Wednesday 27 March 2013

ஆறாம் திணை - 28



கைப்பிடித்து அழைத்து வந்த பேரனைப் பள்ளி வாசலில் விட்டுவிட்டு சோர்ந்து உட்காராமல், அதே துடிப்போடு நடந்தே வீட்டுக்குச் செல்லும் தாத்தாவைப் பார்க்கும்போதும், பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிப் பேசி, கரிவலம்வந்தநல்லூரில் இருந்து கனடாவுக்கு தன் பேத்திக்கு 'டே கேர்’ பார்க்கத் தள்ளாத வயதில் செல்லும் பாட்டியைப் பார்க்கும்போதும், எப்படி இவர்களால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக ஓடியாடி உழைக்க முடிகிறது என்ற கேள்வி அடிக்கடி எழும். ஊர்க் கிழவியால் பிரசவம் பார்க்கப்பட்டு, குறைந்தபட்சத் தடுப்பு ஊசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு, ஊட்டச் சத்து உணவோ, உயிர்ச் சத்து டானிக்கோ சாப்பிடாமல் வளர்ந்த அவர்களது உடல் நலத்தை இன்றும் காத்துவருவது எது என்று யோசித்தால், அதிகம் மாசுபடாத சுற்றுச்சூழலும், அளவாக அவர்கள் உண்ட உணவின் வகையும், 'சிதைவுக்கு’ ஆளாகாமல் இருக்கும் அவர்களின் மனமும்தான் காரணம் என்பது புரிகிறது.
இன்றைக்கு அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று விவாதிப்பதைவிட, தொலைந்துபோன தையும், மறந்துபோனதையும் மீட்டெடுப்பதில் சாத்தியப்படும் அம்சங்கள்பற்றிப் பேசலாம். தாய்ப்பாலில் இருந்து நம் ஆரோக்கியம் துவங்குகிறது. சில காரணங்களால் தாய்ப்பால் சுரக்காமலோ அல்லது குறைவாகச் சுரந்தாலோ, வெந்தயமும், பெருஞ்சீரகமும் (சோம்பு), வெள்ளைப்பூண்டும் உணவில் கூடுதலாகச் சேர்த்தால் போதும். பிரசவித்த பெண்ணுக்குப் பாலைக் கூடுதலாகச் சுரக்கத் தேவையான புரொலாக்டின் (PROLACTIN) எனும் ஹார்மோனைச் சுரக்கவைக்க இந்த இரண்டும் பயனளிக்கும். பிரசவத்துக்கு வந்த மகளுக்கு தாய் வீட்டில், தண்ணீர்விட்டான் கிழங்கு என அழைக்கப்படும் சதாவரி (asparagus)  எனும் எளிய மூலிகையைக்கொண்டு தயாரிக்கப்படும் லேகியம் இன்று அறிவியல் உலகம் அங்கீகரித்த பால்பெருக்கி (Galactagogue) மருந்து.
தாய்ப்பால், நோய் எதிர்ப்பாற்றல் தரும் என்ற செய்தி நாம் அறிந்ததே. பிரசவிக்கும் வரை பெண்ணின் குடல் பகுதியில் இருந்தபடி 'ஏதாச்சும் கிருமி வருதா?’ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த நோய் எதிர்ப்பாற்றல்கொண்ட ஆன்ட்டிபாடிகள் எல்லாம், பிரசவித்த மறுகணத்தில் பெண்ணின் மார்பகப் பால்கோளத்தின் உட்சுவருக்குள் ஓடிவந்து நிற்கின்றனவாம். சுரக்கும் பாலோடு, சுற்றுலா கிளம்பும் அவை குழந்தையின் வயிற்றுக்குள் போய், அதே காவல் காக்கும் வேலையைச் செய்யத் துவங்குகின்றன. அதிசயங்கள் நிகழ்த்தும் அறிவியலும், 'எப்படிய்யா இது நடக்குது?’ என வியக்கிறதே தவிர, காரணத்தைக் கண்டறியவில்லை. அதனால்தான் புட்டிப்பாலில் குழந்தைக்கு வரும் பேதி நோய், தாய்ப்பாலால் வருவது இல்லை. எனவே, பால் சுரக்கவில்லை என்றால், படாரென புட்டிப்பாலுக்குத் தாவிவிட வேண்டாம். சதாவரி லேகியம், வெந்தயக் களி, பூண்டுக் குழம்பு, சுறாப்புட்டு, குடம்புளியில் சமைத்த மீன் குழம்பு இவற்றுடன் காலையில் ராகி தோசையும் மதியம் குழியடிச்சான் சம்பா அரிசியும், இரவில் கம்பு ரொட்டியும் சாப்பிடுங்கள். இவை அத்தனையும் பால் பெருகச் செய்யும் அருமருந்துகள்.
பாலுக்குப் பின் பாயாசம். ஆம்! தேங்காய் எண்ணெய் துளியும் கொஞ்சம் பனை வெல்லமும் சேர்த்துத் தயாரித்த அரிசிப் பாயாசமும் ஆரியக் கஞ்சியும் (ராகி கஞ்சி)தான் குழந்தைக்கான அடுத்த உணவு. நேந்திரம் பழ மாவில் காய்ச்சிய கஞ்சியில் தேங்காய் எண்ணெய் இரண்டு சொட்டு விட்டுக் கொடுப்பது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை உயர்வுக்கும் உதவும் என்பது நம் பக்கத்து மாநில சேச்சிகளின் அனுபவம். இதைத்தான் 'நேந்திரம்பழத்தில் அதிகபட்ச டெஸ்ட்ரோஸும், தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலமும் இருக்கிறது’ என அறிவியல் மொழியில் சொல்கிறார்கள் அறிஞர்கள். Amylase rich foodதான் குழந்தைக்கான சிறப்பு உணவு என்கிறது நவீன உணவறிவியல். 'அது என்னப்பா அமைலேஸ்?’ எனக் கேட்போருக்கு ஒரு செய்தி... ஊறவைத்து முளைகட்டிய ராகி, கோதுமை, பாசிப்பயறு அனைத்திலும் இந்த Amylase சத்து உண்டு.
குழந்தைகளுக்கு நான்கு வயதுக்கு மேல் தினசரி உணவுடன் எதாவது ஒரு கீரையும், வாழைப்பழமும் ஒரு ஸ்பூன் தேனும் மட்டும் கொடுத்துவாருங்கள். 'நான் வளர்கிறேன் அம்மா!’ என்று குதூகலமாக உங்கள் செல்லம் சொல்லும். முளைகட்டிய கேழ்வரகு, தினசரி ஒரு வேளை பாசிப்பயறு, தினை யரிசி, கைக்குத்தல் மாப்பிள்ளை சம்பா அரிசி, தொலியுளுந்து, நிலக்கடலை முதலான தானியங்களை அரைத்துப் பொடி செய்த சத்து மாவு, வாரம் இரு முறையேனும் மீன், முட்டை, கிடைக்கும்போது நாட்டுக் கோழியின் ஈரல், அவ்வப்போது கொய்யா, நெல்லிக்காய் இவையெல்லாம் சாத்தியப்படும் எனில், இன்னொரு சாய்னா நேவால் உங்கள் வீட்டிலிருந்தும் வரலாம். ஏனெனில், உடல் தசைகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவையான அமினோ அமிலங்களைச் சத்துமாவு தரும். கொய்யாவும் கோழி ஈரலும் தேவையான உயிர்ச் சத்தைத் தரும். மீனும் முட்டையும் எலும்பை உறுதியாக்கும் கால்சியம் தந்திடும். அறிவைத் துலங்கவைக்கும் DHAவை மீன் தரும். இவ்வளவு செல்வங்கள் நம்மைச் சுற்றிக் கொட்டிக்கிடக்கையில் டப்பா டானிக் எல்லாம் எதுக்குங்க?
- பரிமாறுவேன்...

Wednesday 20 March 2013

ஆறாம் திணை - 27

குதிரைவாலி இனிப்புப் பொங்கல், காட்டுயான அரிசிச் சோறு, நாட்டுக் கோழி கறிக்குழம்பு, ஆவாரை சாம்பார், கொள்ளுப் பொடி, கடலைத் துவையல், நாட்டு வெண்டைக்காய் பொரியல், தூதுவளை ரசம், 60-ம் குருவை அரிசியில் தயிர்ச்சோறு... சமீபத்தில் இப்படி ஒரு விருந்தை, பாரம்பரிய விவசாயத்தில் அதீத அக்கறைகொண்ட நண்பர் ஒருவரின் இல்லத்தில் சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. அண்மை நாட்களில் இவ்வளவு சுவையான ஒரு விருந்தை நான் சாப்பிட்டது இல்லை. என்னோடு வந்த இன்னொரு மருத்துவர், 'இத்தனையையும் சமைக்க எவ்வளவு நேரமாகும்? இந்தப் பொருட்களை எங்கெல்லாம் தேடிச் சென்று வாங்கினீர்கள்? இது எல்லாருக்கும் சாத்தியமா?’ எனக் கேள்விகளாக அடுக்கினார். அதற்கு விருந்தளித்த தம்பதி சொன்ன பதில் ஆச்சர்யமானது.
 ''குதிரைவாலிக்கு என்றோ, 60-ம் குருவை அரிசிக்கு என்றோ தனியாக மெனக்கெட வேண்டியது இல்லை. மாதம் ஒரு நாள் இந்தத் தானியங்கள் விற்பனை செய்யும் சிறு வணிகரிடம் பெறுகிறோம். வெண்டைக்காயையும், தூதுவளைக் கீரையையும் வீட்டுத் தொட்டியில் சமையலறை மிச்சங்களை உரமாக இட்டு வளர்க்கிறோம். சொல்லப்போனால் இந்த விருந்துக்காக நாங்கள் செலவிட்ட நேரமும் பணமும் குறைவு. ஆனால், பாரம்பரியத்தைச் சமைக்கும்போது, தொலைந்துவிட்ட கிராமத்துக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து சாப்பிட்ட நிலாச் சோறு நினைவுக்குவருகிறது. அந்த ருசியான, ஆரோக்கியமான உணவு நம்மை மட்டும் மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை. அதற்கென எள்ளளவும் உரமிடாததால், பூச்சிக்கொல்லி விஷம் தெளிக்காத தால் மண் மகிழ்ந்திருக்கும்; மண்ணுக்குள் பொதிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், 'எங்களைக் காயப்படுத்தாத உணவு’ எனக் களிப்படைந்திருக்கும். அந்தச் சிறுதானியமும் மரபரிசியும் விளைவித்த விவசாயியின் முகம் மலர்ந்திருக்கும். நம் மரபோடு இணைந்திருக்கும் உணவைப் பார்த்ததில், உடலின் கோடானுகோடி நுண்ணுயிர்கள் மகிழ்ந்திருக்கும்!'' என்ற அவர்களின் பதிலில் ஒளிந்திருக்கும் சமூக அக்கறை, சூழல் கரிசனம், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏன் இல்லை?
சிறுதானியச் சமையல் என்றாலே, 'அதற்கு அனுபவம் வேண்டும்’ என்றோ, 'சமைத்தால் நன்றாக வருமா?’ என்றோதான் சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. பெண்கள் கிளப், 'சிறுதானியச் சமையல் போட்டி வைத்திருக்கிறோம். நீங்கள் நடுவராக வர முடியுமா?'' என்று கேட்டபோது, 'அட... ராக்கெட், நானோ துகள், ஸ்டெம் செல் என்றுதானே இவர்கள் பேசுவார்கள்? கொள்ளும் குதிரைவாலிபற்றியும் இவர்கள் எந்த அளவுக்கு அறிந்திருப்பார்கள்?’ என்ற சந்தேகத்துடன்தான் சென்றேன். ஆனால், அந்தப் போட்டியும் அதில் அவர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் வியப்பளித்தது.
வரகு அரிசியில் டோக்ளா, தினை அரிசியில் ஆஸ்ட்ரிச் எக், குதிரைவாலியில் ஃபலூடா, சாமை அரிசியில் அம்ப்ரோசியா கஞ்சி, இன்னும் கோஃப்தா, கொழுக்கட்டை, தட்டை, பர்ஃபி, அல்வா என அவர்கள் முழுக்க முழுக்கச் சிறுதானியங்களைக்கொண்டே அசத்தியிருந்தார்கள். கடைசியில் யாருக்குப் பரிசளிப்பது என நான் திக்குமுக்காடிவிட்டேன். சிறுதானியங்களை அதன் மருத்துவ, உணவியல் தன்மை சிறிதும் மாறாமல், கூடுதல் சுவையுடன், கண்ணுக்கு அழகாக அலங்கரித்து அவர்கள் பரிமாறியிருந்த விதம், நாளை இந்த உலகை சிறுதானியங்கள் ஆளும் என்ற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கியது.
அதே சமயம், இப்போது நான் அடிக்கடி எதிர்கொள்ளும் இரண்டு கேள்விகள்... 'அடிக்கடி நீங்கள் கம்பு, குதிரைவாலி, தினை, ஆர்கானிக் காய்கறிகள் எனப் பேசுகிறீர்கள். ஆனால், அவை எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லையே?’ இன்னொன்று, 'அவை விலை மிகவும் அதிகமோ?’ என்பது. இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. காலையில் கம்பு தோசையும் கடலைச் சட்னியும், இரவில் மாப்பிள்ளைச் சம்பாவில் சோறும்தான் சாப்பிடுவோம் என இனி எல்லோரும் அடம்பிடிக்க ஆரம் பித்தால், எல்லோருக்கும் இனி எல்லாம், எப்போதும் விலை மலிவாகக் கிடைக்கும். அதுதான் வணிக ம(த)ந்திரம். ஆஸ்திரேலிய ஓட்ஸும், ஆப்பிள் ஐபோனின் லேட்டஸ்ட் வெர்ஷனும், நெதர்லாந்து சீஸும் தெருமுக்குக் கடையில் கிடைக்கும்போது, நம்மோடு 2,000 வருடங்களாகப் பயணிக்கும் கேழ்வரகும் நாட்டுக் கத்தரிக்காயும் கிடைக்காமல் போவது யார் தவறு? அதற்கு யார் காரணம்? இதை யோசிக்கும்போதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் திட்டமிடப்பட்ட பன்னாட்டு வணிகச் சூத்திரங்களும் சூழலைச் சிதைத்து பூவுலகின் ஒரே தாதாவாகிவிட நினைக்கும் பேராசைப் பெருநிறுவனங்களின் அரசியலும் விளங்கும்.
வங்காரி மாத்தாய்... அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற கறுப்பின சுற்றுச்சுழல் போராளி. அவரது நோபல் பரிசு உரையைச் சமீபத்தில் படித்தேன். 'எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஓடையில் இருந்து அம்மாவுக்காகத் தண்ணீர் பிடித்து வரும் சிறு வயது அனுபவத்தை இந்த உரையில் நினைவுகூர்கிறேன். அப்போதெல்லாம் நேரடியாக நான் ஓடையில் இருந்து தண்ணீர்குடித்திருக்கிறேன். அரோரூட் இலைகளுக்கு இடையில் விளையாடியவாறு, மணிகள் என நினைத்து தவளைகளின் முட்டைகளை எடுக்க முயற்சி செய்வேன். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் எனது சிறு விரல்களை அதன் மீது வைக்கும்போது அது உடைந்துவிடும். பிறகு, ஆயிரக்கணக்கில் தவளைக் குஞ்சுகளைப் பார்ப்பேன். கறுப்பு நிறத்தில் உற்சாகத்தோடு தண்ணீரின் ஊடாக அவை கடந்து செல்லும். என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற உலகம் இதுதான். இன்று சுமார் 50 வருடங்கள் கழித்து, ஓடைகள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பிடிக்கப் பெண்கள் வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பிடிக்கும் தண்ணீரும் எப்போதும் சுத்தமாக இல்லை. குழந்தைகளுக்கு தாங்கள் எதைத் தொலைத்தோம் என்பதே தெரியவில்லை. தவளைக் குஞ்சுகளின் வீடுகளை மீட்டெடுத்து நமது குழந்தைகளிடம் எழிலும் அதிசயமும் நிறைந்த உலகத்தை ஒப்படைப்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால்!’ வங்காரி மாத்தாயின் இந்த சொற்கள்தான் நமக்கான சவாலைச் சமாளிப்பதற்கான சூத்திரமும் கூட!  
- பரிமாறுவேன்...

Wednesday 13 March 2013

ஆறாம் திணை - 26



ழகாக, பொலிவாக இருக்க வேண்டும் எனும் அக்கறை எங்கும் பரவிவரும் காலம் இது. தினசரி குறைந்தபட்சம் 12 அழகுசாதனப் பொருட்களைப் பெண்ணும், 6 அழகுசாதனப் பொருட்களை ஆணும் உபயோகிப்பதாக அமெரிக்கப் புள்ளிவிவரம் சொல்கிறது. நம் ஊரும் கிட்டத்தட்ட அமெரிக்கச் சந்தையாக மாறியிருப்பதால், எண்ணிக்கையில் இரண்டு, மூன்று குறையலாமே தவிர, அழகுசாதனங்கள் அங்கிங்கெனாதபடி இங்கும் நிறைந்திருக்கின்றன.
 அழகாக இருக்க மெனக்கெடுவதில் என்ன தப்பு என்போருக்கு, அதன் பின்னணியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 80,000 அழகுபடுத்திகள் நம் சந்தையில் உள்ளன. 12,500-க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்கள், உங்களை மணமூட்ட, அழகூட்ட, நிறமேற்றப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாதுகாப்பானதா... உடல் நலத்துக்குத் தீங்கு தருமா என்ற முழுமையான ஆய்வுகள் உலகில் எங்கும் நடைபெறவில்லை. எல்லாமே அரைகுறை முடிவுகள்தான். ஒரு நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருள், இன்னொரு நாட்டில் கொடிகட்டிப் பறக்கும்.  
பெண்களைக் குறிவைத்துக் கொண்டுவரப் படும் இந்தப் பொருட்களின் பின்னணிகுறித்து வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன. குழந்தை களை அதிகம் கவரும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் (lead), அவர்களின் மூளைத்திறனையே பாதிக்கக்கூடியது. 'லெட் எல்லாம் சேர்ப்பதே இல்லை’ என சத்தியம் செய்த பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை ஆய்வுசெய்ததில் 65 சதவிகிதத்துக்கும் மேலான நகப் பளபளப்பிகளில் லெட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 'இதைத் தெளிச்சீங்கன்னா, பக்கத்து வீட்டு, பக்கத்து நாட்டு அழகியெல்லாம் பின்னாடி வருவாங்க!’ என்று விளம்பரப்படுத்தப்படும் பல மணமூட்டிகளில் உள்ள ஃபார்மால்டிஹைடு, நரம்பைப் பாதிக்கும் நச்சு. எத்தலீன் ஆக்ஸைடு போன்ற ரசாயனம் புற்றுநோய் வர வழைக்கக்கூடியது. இப்படிக் கிட்டத் தட்ட 22 சதவிகித அழகூட்டிகளில் புற்று தரும் ரசாயனங்கள் இருப்பதாக எச்சரிக்கிறது, அழகுப் பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கும் 'ஸ்கின் டீப்’ அமைப்பு.
பெண் குழந்தைகள் மிக விரைவிலேயே வயதுக்கு வருவதற்கும், மார்புப் புற்று அதிகமாகப் பெருகுவதற்கும் அழகூட்டிகளில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்குமா என்று நிர்ணயிக்கும் ஆய்வுகள் அதிக அளவில் நடக்கின்றன. அதற்கான முகாந்திரம் நிறையவே உள்ளது. தாலேட் (Phthalate) எனும் முகத்தில் மேக்கப்பை நிறுத்தும் கெமிக்கல், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன் (polycyclic hydro carbon) ஆகியவை எல்லாம் சந்தேகப் பார்வையில் உள்ள ரசாயனங்கள். ஆனாலும், நம் சந்தையில் இன்றளவிலும் விற்பனையில் உள்ளவை. ஐந்து வயதுக் குழந்தைக்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து, முகத்துக்கு ஸ்க்ரப் செய்து, பாலீஷ் போட்டு, ஸ்ப்ரே அடித்து, காற்றுப் புகாத பளபள ஆடை அணிவித்து நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அந்தக் குழந்தையின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
'ச்சே... ச்சே... நாங்கள்லாம் புத்திசாலி. ஒன்லி ஹெர்பல், நேச்சுரல், ஆர்கானிக்தான் யூஸ் பண்ணுவோம்’ என்று சொல்வோருக்கு ஒரு விஷயம்... பெரும்பாலான இந்த சமாசாரங்கள் உங்களை வாங்கவைக்கும் உத்தியாக லேபிளில் மட்டுமே ஒட்டப்படுகின்றன. சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்புகள் சந்தையில் மிக அரிது. 'கொஞ்சம் மூலிகை; கொஞ்சம் கெமிக்கல்’ என்ற கலவைகள்தான் அதிகம். சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் CERTECH எனும் அமைப்பு ஆர்கானிக் என உலகில் விற்கப்படும் அழகூட்டிகளில் 10 சதவிகித மூலப்பொருட்கள் மட்டுமே ஆர்கானிக் என்கிறது. குழந்தைகளுக்கு என விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவன என தன் அறிக்கையில் கூறுகிறது.
'காஸ்மெடிக்ஸ் எல்லாம் மேலே பூசுவதற்குத்தானே? உடலுக்கு உள்ளே எப்படிப் போகும்?’ என அலட்சியமாக நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ், பாரபின்கள் (பொருள் கெட்டுப்போகாதிருக்க பெரும்பாலான க்ரீம் கள், ஷாம்புகளில் சேர்க்கப் படும் பிரிசர்வேட்டிவ்) இன்னும் நிறமிகளுக்காகச் சேர்க் கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில, குறிப்பாக, மணமூட்டிகளும் சன் ஸ்கிரீனரும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம். அதிகமாக ஸ்ப்ரே அடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் இனி கொஞ்சம் 'உஷாராக’ இருங்கள். இன்னொரு விஷயம்... அதிகம் சன் ஸ்கிரீன் தேய்த்துத் திரியும் நபருக்கு, விட்டமின் டி குறைவும் புற்றுநோய் வரும் வாய்ப்பும் கூடுதல். 'வெயில்ல போய்க் கருத்துடாதப்பா. இதைக் கொஞ்சம் தேய்ச்சுட்டுப் போ’ என இனி சொல்லாதீர்கள்.
கறுப்பு அழகு. கருமையை நகைப்பதும் இழிவுபடுத்துவதும் விவரம் தெரியாமல் செய்யும் செயலாகும். குழந்தைப் பருவம் முதலே கறுப்பழகை ரசிக்காமல் பவுடர் போட்டு, க்ரீம் தடவி வளர்ப்பது சிறு வயதிலேயே அந்தக் குழந்தைக்குக் கறுப்பு என்றால் நல்லதில்லையோ என்ற மனோ பாவத்தை வளர்க்கிறது. விளைவு? கறுப்பாக இருக்கிறது என்பதால், உணவில் மிளகைப் பொறுக்கிவைக்கும் குழந்தை (சில பெருசும் கூட), 'கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கிறது’ என சிறு தானியங்களை ஒதுக்கிவைப்பதும், 'இது எப்படி நல்லாயிருக்கும்?’ என உடலுக்கு உறுதியை இனிப்பாகத் தரும் பனங்கருப்பட்டியைத் தூரமாக வைப்பதும்தான் நிகழும். கறுப்பு அழகு மட்டுமல்ல... ஆரோக்கியமும் கூட!
அழகு என்பது வெளித் தோற்றத்தில் அல்ல நண்பர்களே... கிடைத்த திடீர் கணத்தில் கரம்பற்றி அழுத்தித் தந்த காதலியின் முத்தம், 'அம்மா! நான் ஊட்டிவிடவா?’ எனக் கேட்கும் குழந்தையின் வாஞ்சை, 'தலைவலிக்குதாப்பா?’ என்ற உங்கள் கணவரின் கரிசன வார்த்தை, 'சூடா இருக்கா? எண்ணெய் தேய்த்துக் குளிச்சிக்கோப்பா!’ என்று போனில் விசாரிக்கும் அம்மாவின் அக்கறை... இவைதான் அழகு. இந்த வார்த்தைகளைக் கேட்ட கணத்தில், ஓடிப்போய் கண்ணாடியில் முகம் பாருங்கள்... அங்கே தெரிவதுதான் அழகு. உள்ளக் களிப்பில், உவகை பூசி, மலர்ந்து இருங்கள்... நீங்கள்தாம் அழகன்/அழகி!
- பரிமாறுவேன்...

Wednesday 6 March 2013

ஆறாம் திணை - 25

வீன வசதிகள், தொழில்நுட்பங்கள் மூலம் எந்த நோய்க்கும் தீர்வு காணும் மருத்துவ உலகை இன்றும் ஆட்டிப் படைக்கும் ஒரு வியாதி உண்டென்றால், அது புற்றுநோய். இன்ன காரணத்தால்தான் புற்றுநோய் வருகிறது என்று துல்லியமான தரவுகளுடன் இந்த நோய்க்கான காரணத்தை இதுவரை மருத்துவ உலகத்தால் வரையறுக்க முடியவில்லை. மர்மமும், ரகசியமும், பெரும் வேதனையும், உயிர் வலியும் நிறைந்த இந்தப் புற்றுநோய், மருத்துவ ஆய்வுகளின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாக ஒவ்வோர் ஆண்டும் தன் வீரியத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முன்பு இந்தியாவைவிட, மேற்கத்திய நாடுகளில்தான் புற்றுநோய் மரணங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது நம் ஊரிலும் 25, 30 வயதுகளில் எல்லாம் புற்றுநோய் தாக்குகிறது. என்ன காரணம்?
 நகரமயமாக்கலை முக்கிய காரணமாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஆரோக்கியமான உணவு, வாழ்க்கைச் சூழல் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு, நகரங்களுக்கு வேகவேகமாகக் குடிபெயர்கின்றனர் கிராம மக்கள். காலையில் பல் துலக்கும் களிம்பு முதல், இரவு கொசுக் கடியில் இருந்து காத்துக் கொள்ளத் தடவப்படும் களிம்பு வரை அனைத்தும் கெமிக்கல். வெயிலில் நிறுத்திய காருக்குள் அதன் டாஷ்போர்டு செய்யப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கில் இருந்து பென்சீன் கசிந்து வரு கிறது. வீட்டில் அழகுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மெலமினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் யூரியா பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருளை வெளியேற்றுகிறது. நம்மைச் சுற்றிக் குவிந்துகிடக்கும் பலவித பிளாஸ்டிக்குகளில் இருந்து டயாக்சின்கள் கசிகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உணவு தானியங்கள், காய்கனி களில் நுண்ணிய ரசாயனத் துணுக்குகளும், கதிர்வீச்சுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட எந்தத் துறை யினரைக் கேட்டாலும், 'ஐயோ... யார் சொன்னது? எங்கள் கசிவுகள் பாதுகாப்பான வரையறைக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது’ எனச் சத்தியம் செய்வார்கள்.  
புற்றுநோய்த் தடுப்பில் உணவுப் பழக்கத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இதற்குச் சரியான உதாரணம், இந்தியர்கள் மட்டும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படாததைக் குறிப்பிடலாம். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று மேற்கத்திய விஞ்ஞானி கள் ஆராய்ந்ததில், உணவில் இந்தியர்கள் சேர்க்கும் மஞ்சளின் மகிமையை உணர்ந் திருக்கிறார்கள்! மஞ்சளின்  curcuma curcumin சத்து நம் செல்களில் உள்ள NF kappa-B  என்ற புரதக்கூட்டைச் சீரமைத்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வ தாலேயே, புற்று நம்மை உற்றுப் பார்க்கா மல் இருக்கிறது. கிட்டத்தட்ட 250 வகை யான நோய்களை வராமல் காக்கும் குணம் மஞ்சளுக்கு உண்டு.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் புற்றுநோய் துறைப் பேராசிரியர் பரத் அகர்வால் தனது 'ஹீலிங் ஸ்பைசஸ்’ என்ற ஆங்கில நூலில், 'மஞ்சள் மட்டுமல்ல; இந்தியர்களால் சமையலில் பயன்படுத்தப்படும் பல நறுமணப் பொருட்களுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இந்துக்கள் கொண்டாடும் துளசியாகட்டும், இஸ்லாம் வலியுறுத்தும் கருஞ்சீரகமாகட்டும் இரண்டுமே புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை. கறிவேப்பிலை, லவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு, வெந்தயம், ஏலம், சாதிக்காய் என சாதாரணமாக உணவில் மணமூட்ட உபயோகப்படுத்தும் அத்தனையும் நோய்த் தடுப்புக் காரணிகளாகச் செயல்படுகிறது!’ என்கிறார். இந்தப் பொருட்களை அன்றாடம் சமையலில் பயன்படுத்துவதுதான் நம் உணவுக் கலாசாரம். ஆனால், சமீபமாக நாமோ நேரம் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி இவற்றை ஒதுக்குகிறோம். அதிலும் அதிஆபத்தாக, குழந்தைகளுக்கு இந்த உணவுப் பழக்கத்தை நாம் அறிமுகப்படுத்துவதே இல்லை.  
தினசரி உணவில் அதிகபட்சமாக இயற்கை விவசாயத்தில் விளைந்த பழங்களும் காய்கறிகளை யும் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிவந்த நிறம் உள்ள பப்பாளி, கொய்யா, பட்டை தீட்டப்படாத தானியங்கள், ராகி, கம்பு, வரகு, தினை போன்ற சிறுதானியங்களை முடிந்தவரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எப்போது இனிப்பு தேவைப்பட்டாலும் வெள்ளைச் சீனியைத் தேடி ஓடுவதைத் தவிர்த்து பனை வெல்லம், தேன் முதலியவற்றைப் பயன்படுத்த வேண்டும். பால் இல்லாத பச்சைத் தேநீர் (green tea) செக்கில் ஆட்டிய நாட்டு எண்ணெய், tக்ஷீணீஸீs யீணீt  இல்லாத தின்பண்டங்கள், மீன், உடல் உழைப்புக்கு ஏற்றபடி நாட்டுக் கோழி இறைச்சி என நமது உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.  
புற்றுநோய்க்கு எப்படியேனும் தீர்வு தேடும் தேடலில், வளர்ந்த நாடுகள் பல்வகை மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து கூட்டு சிகிச்சைமுறையை முயற்சிக்கின்றன. ஆனால், இங்கு இந்தியாவிலோ வாழ்வின் விளிம்பில் நிற்கும் ஒரு புற்றுநோயாளி, 'வேறு ஏதேனும் மாற்று மருத்துவம் பயன்படுத்திப் பார்க்கலாமா?’ என்ற கேள்வியை மருத்துவரிடம் கேட்கவே முடியாது. கேட்டால், 'எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அது உங்கள் பாடு!’ என்று சடாலென விலகிக்கொள்வார்கள்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா எனப் பல பாரம்பரிய மருத்துவமுறைகள் இருக்கும் இந்தியாவில், ஒவ்வொரு துறை மருத்துவரும் ஈகோ மறந்து இணைந்து, தத்தம் துறையின் நுட்பங்களை ஒருங் கிணைத்து மருத்துவ உலகின் பெரும் சவாலாக இருக்கும் புற்றுநோய்க்கு விடை காண முயற்சித்தால் தீர்வு சாத்தியமே!
- பரிமாறுவேன்...