Wednesday 6 February 2013

ஆறாம் திணை - 21



தம்பி... உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?'
''கேரட்.'
''பிடிச்ச பழம்?'
''ஆப்பிள்.''
''பிடிச்ச காலை உணவு?''
 ''நூடுல்ஸ்.''
''மத்தியானத்துக்கு?'
''ஃப்ரைடு ரைஸ்.''
''ராத்திரி..?''
''பீட்ஸா அல்லது பாஸ்தா.''
- இது ஏதோ ஆங்கிலப் படத்தின் வசனம் அல்ல. ''சரியா சாப்பிட மாட்டேங்கிறான்
டாக்டர்'' என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவைவிட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும், கத்தரிக் காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், 'ஆம், காணாமல் போய் விடும்’! இதற்கான திட்டமிடப்பட்ட உணவு அரசியல், உங்களையும் அறியாமலேயே உங்க ளைச் சுற்றிப் பின்னப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
'நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்? எங்கு சாப்பிட வேண்டும்? எத்தனை நாளைக்குச் சாப்பிட வேண்டும்?’ என்பதை எல்லாம் இனி நம் வீட்டு அடுப்பங்கரையில் முடிவு செய்யும் நிலை வெகுகாலத்துக்கு நீடிக்காது. நெதர்லாந்திலோ, கலி ஃபோர்னியாவிலோ ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் இதை முடிவு செய்யும். இப்போதும்கூட, நம்அடுப் பங்கரையை ஆக்ரமித்து இருக்கும் காய்கறிகளில் அதிகபட்சம் வெளிநாட்டில் இருந்து வந்தவையே. 500-600 ஆண்டுகளில் மெள்ள மெள்ள நம்மிடையே ஊடுருவியவை. பெருவில் இருந்து வந்த உருளைக்கிழங்கு, ஐரோப்பாவில் இருந்து காபி, டீயுடன் வந்த தக்காளி, சிலியில் இருந்து வந்த மிளகாய், சீனாவில் இருந்து வந்த முள்ளங்கி, பெர்சியாவில்இருந்து வந்த வெங்காயம், ஜப்பானில் இருந்து வந்த சேனைக் கிழங்கு என இந்தப் பட்டியல் பெரியது.
ஆனால், காய்கறி என்றாலே மிளகு சேர்த்துச் சமைத்த காய் என்பதுதான் அர்த்தம் (கறி என்ப தன் பொருள் மிளகு). அந்த அளவுக்கு காரச் சுவைக்கு மிளகு சேர்த்துச் சமைத்தவர்கள் நாம். காய்களை புளிக்கறி, பொரித்த கறி என சமைத் துச் சாப்பிட்டவர்கள். கிரேக்கமும் அரபும் அறியப்படாத 1,000 ஆண்டுகளுக்கு முன்பே மிளகையும், அதன் உணவுப் பயனையும், மருத்து வப் பயனையும் நுட்பமாக அறிந்துவைத்திருந்தனர் நம் முன்னோர். அந்த மிளகை ஓரங்கட்டி முன்னே வந்தது மிளகாய். அந்த பச்சை நிறக் காய், மிளகுபோல் அதிகக் காரம் கொண்டு இருந்ததால்தான் 'மிளகு காய் = மிளகாய்’ எனப் பெயரிட்டனர். ஆனால், மிளகுக்குக் கடுகளவும் மிள காய் இணையாகாது.
வெளிநாட்டு மிளகாயை அரியாசனத்தில் வைத்துவிட்டு, நம்ம ஊர் மிளகை சூடான சூப்புக்கும், ஆம்லெட்டுக்கும், பெப்பர் சிக்கனுக்கும், வெண்பொங்கலுக்கும் என விசேஷத்துக்கு ஒதுக்கிவிட்டோம். இந்த மிளகுக் காரம் உணவின் சுவைக்கு மட்டுமல்ல; மருந்தும்கூட. மூக்கு நோயில் இருந்து மூலநோய் வரை பல நோய்களை இது விரட்டும். மிளகில்தான் 'பைப்பரின்’ சத்து அதிக அளவில் உள்ளது. இந்த பைப்பரின்சத்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கும் மருந்து. ஒருவேளை சிலி மிளகாய் வராமல் இருந்திருந்தால், தமிழர் கள் உசேன் போல்ட் மாதிரி திடகாத்திரமாக இருந்திருப்பார்களோ, தெரியாது. குறைந்த பட்சம் அலர்ஜி, ஆஸ்துமா அதிகம் தாக்காத இனமாக இருந்திருப்போம். மிளகை, மிளகாயில் தொலைத்தது மாதிரி காய், கனிகளில் இழந்த வையும் ஏராளம்.  
