணவை வீணாக்கு கிறார். நம்மைப் போன்ற வளரும் நாடுகளும் ஆப்பிரிக்கா போன்ற ஏழை தேசங்களும், தோராயமாக 611 கிலோ உணவினை வீணாக்குகிறோம். எப்படி?
பிரிட்டனில் செயல்படும் அமெரிக்காவைத் தலைமையகமாகக்கொண்ட உலகின் முன்ன ணிப் பலசரக்கு அங்காடி அஸ்டா (Asda). சகலமும் தங்கள் கடையில் 24x7 கிடைக்கும் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த நிறுவனம், காய்கறிகளைக் கொள்முதல் செய்யும் போது, 'இந்த கேரட் கொஞ்சம் கோணலா இருக்கு. நீள அகலம் எங்கள் தரத்துக்கு மேட்ச் ஆகலை. பளிச் கலர்லஇல்லையே’ என்று ஏகமாக கேரட்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். அப்படி அவர்கள் ரிஜெக்ட் செய்யும் கேரட் களின் அளவு, மொத்த உற்பத்தியில் கிட்டத் தட்ட 25-30 சதவிகிதமாம். ஒதுக்கித்தள்ளு வதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'எங்க அஸ்டா கேரட்டை பீலரில் (தோல் சீவும் இயந்திரம்) வைத்து இழுத்தால், ஒரே இழுப்பில் எந்தச் சிக்கலும் இல்லாமல் தோல் உரிய வேண்டும். அதற்கு உதவாத விதமாக கேரட் வளைந்திருந்தால், அது எங்களுக்குத் தேவை யில்லை’ என்பது அவர்கள் சொல்லும் காரணம். 'முருங்கைக்காய் சாம்பார்தான். ஆனா, காய்கறிக் கூடைல ரெண்டே ரெண்டு கேரட் மட்டும் மிச்சமாக் கெடந்துச்சு. அதான், அதையும் வெட்டிப் போட்டேன். இப்ப அதனால முருங்கைக்காய் என்ன கோச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் வேளைகளில் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. முந்தைய அக்கறை கரன்ஸி... பிந்தைய அக்கறை... கரிசனம்!
  ஃப்ரெஞ்ச் ஃப்ரை நம்மவர்களுக்கு மிகவும் பழக்கமான உணவாகிவிட்டது. (உடலைக் குண்டாக்கி, கொழுப்பைக் குடித்தனம்வைக்கும் பன்னாட்டு உணவு) அதை அழகாகப் பொரித்துத் தர, நீள்உருளை வடிவத்தில் பிறக்காத கிழங்குகளை எல்லாம் தூர எறியும்நிறு வனங்கள் ஏராளம். அப்படி எறியப் படும் உருளைகள் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதமாம். இப்படி விளையும் காய்கனிகளில் அழகு பார்த்து, Supply-Chain Regulations எனும் காட்டுமிராண்டித்தனமானவணிக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விளையும் பொருட்களை ஏகத்துக்கும் வீணாக்குகிறார்கள். இப்படி வளர்ந்த நாடுகளின் வணிக நிறுவனங்கள் பாழாக்கும் உணவுக்கான காரணங்களைப்பட்டிய லிட்டுக்கொண்டே போகலாம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஆப்பிரிக்க நாடுகள் உற்பத்திசெய்யும் மொத்த அளவு 234 மில்லியன் டன். கிட்டத்தட்டஅமெரிக் காவும் ஐரோப்பாவும் மட்டுமே சாப்பிடும்போது வீணாக் கும் உணவின் அளவு (222 மில்லியன் டன்) இது.  
நம்மவர்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை. 'வீட்ல மொதக் கல்யாணம். நம்ம சத்தைக் காட்ட வேணாமா?’ எனச் சொல்லி, இலையில் ஒரு இஞ்ச்கூட இடம் விடாமல், நாலு இனிப்பு, அஞ்சு காரம், வடநாட்டு, தென்னாட்டு, வெளிநாட்டுச் சாப்பாடு என 25 வகைகளைச் சாப்பிடு வதற்கு முன்னரே இலையில் போட்டு நிரப்பி, 'ஒரு இலைக்கு 450 ரூபா கொடுத்தோம்ல... சும்மாவா?’ என மார்தட்டி விருந்து உணவுகளை வீணடிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, வளரும் நாடுகளில் உணவுகள் பெரும்பா லும் வீணாவது, உற்பத்திக்குப் பிந்தைய சேமிப்பு, சுத்தம் செய்தல், மதிப்புக்கூட்டல் போன்ற சமயங்களின்போது தானாம். எலிகளாலும் 'சிவப்பு நாடா’ நடைமுறைகளாலும் கிடங்கில் காத்திருக்கும்போது கெட்டழியும் உணவுப் பொருளின் மதிப்பு இங்கு ஏராளம். அங்கே ஆணவத்தால் அழிகிறது. இங்கே அக்கறையின்மையால் அழிகிறது.
சுற்றுச்சூழலைக் காக்க வேண்டுமானால், உணவு வீணா வதைத் தடுக்க வேண்டும். உணவு உற்பத்திக்கு எனத் தண்ணீரும், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் அதிக மகசூல் என பொய்க் காரணம் சொல்லி, ஏராளமான ரசாயனங் களும் இன்னும் ஒரு படி மேலே சென்று, 'நானே கடவுள்’ மமதையில் படைக்கப்படும் மரபணு உணவுகளும், அதை மதிப்புக்கூட்ட, பிடித்த உறையில் பேக் செய்து, பிடித்தஇடத் தில், பிடித்தவருடன் சாப்பிட என அவை பயணிக்கும் தூரமும், அந்தப் பயணத்தில் உமிழப்படும் மக்காத ரசாயன நச்சுக்களும்தான் சுற்றுச்சூழலைப் பெருவாரியாக வதைத்துச் சிதைக்கிறது. பக்க விளைவுகளாக விதவிதமான நோய்களை அள்ளித் தெளிக்கிறது.
வேட்டையாடிப் பெறும் இரையை, புலியும் சிறுத்தையும் வீணாக்குவது இல்லை. ஒவ்வொரு கவளத்தையும் கவர்ந்து வந்து சாப்பிடும் காக்கையும் பூனையும் எப்போதும் உணவை அழிப்பது இல்லை. குருவியும் புறாவும் தான் கொத்தும் தானியத்தின் அழகைப் பார்ப்பது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே தன் சக பயணிக்குக் கிடைக்காத உணவைச் சகட்டுமேனிக்குப் பாழடித்துவிட்டு நிற்கிறான். தண்ணீரை வீணடிக்காத சிறுதானிய உணவு, மண்ணைப் பாழாக்காத மரபு வேளாண்மை, சூழலைக் கெடுக்காத உள்ளூர் காய்கனி, உடலைப் பாழாக்காத பாரம்பரியப் பக்குவம், அளவாகச் சமைத்து, அன்பாக அதைப் பரிமாறும் அக்கறை, எதையும் வீணாக்காமல் பகிர்ந்துண்ணும் கலாசாரம்... இதை மீண்டும் மீட்டெடுப்பது மட்டுமே பசிப் பிணி போக்கும் பயிற்சி... முயற்சி!
- பரிமாறுவேன்...

11 comments:

  1. Hope this email finds you well

    ReplyDelete