Wednesday 17 April 2013

ஆறாம் திணை - 31

டாதொடையினால் பாடாத நாவும் பாடும்’ என்று சொன்ன சித்தருக்கு அறிவுசார் சொத்துரிமை பற்றியோ, காப்புரிமை பற்றியோ தெரியாது. இயற்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சியும், சமூக அக்கறையும், சார்பற்ற நிலையும் மட்டும்தான் இருந்தது. அதே ஆடாதொடை இலை Adhatoda vasica எனத் தாவரவியலாளர்களால் அறியப்பட்டு, அதன் தாவரச் சத்து thrombocytopeniaவுக்குப் பயனளிக்கும் என அறிந்த பின்னர், அறிவுசார் சொத்துரிமையும் காப்புரிமையும் வந்துவிட்டது. இப்போது மேற்கு உலகில் ஆடாதொடையின் சத்துக்களுக்கு நூற்றுக்கணக்கான காப்புரிமைகள் வாங்கப்பட்டுள்ளன.
ஒருபக்கம் தனியாக நம் நாட்டு சித்த, ஆயுர்வேத, யுனானி மூலிகைகளையும் மருந்துகளையும், மரபு வழியாக உள்ள அறிவுச் சொத்தையும் யாரும் கபளீகரம் செய்துவிடாதபடி நம் Traditional Knowledge Digital Library (TKDL) பாதுகாக்கிறது. இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேலான மூலிகை மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் கரன்ஸியில் புரளும் கம்பெனிகளோ, 'நாங்கள் உங்க செடியைப் பார்த்ததே இல்லை’ எனச் சொல்லிவிட்டு, அந்தச் செடியின் கூறுகளுக்கு ஆய்வகங்களில் மாறுவேடம் அணிவித்து புதியது போல் காட்டி காப்புரிமை வாங்குகின்றன.
இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்குச் சமீபத்தில் குட்டுவைத்தது உச்ச நீதிமன்றம். ரத்தப் புற்றுநோய்க்கான நோவார்டிஸ் நிறுவனத்தின் கிளீவாக் மருந்து நீண்ட நாட்களாகச் சந்தையில் இருந்துவந்தது. அதைச் சற்றே மெருகூட்டி, 'இது பழைய மருந்தல்ல... புதுசு’ எனச் சொல்லி, இன்னும் 20 வருடங்களுக்குக் காப்புரிமை கோரியது நோவார்டிஸ். 'இது வெறும் டப்பிங். ரீமேக்கூடக் கிடையாது’ என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த கிளீவாக் மருந்தைப் பயன்படுத்த மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். வெறும் 8,000 ரூபாய் செலவில் அதே ரத்தப் புற்றுநோய்க்கான உள்நாட்டு ஜெனரிக் மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை ஒழித்துக்கட்டி, அந்தச் சந்தையைப் பிடிப்பதற்காகவே நோவார்டிஸ் முயன்றது. நீதிமன்றம் இதைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், ரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் பேருக்குக் கடும் பாதிப்பு உருவாகியிருக்கும்.
'ஏனப்பா இந்தக் கொள்ளை விலை?’ எனக் கேட்டால், 'உங்களுக்கு என்ன தெரியும்? ஆராய்ச்சிக்கு எத்தனை கோடிகள் கொட்டியிருக்கிறோம்? எப்படி எங்களுக்குக் கட்டுப்படியாகும்? அதனால்தான் இவ்வளவு விலை. முடிந்தால் வாங்குங்கள். இல்லைஎன்றால் செத்துப்போங்கள்!’ என்கின்றன மருந்து நிறுவனங்கள். 1997, 2002-களில் நம் காப்புரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காப்புரிமையை வெகுஜன விரோதப் போக்காக மாற்றிக்கொண்டிருக்கிறது.
உண்மையில் விவசாய மண்டியில், விவசாயியிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளை லாபம் பார்க்கும் வணிகத்தின் வேறு வடிவம்தான் மருந்து நிறுவனங் கள் நடத்தும் காப்புரிமை வணிகமும்கூட. மக்கள் பொதுப் பணத்தில் நடைபெறும் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து, அவர்களின் ஆய்வுகளை விலைக்கு வாங்கி, அதை மருந்துக் கம்பெனிகள் சந்தைப்படுத்துகின்றன. அப்போது, கம்பெனியின் விற்பனைச் சிப்பந்தி குடிக்கும் டீ காசு முதல், மருத்துவரின் வெளிநாட்டுச் சுற்றுலா வரையிலும் ஆகும் அனைத்துச் செலவுகளும் 'ஆராய்ச்சிச் செலவாகவே’ கணக்கிடப்படுகின்றன. இப்படி எல்லாம் கொள்ளை லாபம் அடைவதற்காக விலையை உயர்த்திக்கொண்டே போனால், மக்களுக்கு சாமியார்களிடம் சரணடைவதையும் நோய் முற்றிச் சாவதையும் தவிர, வேறு வழி இல்லை.
காப்புரிமை பற்றிப் பேச ஆரம்பித்தாலே எல்லோருக்கும் மஞ்சளும் வேம்பும்தான் நினைவுக்கு வரும். களவுபோன நம் மரபுச் சொத்தைப் போராடி அதன் காப்புரிமையை மீட்ட கதையைப் பெருமையாகவும் பேசிக்கொள்வோம். ஆனால், அதே சமயத்தில் பாசுமதியைக் காப்பியடித்து உருவாக்கிய டெக்ஸ்மதி அரிசியைப் பற்றி பலருக்கும் தெரியாது. பாசுமதி வேறு; டெக்ஸ்மதி வேறு என்று சொல்லிவிட்டது அமெரிக்கா. இன்னும் கத்தரிக்காய் விதை முதல், கோயம்பேட்டில் உள்ள அத்தனை காய்கறி கள், கொல்லிமலையில் உள்ள அத்தனை மூலிகைகளுக்கும், அதன் கூறுகளுக்குக் காப்புரிமை வாங்கிவைத்துள்ளன பெரும் மருந்துக் கம்பெனிகள். இந்த பேட்டன்ட் யுத்தத்தில் அப்படியே மூலிகைக்குக் காப்புரிமை தராமல் மூலிகையின் கூறு களுக்குக் காப்புரிமை தருவதில் நிறுவனங் களுக்கு வருத்தம்தான். ஒருவேளை அப்படி ஒரு காலம் வந்தால், உங்கள் வீட்டு முற்றத்தில் முளைத்து நிற்கும் துளசிச் செடிக்கு நீங்கள் காப்புரிமை வாங்க வேண்டி வரும்.
பெரும் பன்னாட்டு நிறுவன ஆய்வுகளுக்குத்தான் நாம் காத்திருக்க வேண்டுமா? எங்கே போனது நம் ஆய்வு மனப்பான்மை? முன்னே சென்ற ஆமை யின் வழியில் நாவாய் செலுத்தி நாம் சென்ற கடல் பயணம், வானத்தில் இருந்து வந்த ஒளிக் கற்றையின் வீச்சைக்கொண்டு நாம் கணித்த வானியல், கூவிய பறவையின் ஒலியைக் கண்டு தூறல் வரும் என்று சொன்ன வேளாண் உத்தி, அடி நாக்கின் சுவையினைக்கொண்டு, அந்தத் தாவரத்தின் செய்கையைச் சொன்ன மருந்தியல் அறிவு என எத்தனையோ முன்னோடி அறிவியலைச் சொன்ன நாம், இப்போது ஏன் ஆய்வாளர்கள் ஆவதில்லை? கார்ப்பரேட் தொழிலாளியாக மாற மட்டுமே பயன்படும் இந்த மெக்காலேயின் கல்வி முறை காரணமா? அறம் சார்ந்த வணிகம் சாத்தியப்படாத வணிகச் சூழல் காரணமா? சமூகம்குறித்த சிந்தனை, உளப்பிறழ்வு நோயாக மட்டுமே பார்க்கப்படுவதா? சிந்திப்போம்...
- பரிமாறுவேன்...

1 comment:

  1. இன்றைய சூழ்நிலையில் 60% முதல் 70% வரை விலை குறைவாகக் கிடைக்கும் ஜெனரிக் மருந்துகள் நமக்குக்கிடைத்த வரமே! அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும்!

    ReplyDelete