'சி ஃபார் கேரட்; கேரட் நல்லது’ என்று சொல்லித்தரும் நம் கல்வித் திட்டம், அதைவிடப் பன்மடங்கு கண்களுக்கு நன்மை பயக்கும், கெரட்டினாய்டுகளைக் கொண்டிருக்கும்முருங் கைக் கீரையைப் பற்றியோ, பப்பாளியைப் பற்றியோ அதிகம் பேசுவது இல்லை. நம்கல்வித் திட்டத்தை வகுத்த மெகல்லே பிரபுவுக்கு அவர் ஊரில் விளைந்த கேரட் பற்றித்தான்
தெரியும். முருங்கைக் கீரை பற்றித் தெரியாது.விளைவு?  
தன் 'ஃபோலேட்’ சத்தின் மூலம் புற்றைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை சாதாரணக் கீரைகள். சிறு வயது முதல் உணவில் கீரையைச் சேர்த்துக்கொண்டால், செயற்கைக் கருத்தரிப்பு தேவை இல்லாதபடி விந்தணுக்களை உயர்த் தவும் உதவும். தமிழ் மருத்துவம் இதனை
'தாளி முருங்கை தளை தூதுணம் பசலை வாளி வறூ கீரை நெய்வார்த்துண்ணில் ஆளியெனவிஞ்சுவார் போகத்தில்...’ எனக் கீரைகளை வரிசைப்படுத்துகிறது. நம்புங்கள் எந்தப் பக்கவிளைவும் இல்லாத வயாகரா விளைவுகள் கீரைகளில் இயற்கையாகவே பொதித்துவைக்கப்பட்டு இருக்கிறது.
கீரை... 40 நாளில் வளரும் பொக்கிஷம். தினம் ஒரு கீரை சாப்பிடுவது ரத்தசோகை, மலச் சிக்கல், பலக் குறைவு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு எனப் பல நோய்க்கும் மருந்து. 'பொன்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு’ எனப் பெண்ணுக் கும்... 'போன கண்ணும் திரும்புமாம், பொன் னாங்கண்ணியினாலே’ எனக் கண்ணுக்கும் மருந் தாகும் உணவான பொன்னாங்கண்ணிக் கீரை இன்று எத்தனை பேர் வீட்டில் சமைக்கப்படு கிறது?
கீரையையும் மிளகையும் இன்ன பிற சத்துள்ள உணவுகளையும்சாப்பிட வைக்க நம் வீட்டுக் குழந்தைகளைக் கெஞ்சவும் மிரட்டவும் வேண்டியிருக்கிறது. ஆனால், அதே குழந்தைகள் அம்மாவின் கைபேசியை எடுத்து நேரே பீட்ஸா கடைக்குப் போன் செய்து, 'டபிள் சீஸ் மார்கரிட்டா வித் மெக்சிகன் பெப்பர்’ என ஆர்டர் செய்கிறது.
இது திடீரென நிகழவில்லை. கார்ட்டூன், கிரிக்கெட், பார்ஃபி பொம்மை, வீடியோ கேம்ஸ், செல்போன் ஆப்ஸ் என இளம் வயதினருக்குள் சத்தம் இல்லாமல் திணிக்கப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரத்தின் நீட்சி இது. கொஞ்சம் மெனக்கெட்டு நம் உணவைக் காப்பாற்றத் தவறினால் உங்கள் குழந்தைகள், 'ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்ககூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி?’ என எதிர் காலத்தில் கேட்கக்கூடும்!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment