Wednesday 13 March 2013

ஆறாம் திணை - 26



ழகாக, பொலிவாக இருக்க வேண்டும் எனும் அக்கறை எங்கும் பரவிவரும் காலம் இது. தினசரி குறைந்தபட்சம் 12 அழகுசாதனப் பொருட்களைப் பெண்ணும், 6 அழகுசாதனப் பொருட்களை ஆணும் உபயோகிப்பதாக அமெரிக்கப் புள்ளிவிவரம் சொல்கிறது. நம் ஊரும் கிட்டத்தட்ட அமெரிக்கச் சந்தையாக மாறியிருப்பதால், எண்ணிக்கையில் இரண்டு, மூன்று குறையலாமே தவிர, அழகுசாதனங்கள் அங்கிங்கெனாதபடி இங்கும் நிறைந்திருக்கின்றன.
 அழகாக இருக்க மெனக்கெடுவதில் என்ன தப்பு என்போருக்கு, அதன் பின்னணியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 80,000 அழகுபடுத்திகள் நம் சந்தையில் உள்ளன. 12,500-க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்கள், உங்களை மணமூட்ட, அழகூட்ட, நிறமேற்றப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாதுகாப்பானதா... உடல் நலத்துக்குத் தீங்கு தருமா என்ற முழுமையான ஆய்வுகள் உலகில் எங்கும் நடைபெறவில்லை. எல்லாமே அரைகுறை முடிவுகள்தான். ஒரு நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருள், இன்னொரு நாட்டில் கொடிகட்டிப் பறக்கும்.  
பெண்களைக் குறிவைத்துக் கொண்டுவரப் படும் இந்தப் பொருட்களின் பின்னணிகுறித்து வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன. குழந்தை களை அதிகம் கவரும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் (lead), அவர்களின் மூளைத்திறனையே பாதிக்கக்கூடியது. 'லெட் எல்லாம் சேர்ப்பதே இல்லை’ என சத்தியம் செய்த பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை ஆய்வுசெய்ததில் 65 சதவிகிதத்துக்கும் மேலான நகப் பளபளப்பிகளில் லெட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 'இதைத் தெளிச்சீங்கன்னா, பக்கத்து வீட்டு, பக்கத்து நாட்டு அழகியெல்லாம் பின்னாடி வருவாங்க!’ என்று விளம்பரப்படுத்தப்படும் பல மணமூட்டிகளில் உள்ள ஃபார்மால்டிஹைடு, நரம்பைப் பாதிக்கும் நச்சு. எத்தலீன் ஆக்ஸைடு போன்ற ரசாயனம் புற்றுநோய் வர வழைக்கக்கூடியது. இப்படிக் கிட்டத் தட்ட 22 சதவிகித அழகூட்டிகளில் புற்று தரும் ரசாயனங்கள் இருப்பதாக எச்சரிக்கிறது, அழகுப் பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கும் 'ஸ்கின் டீப்’ அமைப்பு.
பெண் குழந்தைகள் மிக விரைவிலேயே வயதுக்கு வருவதற்கும், மார்புப் புற்று அதிகமாகப் பெருகுவதற்கும் அழகூட்டிகளில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்குமா என்று நிர்ணயிக்கும் ஆய்வுகள் அதிக அளவில் நடக்கின்றன. அதற்கான முகாந்திரம் நிறையவே உள்ளது. தாலேட் (Phthalate) எனும் முகத்தில் மேக்கப்பை நிறுத்தும் கெமிக்கல், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன் (polycyclic hydro carbon) ஆகியவை எல்லாம் சந்தேகப் பார்வையில் உள்ள ரசாயனங்கள். ஆனாலும், நம் சந்தையில் இன்றளவிலும் விற்பனையில் உள்ளவை. ஐந்து வயதுக் குழந்தைக்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து, முகத்துக்கு ஸ்க்ரப் செய்து, பாலீஷ் போட்டு, ஸ்ப்ரே அடித்து, காற்றுப் புகாத பளபள ஆடை அணிவித்து நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அந்தக் குழந்தையின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
'ச்சே... ச்சே... நாங்கள்லாம் புத்திசாலி. ஒன்லி ஹெர்பல், நேச்சுரல், ஆர்கானிக்தான் யூஸ் பண்ணுவோம்’ என்று சொல்வோருக்கு ஒரு விஷயம்... பெரும்பாலான இந்த சமாசாரங்கள் உங்களை வாங்கவைக்கும் உத்தியாக லேபிளில் மட்டுமே ஒட்டப்படுகின்றன. சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்புகள் சந்தையில் மிக அரிது. 'கொஞ்சம் மூலிகை; கொஞ்சம் கெமிக்கல்’ என்ற கலவைகள்தான் அதிகம். சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் CERTECH எனும் அமைப்பு ஆர்கானிக் என உலகில் விற்கப்படும் அழகூட்டிகளில் 10 சதவிகித மூலப்பொருட்கள் மட்டுமே ஆர்கானிக் என்கிறது. குழந்தைகளுக்கு என விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவன என தன் அறிக்கையில் கூறுகிறது.
'காஸ்மெடிக்ஸ் எல்லாம் மேலே பூசுவதற்குத்தானே? உடலுக்கு உள்ளே எப்படிப் போகும்?’ என அலட்சியமாக நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ், பாரபின்கள் (பொருள் கெட்டுப்போகாதிருக்க பெரும்பாலான க்ரீம் கள், ஷாம்புகளில் சேர்க்கப் படும் பிரிசர்வேட்டிவ்) இன்னும் நிறமிகளுக்காகச் சேர்க் கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில, குறிப்பாக, மணமூட்டிகளும் சன் ஸ்கிரீனரும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம். அதிகமாக ஸ்ப்ரே அடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் இனி கொஞ்சம் 'உஷாராக’ இருங்கள். இன்னொரு விஷயம்... அதிகம் சன் ஸ்கிரீன் தேய்த்துத் திரியும் நபருக்கு, விட்டமின் டி குறைவும் புற்றுநோய் வரும் வாய்ப்பும் கூடுதல். 'வெயில்ல போய்க் கருத்துடாதப்பா. இதைக் கொஞ்சம் தேய்ச்சுட்டுப் போ’ என இனி சொல்லாதீர்கள்.
கறுப்பு அழகு. கருமையை நகைப்பதும் இழிவுபடுத்துவதும் விவரம் தெரியாமல் செய்யும் செயலாகும். குழந்தைப் பருவம் முதலே கறுப்பழகை ரசிக்காமல் பவுடர் போட்டு, க்ரீம் தடவி வளர்ப்பது சிறு வயதிலேயே அந்தக் குழந்தைக்குக் கறுப்பு என்றால் நல்லதில்லையோ என்ற மனோ பாவத்தை வளர்க்கிறது. விளைவு? கறுப்பாக இருக்கிறது என்பதால், உணவில் மிளகைப் பொறுக்கிவைக்கும் குழந்தை (சில பெருசும் கூட), 'கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கிறது’ என சிறு தானியங்களை ஒதுக்கிவைப்பதும், 'இது எப்படி நல்லாயிருக்கும்?’ என உடலுக்கு உறுதியை இனிப்பாகத் தரும் பனங்கருப்பட்டியைத் தூரமாக வைப்பதும்தான் நிகழும். கறுப்பு அழகு மட்டுமல்ல... ஆரோக்கியமும் கூட!
அழகு என்பது வெளித் தோற்றத்தில் அல்ல நண்பர்களே... கிடைத்த திடீர் கணத்தில் கரம்பற்றி அழுத்தித் தந்த காதலியின் முத்தம், 'அம்மா! நான் ஊட்டிவிடவா?’ எனக் கேட்கும் குழந்தையின் வாஞ்சை, 'தலைவலிக்குதாப்பா?’ என்ற உங்கள் கணவரின் கரிசன வார்த்தை, 'சூடா இருக்கா? எண்ணெய் தேய்த்துக் குளிச்சிக்கோப்பா!’ என்று போனில் விசாரிக்கும் அம்மாவின் அக்கறை... இவைதான் அழகு. இந்த வார்த்தைகளைக் கேட்ட கணத்தில், ஓடிப்போய் கண்ணாடியில் முகம் பாருங்கள்... அங்கே தெரிவதுதான் அழகு. உள்ளக் களிப்பில், உவகை பூசி, மலர்ந்து இருங்கள்... நீங்கள்தாம் அழகன்/அழகி!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment